'நீட்' தேர்வை வைத்து நடத்தும் அரசியலை போல், பிளஸ் 2 தேர்வு குறித்தும், மாணவர்களை சுற்றி அரசியல் வலை சுற்றப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் சமாளித்து, உயர் கல்விக்கு வர வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, மத்திய அரசு அறிவிக்கும், எந்த ஒரு கொள்கை முடிவையும், அது மக்களுக்கு நன்மையாக அமைந்தாலும் ஏற்று கொள்ளக் கூடாது என்ற ரீதியில், சில அரசியல் கட்சிகளும், அமைப்பினரும் செயல்படுகின்றனர்.அந்த அடிப்படையில், இவ்வளவு நாட்களாக, 'நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக, அரசியல் செய்தவர்கள், தற்போது பிளஸ் 2 தேர்விலும் துவங்கியுள்ளனர்.நாடு முழுதும் கொரோனா அலையால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்பட, லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில், 12 வயது வரையிலான குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக, ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், மாணவ - மாணவியரை, ஒரே இடத்தில் இணைத்து தேர்வு நடத்துவதால், அவர்களுக்கு இடையே, கொரோனா தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் என, அஞ்சப்படுகிறது.
கட்டாயம்
பல மாணவ - மாணவியர் தங்கள் குடும்பத்தில், ஒருவரை கொரோனாவில் இழந்துள்ளனர். சில இடங்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகின்றனர். சில குடும்பங்களில் கொரோனா தொற்றால், வருவாய் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியாமல், மன அழுத்தத்தில் மாணவர்கள் உள்ளனர். பல மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' கூட பயிற்சி பெற முடியவில்லை. இப்படி, மாணவர்களுக்கு பல்வேறு வகை பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து மாணவர்களாலும் பொது தேர்வை எழுதி, மற்ற மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற முடியாத சூழல் உள்ளது.
இதன் காரணமாகவே, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொது தேர்வை ரத்து செய்து, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்திலும், இன்று வழக்கு விசாரிக்கப்படுகிறது.
தேசிய அளவில் எதிர்க்கட்சியாகவும், தமிழகத்தில் ஆளுங்கட்சி கூட்டணியிலும் உள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவும், பிளஸ் 2 பொது தேர்வை ரத்து செய்ய, சி.பி.எஸ்.இ.,க்கு பரிந்துரைத்துள்ளார். 'மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்' என, கூறியுள்ளார்.
இந்நிலையில், எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடும் சில தமிழக கட்சிகளும், அமைப்பினரும், பிளஸ் 2 தேர்வு விஷயத்திலும், அரசியல் விவாதங்களை துவங்கியுள்ளனர்.
அத்துடன், பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என, மாணவர்களின் உயிருடன் விளையாடும் வகையில், கருணையில்லாமல் குரல் கொடுத்துள்ளனர். 'தேர்வுகள் மாணவர்களை மனதளவில் பாதிக்கும்; சமநிலை இருக்காது' என்று கூறி வந்தவர்கள், தற்போது, பிளஸ் 2 தேர்வை, மத்திய அரசு ரத்து செய்திருப்பதை, 'நுழைவு தேர்வை கொண்டு வரும் மறைமுக முயற்சி' என, அரசியல் காழ்ப்புணர்ச்சி கருத்துகளை விதைத்துள்ளனர்.
மறைமுகம்
பிளஸ் 2 பொது தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்பவர்கள், பொது தேர்வை ரத்து செய்ய, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குரல் கொடுத்ததை எதிர்க்காதது ஏன்? பிரியங்காவும் நுழைவு தேர்வை திணிக்க மறைமுகமாக முயற்சிக்கிறாரா? அப்படியென்றால், நுழைவு தேர்வை எதிர்க்கும் கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில்தான் காங்கிரசும் உள்ளது. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவரா, பிரியங்காவுக்கு எதிராக குரல் கொடுப்பரா என்ற, கேள்வி எழாமல் இல்லை.
உயிருடன் விளையாட்டா?
தமிழகத்தை பொறுத்தவரை, 8.5 லட்சம் பேர், பொது தேர்வு எழுதும் நிலையில், அவர்களில் 7,000 பேர் மட்டுமே, நீட் நுழைவு தேர்வு வழியே, மருத்துவ கல்லுாரிகளில் சேர்கின்றனர்.
மற்ற, 8.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நுழைவு தேர்வு எதுவுமின்றி, இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், பிளஸ் 2 தேர்ச்சி அடிப்படையில் சேர்கின்றனர்.
எனவே, பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தால், இந்த லட்சக்கணக்கான மாணவர்கள், கொரோனா பாதிப்பு இல்லாமல், உயர் கல்விக்கு செல்ல வாய்ப்புள்ளதை, கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், 7,000 மருத்துவ மாணவர்களுக்கு, நீங்கள் நுழைவு தேர்வு நடத்துவதால், எட்டு லட்சம் பேருக்கு, நாங்கள் பொது தேர்வு நடத்துவோம் என்பது, லட்சக்கணக்கான மாணவர்களின் உயிருடன் விளையாடும் போக்காகவே பார்க்கப்படுகிறது.
நடவடிக்கை
தமிழகத்தில் தற்போது, சட்டசபை தேர்தலோ, லோக்சபா தேர்தலோ இல்லாத நிலையில், மாணவர்களை வைத்து, குழப்பமான தேர்வு அரசியல் தேவையா என்பதை, ஓட்டு அரசியலில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
வலையில் சிக்காமல்..
.
கொரோனா தொற்று பாதிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பிரச்னை, ஊரடங்கு, பொருளாதார இழப்பு, வேலைவாய்ப்பின்மை, தனிநபர் வருவாய் குறைவு, அரசின் நிதி பற்றாக்குறை என, பல பிரச்னைகளை, மத்திய, மாநில அரசுகள் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளன.
இந்த நேரத்தில், புதிதாக அமைந்துள்ள அரசும், அதன் அதிகாரிகளும் சரியாக திட்டமிட்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, அரசியல் சாயங்களுக்கும், தங்களை சுற்றிய குறுகிய கொள்கை சித்தாந்தவாதிகளின் சூழ்ச்சிகளுக்கும் ஆளாகி, நிர்வாக ரீதியான குழப்பமான முடிவுகளையும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் முடிவுகளையும், மாநில அரசு எடுத்து விட வேண்டாம். ஓட்டு அளித்தவர்கள், ஓட்டு அளிக்காதவர்கள் என, அனைத்து தரப்பினரின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறந்த உடல்நலத்துடன் கூடிய, இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே, நடுநிலையாளர்களின் எண்ணங்களாக உள்ளன.
வீட்டில் வைத்து தேர்வு
தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்றால், பொது தேர்வை ரத்து செய்து விட்டு, சத்தீஸ்கர் மாநிலம் போல், வீட்டில் இருந்தே மாணவர்கள், புத்தகத்தை பார்த்து எழுதும் வகையில், 'ஆன்லைன்' தேர்வுகளை நடத்தலாம். தமிழகத்தின் இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு கூட, இந்த வகை தேர்வுதான் தற்போது நடத்தப்படுகிறது.
எனவே, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் வகையில், வினாக்களை சிந்தித்து, பதில் எழுதும் வகையில் தயாரிக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முடித்து, விடைத்தாள்களை பெறலாம்.
இன்னொரு வகையில், ஆன்லைனில் கற்றல் திறனை, பல வகை வினாத்தாள் வழியே மதிப்பிடலாம். ஏற்கனவே நடத்திய மாதிரி தேர்வு, திருப்புதல் தேர்வு மற்றும் மாதிரி பொது தேர்வு அடிப்படையிலும் மதிப்பெண் நிர்ணயிக்கலாம்.அதை விட்டு, அனைத்து மாணவர்களையும் அழைத்து, பொது தேர்வு நடத்த வேண்டும் என்பது, கொரோனா காலத்துக்கும், உயிர் பாதுகாப்புக்கும் ஏற்றதாக இருக்குமா என்பதை, முதல்வர் ஸ்டாலின் அரசு பகுத்தாய்ந்து முடிவெடுக்க வேண்டும் என, மருத்துவ வல்லுனர்களும், நடுநிலையாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment