Tuesday, June 1, 2021

'ஒன்றிய'த்தில் ஒளிந்திருக்கிறதா பிரிவினை சிந்தனை?

 சமீப காலமாக, டில்லியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்யும் அரசை, தமிழ்நாட்டுத் தலைவர்கள் 'ஒன்றிய' அரசு என்று அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


பேச்சில் மட்டுமல்ல; தமிழக ஆட்சித் தலைவர்களின் அலுவல்பூர்வமான அறிக்கைகளிலும் 'ஒன்றிய' ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அது என்ன 'ஒன்றிய' அரசு?'மத்திய' அரசு தெரியும். 'மைய' அரசு தெரியும். கொஞ்சம் தமிழ் கற்ற புலவர்கள் 'நடுவண்' அரசு என்று அதையே சொல்வார்கள். ஆனால், திடீரென்று இப்போது ஏன் இந்த புதிய 'ஒன்றிய' என்ற பயன்பாடு?

பல செய்திகள் இந்த ஒரு சொல்லுக்குள் ஒளிந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஒன்றியம்,  பிரிவினை சிந்தனை?


முதலில் 'மத்திய' என்ற பயன்பாட்டை மறுக்கவேண்டும். ஆங்கிலத்தில் 'சென்ட்ரல் கவர்மென்ட்' என்பதே, 'மத்திய அரசு' என்று தமிழில் சொல்லப்பட்டு வந்தது. அதுதான் இந்தியாவுக்கு முக்கியமான அரசு, அதிகாரங்கள் நிறைந்த அரசு என்ற பொருளில் இந்தப் பயன்பாடு இருக்கிறது. அதை நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றியதே 'ஒன்றியம்.'இந்தியத் திருநாடு என்பதை, பல மாநிலங்களின் கூட்டணி என்ற பொருளில் 'யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவோம். அது தான் நம் அரசியல் சட்டத்திலும் உள்ளது. அதில் 'யூனியன்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக 'ஒன்றியம்' என்பதைப் பயன்படுத்துகிறோம், இதில் தவறு என்ன என்ற கேள்வியை அரசியல்வாதிகள் கேட்பர்.


வேறு வேறு



ஒன்றியம் என்ற சொல் தப்பானதா என்ற கேள்வி எழலாம். அந்தச் சொல்லில் தப்பில்லை. அதன் பயன்பாட்டுக்கு பின், பிரிவினை சிந்தனையும், திராவிட அரசியலும் இருக்கிறது. அது எங்கேயெல்லாம் எப்படிப்பட்ட உள்ளர்த்தத்தோடு பயன்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
'யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா, யுரோப்பியன் யூனியன் - ஐரோப்பிய ஒன்றியம், யுனைடட் அராப் எமிரேட்ஸ் - ஐக்கிய அரபு அமீரகம், சோவியத் யூனியன் - யூனியன் ஆப் சோவியத் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்ஸ்' போன்ற பெயர்களில், ஒன்றியம் என்ற சொல்லின், வேறு வேறு பயன்பாடுகளைப் பார்க்கலாம். அங்கேயெல்லாம் பல்வேறு மாகாணங்கள், நாடுகள், பகுதிகள் ஆகியவற்றின் கூட்டமைப்பையே, இந்தப் பெயர்கள் சொல்கின்றன.

அதாவது, பல்வேறு தேசிய இனங்களின், மொழிக் குடும்பங்களின் கூட்டமைப்பாக இந்த நாடுகள் உருவாக்கப்பட்டதாக பொருள். ஒவ்வொரு தேசிய இனமும், தனித்தனியாக சுதந்திரமாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடு தான் அமெரிக்கா, அமீரகம், ரஷ்யா போன்றவை. தற்போது இங்கே பயன்படுத்தப்படும் 'யூனியன்' என்ற வார்த்தைக்கு உள்ளர்த்தம் என்னவென்றால், 'தனி தேசியமான நான், அதாவது தமிழ்நாடு, விருப்பப்பட்டு, ஒரு சவுகரியத்துக்காக உன்னோடு, அதாவது இந்தியாவோடு இருக்கிறேன்.


நானும், நீயும் சமம்

'எந்நேரமும் நான் உடைத்துக் கொண்டு தனியே போகலாம். சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்தது போல' என்பதாகத் தெரிகிறது. அதேபோல், 'நீ மேலே இருக்கும் 'மையமான' அரசு அல்ல. மேலான அதிகாரம் மிகுந்த அரசும் அல்ல. நானும், நீயும் சமம்.அதனால் தான் 'மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை, மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்காளர்கள் இல்லை' என்றெல்லாம், இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு தமிழக அமைச்சரால் பேச முடிகிறது.

ஒன்றியம் என்பது பிரிவினை சிந்தனையின் வித்து. தேசிய சிந்தனையும், தேசநலனுமே பெரிதென்று கருதும் தமிழ்நாட்டில், அதன் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பயன்பாடே 'ஒன்றியம்' என்ற சொல்.தமிழகம் என்றுமே இந்தியாவை, பல மாநிலங்களின் கூட்டணி என்று கருதியதில்லை. அப்படிப்பட்ட வரையறையை, எந்தப் பாடப் புத்தகமும், இதுநாள் வரை சொல்லிக் கொடுத்ததில்லை.

இது ஒற்றை இந்தியா. ஒருமித்த இந்தியா. ஒருதாய் மக்கள். பல மாநிலங்கள் இருக்கலாம். ஆனால், இது ஒரு நாடு. பல மொழிகள் பேசலாம், பல இனங்கள் வாழலாம். ஆனால், இது ஒரு தேசம்.இந்த 'ஒரு தேசம்' என்ற சிந்தனையை, இளைஞர்கள் மனதில் இருந்து, முளையிலேயே கிள்ளியெறியவே, 'ஒன்றியம்' என்ற சொல், பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 'வார்த்தை என்ன செய்துவிடும் என்று சும்மா இருந்து விட வேண்டாம்' என்று எச்சரிக்கிறார்கள் தேசிய சிந்தனையாளர்கள். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...