Tuesday, June 1, 2021

கதை வடிவில்..அர்த்தமுள்ள ஜோதிடம்....

 கொரோன பாசிட்டிவ்.. என்ற ரிசல்ட்டுடன் ஆம்புலன்சில் ஏறிய அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது!

அவரது மகன் முன்னால் ஏறி, கவலையோடு தலை தாழ்த்தி அமர்ந்தார்.
பின்னால் அவரோடு மனைவி இருக்க, நர்ஸ் லக்ஷ்மி.. ஆக்சிஜன் குடுவையை திருகி அந்த அமில காற்றை அவருக்கு செலுத்தினாள்.....
“ஜி.எச் ல பெட் லாம் ஃபுல்ல்லா இருக்கு சார். 10000 கொடு, முடிச்சி தர்றேன்” மகனிடம் கேட்டேன்.
“அவ்ளோ பணம் இல்லப்பா, நீ ஜி.எச் க்கு போ, பாத்துக்கலாம்”
“ஆம்புலன்சு க்கு 2500 இருக்குல்ல..?” நக்கலாக கேட்டேன்.
“ம்ம்” ஒற்றை எழுத்தில் பதில் வந்த்து..
ஜி.எச் அடைந்து, பின் பக்க கதவினை திறந்து விடும் போது தான் அவரது முகத்தை முழுதாய் பார்த்தேன்.. இவர் ஜோதிடர் அய்யப்பன் தானே.. பத்து வருடம் முன் பார்த்து இவரிடம் ஜாதகம் பார்த்து இருந்தேன்..
மகனின் தோளை தொட்டு “ எனக்கு மாரக தசை நடக்கல!, உனக்கு கர்ம தசையும் நடக்கல? கவலை படாதே, திரும்பி வந்துருவேன்..” சொல்லிவிட்டு மனைவியோடு உள்ளேறி போனார்..
அவரது மகன் என்னிடம் 2500 நீட்ட , “ வேணாம் சார், வெச்சுக்கோ.. தேவைப்படும். உள்ள யாராவது கேட்டா என் பேரு சொல்லு சார், டிரைவர் கணேசன்னு சொல்லு சார், எல்லாருக்கும் நல்லா தெரியும், எவனும் காசு கேக்க மாட்டான்.. உங்க அப்பாவ நான் முன்னாடி பாத்துருக்கேன், நல்ல மனுஷன் சார், சீக்கிரம் சரியாயிடும், நான் வரேன் சார்..” என்று புறப்பட்டேன்..
அடுத்த பயணம் ஒரு இறந்த உடலை சுமந்து வீடு வரை செல்வதாக அமைந்தது..
அய்யப்பன் ஐயா சொன்ன ஒரு வார்த்தை.. என்ன அது? மாரக தசை, கர்ம தசை.. ஒன்றும் புரியவில்லை,, ஆனால் அவர் சொன்ன விதமும், அந்த தன்னம்பிக்கையும் என்னை ஏதோ செய்தது.. தினமும் பல பேரை பார்க்கிறென். பீதியும், பயமும் பார்த்து பழகிய எனக்கு இந்த அனுபவம் புதுசு…
10 நாள் கழித்து,
படிகள் இறங்கி வரும் ஜோதிடர் அய்யப்பனை தூரத்தில் இருந்தே கண்டு கொண்டேன்.
ஓடி போய், நலன் விசாரித்து என்னுடைய ஆம்புலன்சில் ஏற்றி கொண்டேன்..
இந்த முறை மனிதர் மிக தெம்பாயிருந்தார்.. முன் சீட்டில் தான் உட்கார்ந்தார்.. வண்டி புறப்பட்டது..
“ சார், ஒரு சந்தேகம் கேக்கலாமா?”
“கேளுப்பா, உன்னை எங்கேயோ பார்த்து இருக்கேன்.. ஆனா சட்டுனு ஞாபகம் வரல”
“பத்து வருஷம் முன்ன, குழந்தை விஷயமா உங்க கிட்ட ஜாதகம் பாத்தேனுங்க, நீங்க சொன்ன மாறியே, எனக்கு 5 வருஷம் முன்னாடி புள்ள பொறந்துச்சிங்க, சொல்லலாம் னு வூட்டாண்ட வந்தேன், நீங்க வீடு காலி பண்ணீட்டிங்க, “
“அப்படியா.. சந்தோசம்.. உன் சந்தேகம் கேளு”
“ நீங்க அன்னைக்கு ஆஸ்பத்திக்குள்ள போகும் போது மாரக, கர்ம தசை னு ஏதோ சொன்னீங்க, தைரியமா போனீங்க, அப்படினா என்னங்க?”
“ அதுவா, சிம்பிளா சொன்னா, எனக்கு மண்டைய போடுற டைம் இன்னும் வரல! எம் புள்ளைக்கு.. எனக்கு கொள்ளி வைக்கிற டைம் வரல! மரண காலம் மாரக தசை, கர்ம காரியம் பண்ற காலம் கர்ம தசை அவ்ளோ தான், எல்லாமே டைம் தான்“ சிரித்தபடி சொன்னார்..🙏🏼
“அது எப்படி சார் உனக்கு தெரியும், நீ என்னா கடவுளா?”
பலமாக சிரித்தார்..
“உனக்கு எத்தனை வருஷம் கழிச்சி குழந்தை பொறந்துச்சி?”
“கல்யாணம் ஆகி 10 வருஷம் கழிச்சி, அதுவும் நீங்க சொன்ன மாதிரி சரியா அதே 2015 ல”
“ ட்ரீட்மெண்ட் பாத்தியா?”
“நிறைய பார்த்தேன், 10 வருஷம்.. நிறைய பணம் போச்சி”
“ ஏன் உனக்கு ட்ரீட்மென்ட் பாத்த உடனே குழந்தை பொறக்கல. எல்லாருக்குமே ஒரே மாதிரி மருந்து தானே, சிலருக்கு உடனே கேக்குது, பலருக்கு லேட் ஆகுது.. பலருக்கு கேக்கறதே இல்ல.. ”
“அது வந்து , அது வந்து”
“அந்த ‘அது’ தான் விதி, அந்த விதி தான் டைம், அந்த அத... கடவுள் தான் எழுதுறான், அந்த விதி சம்பவம் நடத்தறதுக்கு, தேவைப்படுறது ஒண்ணே ஒண்ணு தான் அது டைம்.. ‘அத’ ஒரு அளவுக்கு தெரிஞ்சிக்கற வழி தான் ஜோதிடம்.. “🙏🏼
“கடவுள் நல்லவர் தான, அப்போ எல்லாருக்கும் ஒரே மாதிரி நல்ல விதி எழுத வேண்டியது தானே..”
மீண்டும் மிக பலமாக சிரித்தார்..
“ உன் விதியை கடவுள் எழுதறாரு, அவரு வெறும் டைப்பிஸ்ட் தான்! அதுக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் உருவாக்கி கொடுக்கறது யாரு தெரியுமா?”
“யாரு?”
“நீ தான்.. ஒரு உதாரணத்துக்கு உன் கதைக்கே வரேன்,, உன் ஜாதகத்த பாத்துட்டு உனக்கு நான் என்ன பரிகாரம் பண்ண சொன்னேன்..”
“ 5 வருஷம் யார் கிட்டயும், எந்த எக்ஸ்ட்ரா காசும் வாங்காம ஆம்புலன்ஸ் ஓட்ட சொன்னீங்க.. முடிஞ்ச அளவுக்கு உதவ சொன்னீங்க..”
“ஏன் அப்படி சொன்னேன்னு என்னைக்காவது யோசிச்சியா?”
“இல்ல”
“நீ பாவத்த சம்பாதிச்ச வழியிலயே, அத தீர்க்கணும்.. அதுக்குதான், “
“எப்படி? எல்லாரும் வாங்கற மாதிரி தான நானும் வாழறேன், இதுல என்ன பாவம் இருக்கு.”
“நோயோட நடந்து கூட வர்ற முடியாத கண்டிஷன்ல இல்லாதவங்க தான், ஆம்புலன்ஸ் ல வருவாங்க! அவங்க இயலாமைய வெச்சு தான, பாவ காசு சம்பாதிச்ச! உன்னோட இயலாமைய பயன்படுத்தி, நீ சம்பாதிச்ச பாவ காசு செலவாகும்.. அது தான் கர்மா”
“அப்ப இந்த கொரனோ ல பாதிச்ச எல்லாரும் பாவம் பண்ணவங்க அப்படி தான சொல்ல வர்றீங்க”
“மனுஷன் மனுஷனுக்கு பண்றது தான் பாவம் னு இல்ல! இயற்கைக்கு எதிரா செயல்படுறதும் பாவம் தான்! மனுசனும், மத்த உயிரினங்களும் வாழறதுக்கு தேவையான அத்தனையையும் இயற்கை படைச்சிருக்கு! ஆனா மனுஷன் தான் மட்டும் சுகமா வாழணும் னு, இருக்குற அத்தனை வளத்தையும் அழிக்கும் போது, இயற்கை தன்னை பாதுகாக்க நடத்துற போராட்டம் தான் இந்த பேரழிவு!!. இருக்கும் மீதி வளங்களை நல்லவங்களுக்கு எடுத்து வெக்கிற வேலைய தான், இயற்கை இப்போது செய்யுது… இந்த பாடத்த இயற்கை அடிக்கடி நடத்த வேண்டிய சூழ்நிலை, மனுஷனால தான் ஏற்படுது!
எந்த விலங்கும், தனக்காக காற்றை மாசுப்படுத்தல.. காலாற நடந்து போகுது, தண்ணிக்காக சண்டை போடல, ஞாயித்து கிழமை பிரியாணி வேணும் னு அடம் பிடிச்சு கறிக்கடையில் நடக்கற புனித கொலைகளுக்கு முன்னால கூட்டம் போடல….”?
“புரியுது சார்”
“சக மனுசனுக்கும், இயற்கைக்கும் எந்த விதமான கெடுதலும் செய்யாதவன் இதை பத்தி கவலை பட வேண்டியதில்லை…”
“நோய் வந்தவன் என்ன பண்றது சார்? வராம இருக்க என்ன பண்றது? அதுக்கு உங்க ஜோதிடத்துல ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...”
“புரியுமா னு தெரியல, சொல்றேன்..
1, ஜாதகப்படி மிதுன துலா கும்ப லக்னமா இருந்தா ரொம்ப கவனமா இருக்கணும்.
2, 6ம், 8ம், 12ம் அதிபதி தசா நடந்தா, அல்லது அந்த அதிபதி கடக வீடு, விருச்சிக வீடு, மீன வீட்டில் இருந்து தசா நடந்தா கவனம் அதிகம்,
3, மிதுன லக்னமா இருந்தா பெற்றோர் உடல் நிலையிலும், கடக லக்னமா இருந்தா கணவன்/மனைவி உடல் நிலையிலும், சிம்ம லக்னமா இருந்தா, குழந்தைகள் உடல் நிலையிலும் ரொம்ப கவனம் வேணும்.
4, 6ம் அதிபதி புதனோடோ, கடகத்துல கன்னியில இருந்தா ரொம்ப கவனம்.
5, இன்னும் நிறைய விதிகள் இருக்கு, ஆனா நல்லா மருத்துவ ஜோதிடம் தெரிஞ்சவங்களுக்கு தான் அது புரியும்.. "
“கொஞ்சம் புரியுது சார்..”
“ கொரனோ எப்ப முடியும் சார்”
“சுயக்கட்டுபாடு அதிகம் இருக்கற நாடுகள் ல சீக்கிரம் முடிவுக்கு வந்துடுச்சி!?, இங்க என்னைக்கு அது வருதோ, அன்னைக்கு தான் முடியும், ஏன்னா வைரஸ்க்கு ஜாதகமும் கிடையாது.. பாகுபாடும் கிடையாது.. பரப்பறதும் நாம தான், பாதிக்கபடுறதும் நாம தான்.. தெரிஞ்சோ தெரியாமலும் செய்த எல்லா தப்புக்கும் மனப்பூர்வமாக சரி பண்ணனும், குறைந்த பட்சம் ஒரு மரமாவது வளர்க்கணும்”!!
அவர் வீட்டு தெருவில் ஆம்புலன்ஸ் நுழைந்த போது மனசு குழைந்தது..
இறங்கி இரண்டடி நடந்தவர், திரும்பி வந்தார்..
“நல்லா இரு,, முன்னாடி எல்லாம் வயசுல பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினோம், நல்லா இருந்தோம், இன்னைக்கு பெரியவங்க எல்லாம் அனாதை ஆசிரமத்துல இருக்காங்க. அவங்க புண்ணியத்துல ஆசிரமங்கள் நல்லா வளருது போல…” சொல்லி விட்டு நிதானமாக நடந்து உள்ளே போய் விட்டார்..
மகன் வந்து 2500 ரூபாய் நீட்ட,
“வேணா சார், எம் பேர சொல்லி 50 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடு சார்.. கணேசன் சார்”
ஆம்புலன்ஸ் அடுத்த நோயாளியை தேடி அதிகப்பட்ச கருணையோடு புறப்பட்டது……
வேறென்ன…
நல்ல மழை பொழியட்டும். கொடிய நோய் சீக்கிரம் விலக இறைவனை கூட்டாக பிரார்த்திப்போம்...
குறிப்பு:
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...