வாழ்க்கையில் நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம், சொத்து சேர்ப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருப்பார்கள்..
பணம் இருந்தால் மற்ற எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பது இவர்கள் எண்ணம்.
அல்லும்பகலும் அதற்காகவே அலைந்து கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் எப்போதுமே ஒரு வித பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
வாழ்க்கை முழுவதும் அதற்காகவே ஓடிக் கொண்டே இருப்பார்கள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய் வாய்ப்பட்டார்.
பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன் தலைமை வீரர்களை அழைத்து, "என் சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.
அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளை இட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் இதுவரை சம்பாதித்து வைத்த, விலை மதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக,"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கம் அளித்தார்.
1.என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒன்றை அறிந்து கொள்வார்கள்.
மருத்துவர்களால் எந்த ஒரு நோயில் இருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. யாரின் மரணத்தையும் அவர்களால் நிறுத்த முடியாது.
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.
அது சவக்குழி வரை மட்டும் தான்!
மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3.உலகையே வென்றவன் சாகும் போது கைகளில் ஒன்றும் இல்லாதவனாகப் போகிறான் என்று அறிந்து கொள்வதற்காக..
ஆம்.,நண்பர்களே..,
நாம் பூமியில் இருந்து ஒரு அணுவைக் கூட எடுத்துச் செல்ல முடியாது.
கொஞ்ச காலம் சொந்தம் கொண்டாடலாம்; கடன் வாங்கலாம்; உபயோகப்படுத்தலாம்; அனுபவிக்கலாம்;
ஆனால் அதை ஒரு நாள் திருப்பிக் கொடுத்தேயாக வேண்டும். இது தான் வாழ்க்கை முறை.......
No comments:
Post a Comment