Saturday, May 7, 2022

மேயரம்மாவை மதிக்காத மண்டல தலைவியர்!

 மேயரம்மாவை மதிக்காத மண்டல தலைவியர்


''கோடு போட்ட நோட்டு தெரியும்... கோடு போட்ட ரோடு தெரியுமாங்க...'' என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''எங்கவே இந்த கூத்து...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''மதுரையில பல இடங்கள்ல, நெடுஞ்சாலைத் துறையினர் புதுசா ரோடு போட போறாங்க... இதுக்காக, ரோடுகள்ல கம்பியால சுரண்டியது மாதிரி கோடு
போட்டிருக்காங்க...

''பெரியார் பஸ் ஸ்டாண்ட், பழங்காநத்தம் பைபாஸ் ரோடு, திருநகர், திருப்பரங்குன்றம்னு பல ஏரியாக்கள்லயும் இப்படி கோடு போட்டிருக்காங்க...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'பழைய ரோட்டை பெயர்த்து எடுத்துட்டு தான், புதுசா ரோடு போடணும்'னு தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு போட்டார்...

''ஆனா, மதுரையில லேசா ஒரு கோடு மட்டும் போட்டுட்டு, அது மேல புதுசா ரோட்டை போட்டு, கணக்கை முடிக்க பார்க்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையா புலம்புதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்டத்துல ஒன்பது சட்டசபை தொகுதிகள் இருக்கு... தி.மு.க., சார்புல, மூணு தொகுதிக்கு ஒருத்தர் வீதம், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், எம்.எல்.ஏ., வைரமணி, காடுவெட்டி தியாகராஜன்னு மூணு மாவட்டச் செயலர்கள் இருக்காவ வே...

''இதுல, மகேஷ் மாவட்டம் தவிர, மற்ற இருவரது மாவட்டங்கள்ல நடக்கிற ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை டெண்டர்கள்ல, மாவட்ட மூத்த அமைச்சரின் வாரிசு தான் கோலோச்சுதாரு...

''அட, தொகுதி வளர்ச்சி பணிகளை கூட எம்.எல்.ஏ.,க்களால சுதந்திரமா செய்ய முடியலை வே... எல்லாத்துலயும் அமைச்சரின் வாரிசு ஆஜராகிடுதாரு... அதேநேரம், இதெல்லாம் அமைச்சருக்கே தெரியாதுன்னும் ஒரு தரப்பினர் சொல்லுதாவ...'' என்றார்,
அண்ணாச்சி.டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'நேருக்கு நேராய் வரட்டும்... நெஞ்சில் துணிவிருந்தால்...' என்ற எம்.ஜி.ஆர்., பாடலை ரசித்தபடியே, ''மதிக்கவே மாட்டேங்கறான்னு புகார் பண்ணியிருக்காங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், குப்பண்ணா.

''யாருன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கோவை மாநகராட்சியில, மொத்தம் அஞ்சு மண்டல தலைவர்கள் இருக்கா... இதுல, மேயரம்மா கல்பனாவுக்கும், ரெண்டு சீனியர் மண்டல பெண் தலைவர்களுக்கும் இடையில, 'ஈகோ' யுத்தம் ஓடிண்டு இருக்கு ஓய்...

''மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியிடம், 'அவா ரெண்டு பேரும் என்னை கொஞ்சமும் மதிக்க மாட்டேங்கறா... அவா மண்டலங்கள்ல நடக்கற நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்க மாட்டேங்கறா... நீங்க கொஞ்சம் சொல்லி வையுங்கோ'ன்னு மேயரம்மா புகார் பண்ணியிருக்காங்க ஓய்...

''இதுல ஒரு மண்டலம், ஆளுங்கட்சி மாவட்டச் செயலரின் ஆத்துக்காரம்மா, இன்னொருத்தங்க மேயர் சீட்டுக்கு ஆசைப்பட்டு ஏமாந்தவங்க... இதனால, ஜூனியரான மேயரை கண்டுக்காம இருக்காங்க ஓய்...'' என குப்பண்ணா முடிக்கவும், அவரது மொபைல் போன் ஒலித்தது.
அதை எடுத்தவர், ''இளஞ்செல்வி, மீனா எல்லாம் வந்துட்டாளா... இதோ கிளம்பிட்டேன்...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

**********


பதிவுத்துறை வருகை பதிவேட்டில் 'பலே' மோசடி!





''முறைகேடு செய்றதுல சாதனையே படைக்காரு வே...'' என, டீக்கடை பெஞ்சை மேல் துண்டால் தட்டியபடியே அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஊழல்ல சாதனையா... மேல சொல்லும் ஓய்...'' என ஆர்வமானார், குப்பண்ணா.

''ஈரோடு கொடுமுடி ஸ்டேஷன் எஸ்.ஐ.,யா, சமீபத்துல வந்தவரது முறைகேடு பட்டியல் ரொம்ப நீளமா இருக்கு... இவர், பெருந்துறையில இருந்தப்ப, கஞ்சா வியாபாரியிடம் பணம் வாங்கியது
பத்தி, 'ஆடியோ' வெளியாகிட்டு வே.
..
''இதுல சிக்கித்தான் கொடுமுடிக்கு துாக்கி அடிச்சாவ... அதுக்கும் முன்னாடி, கொடுமுடி நெடுஞ்சாலை ரோந்து வாகன பணியில இருந்தாரு வே... அப்பவும் பண விவகாரத்துல சிக்கி, பெருந்துறைக்கு மாத்தினாவ...

''அதுக்கும் முன்ன, அரச்சலுார் தனிப்பிரிவுல இருந்தப்ப, ரேஷன் அரிசி கடத்தல் ஆட்களோட நெருக்கமா இருந்திருக்காரு வே...

''இப்படி எங்க போனாலும், 'கட்டிங்'லயே கண்ணா இருக்கிற எஸ்.ஐ.,க்கு கருணை காட்டி ஸ்டேஷன்லயே, 'டிரான்ஸ்பர்' போடுதாவ...

''துறை ரீதியா நடவடிக்கை எடுக்காததுக்கு ஏதோ, 'உள்குத்து' இருக்குன்னு, டிபார்ட்மென்ட்ல சந்தேகப்
படுதாவ வே...'' என்ற அண்ணாச்சி, ''அட, ஆறுமுகம் அண்ணாச்சி கூப்பிடுதாவ...'' என, மொபைல் போனுடன் ஒதுங்கினார்.

''உலக நாயகனை சந்திக்க கூப்பிட்டப்ப, நழுவிட்டாரு பா...'' என அடுத்த தகவலை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''யாருங்க அவர்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நடிகர் சங்க தேர்தல்ல வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் நாசர், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை சமீபத்துல சந்திச்சாங்க பா...

''இந்த சந்திப்புக்கு நடிகர் சங்க நிர்வாகியும், தமிழக வீட்டுவசதி வாரிய தலைவருமான பூச்சி முருகனையும் அழைச்சிருக்காங்க... அவரோ, வெளியூர்ல இருந்து வர்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்க போகணும்னு சொல்லி, கமல் சந்திப்பை
தவிர்த்துட்டாரு பா...

''தி.மு.க., அரசை கமல் கடுமையா விமர்சிக்கிறதால, எதுக்கு வம்புன்னு பூச்சி முருகன் நழுவிட்டதா, நடிகர் சங்கத்துல பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''போட்டி போட்டு மோசடி செய்யறா ஓய்...'' என, கடைசி தகவலை கையில் எடுத்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''பதிவுத்துறையில சார் - பதிவாளர் ஆபீஸ்களை கண்காணிக்க, 55 மாவட்ட பதிவாளர் ஆபீஸ்கள் இருக்கு... இங்க வேலை பார்க்கற பலர், மாவட்ட பதிவாளரின் வீட்டு எடுபிடியா மாறிண்டு இருக்காளாம் ஓய்...

''குறிப்பா, கிருஷ்ணகிரிமாவட்ட பதிவாளர் அலுவலகத்துல, யாரும் ஆபீஸ் பக்கமே போறதில்லை... மாவட்ட பதிவாளரின் ஆத்து வேலையே கதின்னு கிடக்கா ஓய்...

''இவாளோட, 'அட்டென்டன்ஸ்' மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டுல இருக்கு... ஆத்துல வேலை சுறுசுறுப்பா நடந்தா, 'பிரசென்ட்' விழுமாம்... சொதப்பினா, 'ஆப்சன்ட்' போட்டுடுவாராம் ஓய்...

''உதவியாளர் ஒருத்தர் இது பத்தி ஐ.ஜி., ஆபீசுக்கு புகார் அனுப்பிட்டார்... ஆனா, அந்த உதவியாளரே வருகை பதிவேட்டில் மோசடி செஞ்சதா, இன்னொரு தரப்பு ஆதாரங்களை அனுப்பிடுத்து... 'ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வேட்டு வச்சுக்கறாளே'ன்னு, மேலதிகாரிகள் குழம்பிப் போய் கிடக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...