'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தின் துவக்க விழா, சென்னை அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது. திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வு நடத்தச் சென்றுள்ளார்.
பத்தாம் வகுப்புக்கு சென்ற முதல்வர், அங்கிருந்த ஆசிரியையிடம் தமிழ்ப் பாடம் நடத்தச் சொல்லியதுடன், அதைக் கேட்டு ரசிக்க மாணவர்களுடன் சேர்ந்து, பெஞ்சிலும் அமர்ந்துள்ளார். தமிழ் இலக்கணம் பற்றி பாடம் நடத்திய ஆசிரியை, 'தமிழில் உயிர் எழுத்துக்கள் எத்தனை?' என்று மாணவர்களிடம் கேட்டுள்ளார். பதில் சொல்லத் தெரியாமல், மாணவர்கள், 'திருதிரு'வென விழித்துள்ளனர்; பின், ஆசிரியையே அவற்றுக்குப் பதில் அளித்துள்ளார்.
நல்லவேளை... இந்தக் கேள்வியை முதல்வரிடமோ, கல்வி அமைச்சரிடமோ பள்ளி ஆசிரியை கேட்டு, அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை; இருவரும் தப்பித்தனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் நம் மாணவர்களின் கல்வித்தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை, இந்தச் சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களின் தமிழ் அறிவே, இந்த அளவுக்கு நாறிப் போயிருக்கும் போது, ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் சி.பி.எஸ்.இ., மாணவர்களின் தமிழறிவு, எந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.
'தமிழ் வாழ்க' என்று, 'போர்டு' எழுதி, அரசு அலுவலகங்களில் வைத்தால் மட்டும், தமிழ் வாழ்ந்திடப் போவது இல்லை. இப்போதிருக்கும் மாணவர்களில் எத்தனை பேருக்கு, தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி சொல்லத் தெரியும்? 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொன்னவர் யார்?' என்று கேட்டால், அவ்வையார் என்று பதில் சொல்ல முடியாமல், பல மாணவர்கள் விழிப்பர். ஹிந்தி படித்தால், பானி பூரி விற்றாவது பொழப்பு நடத்தலாம்; தமிழ் மட்டுமே படித்தால் அதுவும் முடியாது போகும் ஆட்சியாளர்களே!
'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு... வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று சொல்லி, தமிழர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிய காலம் மலை ஏறி விட்டது. 'மம்மி, டாடி' என்று தன் குழந்தைகள் அழைப்பதைக் கேட்டுத் தான், இந்தக் காலத்து தமிழ் தாய்மார்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்வது?
No comments:
Post a Comment