ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுத்துள்ள நிலையில், மற்றொரு மூத்த அரசியல் தலைவரான பரூக் அப்துல்லாவும் தவிர்த்துள்ளார். தோல்வி நிச்சயம் என்பதுடன், அரசியலுக்கும் முழுக்கு போட வேண்டியிருக்கும் என்பதே, இவர்கள் நிராகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், அடுத்த மாதம் 25ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ல் நடக்க உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி, பெரும்பாலும் உறுதியாக உள்ளது. மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பா.ஜ., பேசி வருகிறது.
லோக்சபாவுக்கு 2024ல் நடக்க உள்ள தேர்தலில், மிகவும் வலுவான பா.ஜ.,வை எதிர்த்து, அனைத்து எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பல கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதன் முன்னோட்டமாக ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது.
பரிந்துரை
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அரசியல் காரணங்களுக்காக இந்தக் கூட்டத்தில் பல கட்சிகள் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றாலும், மம்தா பானர்ஜி தன்னிச்சையாக அழைப்பு விடுத்ததால் கடும் அதிருப்தியில் உள்ளன. இந்த எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம், வரும் 21ல் நடக்க உள்ளது.
புதுடில்லியில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தின்போது, பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பரிந்துரைத்தனர்; ஆனால், அதை அவர் நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா; மஹாத்மா காந்தியின் பேரனான, மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. 'வரும்போது பார்க்கலாம்' என, கோபாலகிருஷ்ண காந்தி பட்டும்படாமலும் பதிலளித்தார்.இந்நிலையில், பரூக் அப்துல்லாவும் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
அரசியல் அனுபவம்
''ஜம்மு - காஷ்மீர் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் அங்கு வழிகாட்டுவது என் கடமை. எனக்கு இன்னும் சில ஆண்டுகள், அரசியல் வாழ்க்கை உள்ளது. அதனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இயலாது,'' என, பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு, மூத்த அரசியல் தலைவர்கள் மறுத்து வருவது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர், நீண்ட அரசியல் அனுபவம் உள்ள தலைவர்கள். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் வாயிலாக, தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்க அவர்கள் விரும்பவில்லை; அது ஒரு காரணம்.
மற்றொரு முக்கிய காரணம், அவசர அவசரமாக எவ்வித முன் ஆலோசனையும் நடத்தாமல், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விவாதிக்க வேண்டுமே என்ற காரணத்துக்காக தங்கள் பெயர்கள் கூறப்பட்டுள்ளதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
கூட்டத்தில் பல எதிர்க்கட்சிகள் பங்கேற்றாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஓட்டளிக்குமா என்ற சந்தேகம், இந்த தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
தோல்வி நிச்சயம் என்ற நிலையில், தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு, தாங்களே முடிவு தேடிக் கொள்ள இவர்கள் தயாராக இல்லை; அதுவே மிக முக்கிய காரணமாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment