Monday, June 20, 2022

அண்ணன்தம்பி பாசமாக உருமாறிப்போனது!

 எம்ஜிஆருக்கும், சிவாஜிக்குமான நட்பு துவக்கத்திலேயே எம்ஜிஆர் சினிமாவில் துக்கடா வேடமிட்ட போதும், சிவாஜி இரண்டும்கெட்டானாக நாடகங்களில் உதிரி பாத்திரங்கள், பெண் வேடமிட்டு பசியும் பட்டினியுமாய் திரிந்த காலத்திலேயே ஆரம்பித்து விட்டது!

தனக்கு கிடைத்த குறைந்த பணத்தை தனக்கே செலவழித்துக்கொள்ளாமல், யானைக்கவுனியில் தகரக்கொட்டகையில் குடியிருந்த காலத்திலேயே, இரவு சினிமா ஆங்கிலப்படங்களுக்கு கூட்டிப்போய் படம் பார்த்து விட்டு வரும் போது சேட்டு கடையில் பசி தீரும் மட்டும் சப்பாத்தி சாப்பிட வைத்து, பாதாம்பால் வாங்கித்தரும் எம்ஜிஆரின் ஈகை குணத்தின் மேல் அப்போதே சிவாஜிக்கு வியப்பு!
"வசதி வந்ததும் போட்டி போட்டு தர்மம் செய்தோம்! அதை விடுங்கள், அது எல்லோரும் செய்வது! தனக்கு போக தானம்! அதிலெல்லாம் வியப்பில்லை, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் கிடைக்கும் கொஞ்ச காசையும் நண்பர்களுக்கும், கஷ்டம் என்று கேட்டவர்களுக்கும் உதவினாரே ஆரம்ப கால எம்ஜிஆர், அவர் அங்கேதான் இமயமாக உயர்ந்து போனார்" இது பின்னாட்களில் எம்ஜிஆர் பற்றி சிவாஜி சொன்னது!
எம்ஜிஆருக்கு சிவாஜி அம்மாவும், சிவாஜி சாப்பிட்டபின்பே எம்ஜிஆருக்கு சத்யா அம்மா சோறிட்டதும் வரலாறு!
எம்ஜிஆரின் முதல், இரண்டாம் மனைவிகள் தங்கமணி, சதானந்தவதியின் திருமணம், துக்கம் இரண்டிலும் கணேசன் கூடவே இருந்தது போல 1952ல் நடந்த சிவாஜி கமலா திருமணத்தில் எம்ஜிஆர் தான் மாப்பிள்ளை தோழன்!
ராமாவரம் தோட்டத்தில் கட்டப்பட்ட சத்யா அம்மா சிலையை சிவாஜி திறந்து வைத்தும், அன்னைஇல்லத்தில் ராஜாமணி அம்மாவின் மறைவின் போது மூன்று நாட்கள் உடனிருந்து எல்லா சடங்கிலும் எம்ஜிஆர் பங்கேற்ற போதும்தான் "ராமு", "கணேசு" என இருந்த நட்பு மறைந்து, அண்ணன்தம்பி பாசமாக உருமாறிப்போனது!
கமலா அம்மா செய்யும், விரால்மீன் குழம்பை கொடுக்காமல் சாப்பிட்டு விட்டால், சின்ன குழந்தையாக வீடு தேடி வந்து சண்டை போட்ட திருடாதே காலத்து எம்ஜிஆருக்கு பயந்து கொண்டு, விரால்மீன் வந்த கையோடு சின்னவருக்கு போன் போட்டு, கமலாம்மா சாப்பாட்டுக்கு வரச்சொன்ன காலமெல்லாம் பாசமலர் காலம்!
சின்னவரும் போகும் போதெல்லாம், பாலக்காட்டு ஸ்பெசல் கருவாடுகளை தம்பிக்கு கொண்டு போய் கொடுப்பது வழக்கம்!
எம்ஜிஆர் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உயர்ந்த போதும், இந்தியாவிலேயே தலைசிறந்த நடிகன் தம்பி கணேசுதான் என்று போவோர் வருவோர், மேடைகள், பத்திரிகைகள் என்று முழங்கிக்கொண்டிருந்தார்!
சிவாஜி அமெரிக்காவிலிருந்து திரும்பிய போதும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக ஆசியாவிலேயே சிறந்த நடிகராக எகிப்தில் பரிசு பெற்று திரும்பிய போதும் நடிகர் சங்கத்தலைவராக எம்ஜிஆர் எடுத்த விழாக்கள் பிரம்மாண்டமோ பிரம்மாண்டம்!
"அவர் பொய்யாக, போலியாகவெல்லாம் நடிக்க மாட்டார்! பாசம் காண்பித்தால் முழுமையாகத்தான் காட்டுவார்! "மலர்ந்தும் மலராத" பாட்டும் "இதோ எந்தன் தெய்வம்" பாட்டும் உயிர்! "மாதவி பொன் மயிலாள்" பாட்டுக்கு ஒரு நடை நடந்து வருவேன்! அதை மட்டும் திரும்ப திரும்ப போடச்சொல்லி குழந்தை போல் கை தட்டி மகிழ்வார்! தில்லானா மோகனாம்பாள் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார் என்று அவருக்கே கணக்கு தெரியாது" பெருமிதத்தோடு சொன்ன சிவாஜி "அப்படிப்பட்ட எங்களை இந்த பாழாய் போன அரசியல்தான் பிரித்தது! அப்போது கூட எளிதில் உணர்ச்சிவயப்படும் நான்தான் அவரை தாக்கியிருப்பேன்! அவர் சிறு துரும்பு அளவுக்கு கூட என்னை தாக்கிப்பேசியதில்லை" என்று உருகிப்போகிறார்!
1984ல் உடல்நலம் கெட்டு அமெரிக்கா புரூக்ளீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் எம்ஜிஆர், அவராகவே விரும்பி பார்க்க வேண்டும் என்றது சிவாஜியைத்தான்! கமலாம்மாவோடு எம்ஜிஆரை பார்த்த சிவாஜி கதறி அழ கடைசியில் எம்ஜிஆர் தான் சிவாஜியை தேற்ற வேண்டியதானது!
விடைபெறும் போது கமலாவை அழைத்த எம்ஜிஆர் "இந்த பய என்னை மாதிரி! இனி கருவாடெல்லாம் அவன் கண்ணிலேயே காட்டக்கூடாது! ஜாக்கிரதையா பாத்துக்க!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...