சென்னையில் பட்டப்பகலில் நடந்த வங்கிக் கொள்ளைக்கு போலீசும் உடந்தையாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளை அடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளில், 3.7 கிலோ நகைகள், அச்சிறுபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர், அவரது மனைவி உள்ளிட்ட மூவர், விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளனர்.சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பேங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது.
சதித் திட்டம்
இங்கு, 13ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் புகுந்து, ஊழியர்களை ஒரு அறையில் அடைத்தும், கட்டிப் போட்டும், 20 கோடி ரூபாய் மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.இது குறித்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையில், 11 தனிப்படை போலீசார் விசாரித்தனர். வங்கி பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் அந்த வங்கியின் ஊழியர் முருகன் மற்றும் அவரது பள்ளி நண்பர்கள் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள், முருகனின் கூட்டாளிகள், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, 28, சந்தோஷ், 30, ஆகியோரை கைது செய்தனர். அதன்பின், முருகன், 37, செந்தில்குமார், 30, சூர்யா, 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 28 கிலோ நகையை போலீசார் மீட்டனர்; இரண்டு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகியோரை, எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில், கொள்ளைக்கு மூளையாக முருகன் செயல்பட்டது தெரிய வந்தது.
தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் இவர்கள் கொள்ளைக்கு சதித் திட்டம் தீட்டி உள்ளனர். 'போலீசாரிடம் எப்படியும் சிக்கிக் கொள்வோம். அதனால், நகைகளை விற்று பணமாக்கி விட வேண்டும். அந்த தொகையை பயன்படுத்தி, ஜாமினில் வெளியே வர வேண்டும்' என்பது தான் இவர்களின் திட்டம்.
அத்துடன், சினிமா பாணியில் தொடர் கொள்ளையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்திருந்தனர். நகைகளை விற்கும் பணியில் சூர்யா மும்முரமாக செயல்பட்டுள்ளார். இதற்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தில், நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சா என்பவரை சந்தித்துள்ளார். அதேபோல, தன் நெருங்கிய தோழி வாயிலாக, விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரைச் சேர்ந்த இளையராஜா, 20, என்பவரிடம், 10 கிலோ நகையை பதுக்கியதும் தெரிய வந்தது.
இன்ஸ்.,சுக்கு தொடர்பு?
இவ்வழக்கில் தற்போது சிறையில் உள்ள சந்தோஷ், தன் மனைவி ஜெயந்தியிடம், 3.7 கிலோ நகையை கொடுத்துள்ளார். ஒருவேளை போலீசாரிடம் சிக்கிக் கொண்டால், நகையை விற்று தன்னை ஜாமினில் வெளியே எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். கொள்ளை வழக்கில் போலீசார் காட்டிய வேகம், ஜெயந்திக்கு பீதியை ஏற்படுத்தியது. இதனால், நகையை பாதுகாப்பான இடத்தில் வைக்க முடிவு செய்தார். சந்தோஷ் உறவினரான அமல்ராஜ், 52, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அவரது மனைவி இந்திராவும், ஜெயந்தியும், நெருங்கிய தோழியர். நைசாக பேசி, நகைகளை அமல்ராஜ் மனைவியிடம் ஒப்படைத்தார். இந்த விபரம் அமல்ராஜுக்கு தெரிய வந்ததும், 'நகைகளை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.
அதற்குள், அமல்ராஜ் மனைவியிடம் நகைகள் இருப்பதை, போலீசார் உறுதி செய்து விட்டனர். நகைகளை ஒப்படைக்க, அமல்ராஜ் காலதாமதம் செய்ததும் தெரிய வந்து உள்ளது.
இதனால், கொள்ளையில் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில், ஜெயந்தி உள்ளிட்ட மூவரிடமும் விசாரணை நடக்கிறது. மூவரையும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்; மேலும், ஒரு பெண் உட்பட சிலரையும் தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்க கார் கொடுத்த ஒருவரை, போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
No comments:
Post a Comment