'கல்வி' தொலைக்காட்சியின் செயல் அதிகாரி நியமன விவகாரம் தொடர்பாக, அமைச்சர் மகேஷ் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, சமூக வலைதளங்களில், தி.மு.க., மற்றும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களே கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாணவ - மாணவியருக்காக, 'கல்வி' தொலைக்காட்சி நடத்தப்படுகிறது. அதன் செயல் அதிகாரியாக மணிகண்டபூபதியை நியமித்து, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பரும், தென் மாவட்ட தொழிலதிபருமான ஒருவர், மணிகண்டபூபதியை நியமிக்கும்படி, அமைச்சர் மகேஷிடம் பரிந்துரை செய்துள்ளார்.
'மணிகண்டபூபதி, கல்வி துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர்' என கூறி, அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால், அவர் நியமன உத்தரவை பெறாமல், வெளியூர் சென்று விட்டார்.இந்த விவகாரம், பள்ளி கல்வி துறை வட்டாரத்தில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலிலும் சர்ச்சையை உருவாக்கியது. சமூக வலைதளங்களில், 'அமைச்சர் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும்' என, தி.மு.க., மற்றும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பதிவு விபரம்:
* காலை சிற்றுண்டி திட்டத்தை, 'அட்சய பாத்ரா' எனும் ஆர்.எஸ்.எஸ்., துணை நிறுவனத்திற்கு வழங்கிய பழனிசாமிக்கும், 'கல்வி டிவி'யை மணிகண்டபூபதிக்கு வழங்கிய உங்களுக்கும் என்ன வேறுபாடு. மகேஷ் பதவி விலக வேண்டும்
* பள்ளிக் கல்வித் துறையில் 2011 -21 வரை நடந்த சீர்கேட்டை சரிசெய்ய வேண்டிய தருணத்தில், தெரிந்தே ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவரை நியமிப்பது ரொம்ப தவறு; இது, திராவிட மாடலை சீர்குலைக்கும்
* தி.மு.க.,வினர் யாராவது அரசு வேலை கேட்டால், அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தான் நியமனம் என கூறும் அரசு, பெரிய பதவியில் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரை நியமித்திருப்பது நியாயமா.
* காங்., கட்சியின் அழிவிற்கு காரணம், கட்சியிலும் ஆட்சியிலும் ஆர்.எஸ்.எஸ்., 'சீலிப்பர் செல்' இருந்தது தான் என்பதை மறக்க வேண்டாம்n சொந்த கட்சியானாலும் எதிர்த்து நின்று குரல் கொடுத்த, தி.மு.க.,வினருக்கு முதலில் வாழ்த்துகள். இவ்வாறு சமூக வலைதளங்களில் பதவிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment