முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோர் மறைந்த நாட்கள், பயங்கரவாத எதிர்ப்பு நாள் என்றும், தீவிரவாத எதிர்ப்பு நாள் என்றும் அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம் மத்திய,- மாநில அரசு அலுவலக ஊழியர்கள், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பது, சடங்காக, சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த வரிசையில் இப்போது, 'போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி'யும் இடம் பிடித்துள்ளது. இதை அரங்கேற்றிஉள்ளது தி.மு.க., அரசு.
நாம் கிண்டல் செய்வதாகவோ, கேலி செய்வதாகவோ கருத வேண்டாம். நாம் சுட்டிக்காட்டி விளக்குவதன் உட்பொருளை புரிந்து, அதன்பின் இது கேலியா, கிண்டலா, நியாயமா, நேர்மையா, சரியா, தவறா, முறையா என்பதை தீர்மானியுங்கள்!திருடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, 'நாங்கள் இனி திருட்டுத் தொழிலை மேற்கொள்ள மாட்டோம்' என்று உறுதிமொழி எடுத்தால், அது நியாயம்; வரவேற்கத்தக்கது. திருடர்கள் அல்லாத, பொருட்களை பறிகொடுத்த அப்பாவி மக்கள் அனைவரும் ஒன்று கூடி, 'இனி நாங்கள் திருட்டுத் தொழிலை மேற்கொள்ள மாட்டோம்' என்று உறுதிமொழி எடுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரும், சிறைகளில் உள்ள தண்டனை குற்றவாளிகளும் ஒன்று கூடி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தால், அதில் பொருள் உண்டு. அப்பாவிகளான மத்திய-, மாநில அரசு அலுவலர்கள் ஒன்று கூடி, அந்த உறுதிமொழி எடுப்பதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? அதே நேரத்தில், தனியார் துறையில் பணிபுரிவோர் யாரும் இது போன்ற உறுதிமொழியை எடுப்பதில்லை.
போதைப் பொருட்களை பயன்படுத்து வோரும், அவற்றை 'சப்ளை' செய்வோரும், அவற்றை விற்பனை செய்வோரும், அதன் மொத்த வியாபாரிகளும் எடுக்க வேண்டிய, போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை, பள்ளி-, கல்லுாரி மாணவ - மாணவியரை எடுக்கச் செய்வதில், ஏதாவது அர்த்தம் உள்ளதா? சிந்தித்து பாருங்கள்... நாம் சுட்டிக் காட்டுவதில் ஏதாவது தவறோ, கோளாறோ உண்டா என்று. இதைத்தான் கேலிக்குள்ளாகும் உறுதி
மொழிகள் என்று குறிப்பிடுகிறேன்!
No comments:
Post a Comment