'ஆன்லைன் ரம்மி' விளையாட்டில், லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பலர், தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. அதனால், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, ஆளுங்கட்சியைத் தவிர, மற்ற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி வற்புறுத்தி, சில நிமிடங்களுக்கு ஒரு முறை, 'யு டியூப்' சேனல்கள் அனைத்திலும் தோன்றி, அடிக்கடி பிரசாரம் செய்து வருகிறார். ஆன்லைன் ரம்மியின் விளம்பரத் துாதராகவே அவர் மாறியுள்ளார். முன்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்தவருக்கு, தற்போது ஒரு கட்சியின் தலைவராக இருப்பவருக்கு, 'ஆன்லைன் சூதாட்டம்' தவறு என்றும், அதை பொருட்படுத்தாமல் ஆடுவோர், பணத்தையும், மன நிம்மதியையும், உயிரையும் இழப்பர் என்ற விஷயம் தெரியாதா என்ன? தெரிந்திருந்தும் அதைச் செய்கிறார் என்றால், ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் தரும் பணத்திற்கு விலை போயுள்ளார் என்றே அர்த்தம்.இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிப்பது முட்டாள்தனமான செயல், மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் செயல் என்பது, அவருக்கு புரியவில்லையா? இப்படிப்பட்ட விளம்பரங்கள் வாயிலாக வரும் பணம், பாவப்பட்ட பணம் என்பதை அவர் உணர வேண்டும்.
சரத்குமார், ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், மக்கள் நலன் விரும்பும் நடிகர் என்பது உண்மையெனில், ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதிலிருந்து, உடனடியாக விலக வேண்டும். இல்லையெனில், தமிழக மக்களின் ஏச்சு, பேச்சுக்களுக்கு அவர் ஆளாக நேரிடும்... ஜாக்கிரதை!
No comments:
Post a Comment