Thursday, August 18, 2022

பரிசுத்தமானவர்கள்என்பதை நிரூபியுங்க!

 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பான விவகாரம், தற்போது காங்கிரஸ் தலைமையை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த விவகாரத்தில், உண்மையில் சோனியாவும், ராகுலும் எந்தத் தவறும் செய்யவில்லை எனில், துணிச்சலாக வழக்கை எதிர்கொள்ளலாம். தவறு நடந்திருப்பதால் தான், வழக்கை முடிந்தவரை இழுத்தடிக்க முயற்சி செய்து வந்தனர்; ஆனால், தற்போது அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உண்மையில், சுப்பிரமணிய சுவாமி போன்ற ஒரு சிலர் உள்ளதால் மட்டுமே, சில பிரபலங்கள் செய்யும் தவறுகள், வெளியுலகத்திற்கு தெரிய வருகின்றன. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்திற்காக, காங்கிரஸ் கட்சியிடம் வாங்கிய கடன், ௯௦ கோடி ரூபாய்.

இந்தக் கடனுக்காக, அந்தப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்ட, 'அசோசியேட்டட் ஜார்னல்ஸ்' நிறுவனத்தின், ௯௯ சதவீத பங்குகளை, 'யங் இந்தியா' நிறுவனம் அபகரித்து விட்டது என்பதே குற்றச்சாட்டு. இந்த நிறுவனத்தின் இயக்குனர் சோனியா மற்றும் ராகுல். உண்மையில், நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது. இந்த குடும்பத்தினர் தான், நாடு சுதந்திரம் அடைந்த பின், பல ஆண்டுகள் நம்மை ஆண்டுள்ளனர். அப்படி இருக்கையில், இப்படி ஒரு தவறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தவறு செய்ய வில்லை எனில், அமலாக்கத் துறை சம்மன், சோதனை உள்ளிட்டவற்றுக்காக பயப்பட வேண்டிய தேவையில்லை; கட்சியினரைக் கூட்டி நாடு முழுதும் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை; நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்து, சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளலாம்.
காங்கிரசில் சிதம்பரம், அபிஷேக் சிங்வி, கபில் சிபல் என, பல சட்ட வல்லுனர்கள் உள்ள நிலையில், அவர்கள் வாயிலாக வழக்கை பிசுபிசுக்கவும் வைத்து விடலாம். இருந்தும், இந்த வழக்கு விவகாரத்தில், காங்., தலைவர்கள் ஆவேசப்படுவது ஏன் என்பது தான் தெரியவில்லை. எது எப்படியோ, உப்பை தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த வழக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு சோதனையாக அமைந்து உள்ளது.
இந்த சோதனையிலிருந்து மீண்டு வந்து, தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை சோனியாவும், ராகுலும் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் நேரு குடும்பத்தின் மீதான மதிப்பும், மரியாதையும் தொடரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...