எங்கே இருப்பாள் சரஸ்வதி
வெள்ளை தாமரை. வீணையின் நாதம், புலவர்களின் உள்ளம், வேதம் சொல்லும் வேதியர், தர்மத்தை உபதேசிக்கும் துறவிகள். குழந்தைகள் பேசும் மழலைமொழி. குயில் ஓசை, கிளியின் நாக்கு இவற்றில் சரஸ்வதி இருப்பாள். ஞானத்திற்கு அதிபதியான இவளை வழிபட்டால் அறிவு வளரும் என்கிறார் மகாகவி பாரதியார்.
மதுரையும் மறைக்காடும்
வேதங்கள் மனித வடிவில் வந்து சிவபெருமானை பூஜித்த தலம் நாகை மாவட்டம் திருமறைக்காடு. இக்கோயிலிலுள்ள அம்மனின் பெயர் யாழைப் பழித்த மொழியாள். அதாவது யாழின் இசையை விட இனிய குரல் கொண்டவள் என்பது பொருள். இதனால் இங்கு சரஸ்வதி வீணையை இசைக்க வெட்கப்பட்டு வீணையின்றி காட்சி தருகிறாள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சரஸ்வதியிடமும் வீணை கிடையாது. ஏனெனில் வீணை ஏந்தியபடி சியாமளையாக(வீணை ஏந்திய அம்பிகையை சியாமளை என்பர்)இங்கு அம்மன் அருள்வதாக ஐதீகம்.
'பூஜை' சரஸ்வதிக்கு மட்டுமே!
'பூஜை' என்னும் அடைமொழியுடன் சொல்வது சரஸ்வதி பூஜையை மட்டுமே. தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என யாரும் சொல்வதில்லை. பூஜை என்ற சொல் 'பூஜா' என்பதில் இருந்து வந்ததாகும். 'பூ' என்றால் 'பூர்த்தி'. 'ஜா' என்றால் 'உண்டாக்குவது'. அதாவது மனிதனை முழுமை பெறச் செய்வது சரஸ்வதி பூஜை.நான் என்னும் ஆணவ எண்ணம், மற்றவர் வளர்ச்சி கண்டு உருவாகும் பொறாமை குணம், வாழ்வு நிலையானது என்ற மாயை ஆகிய மூன்றும் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றை போக்கி ஞானத்தை உண்டாக்குவது பூஜை. சரஸ்வதியை வழிபடுவோர் ஞானம் பெற்று முழுமை அடைவதால் 'பூஜை' என சேர்த்துச் சொல்கிறோம்.
சரஸ்வதி கணத்தார் யார்
* சரஸ்வதியை இஷ்ட தெய்வமாக வழிபடுவோரை 'சரஸ்வதி கணத்தார்' என்பர்.
* சரஸ்வதிக்கு வாகனம் அன்னம். ஆனால் முதன் முதலில் சரஸ்வதியின் வாகனமாக மயிலை வரைந்தவர் ஓவியர் ராஜா ரவிவர்மா
* அன்னப்பறவை மீது சரஸ்வதி வலம் வருவதாக வேதங்கள் போற்றுகின்றன.
* வேலுார் மாவட்டம் தோட்டபாளையம் தாரகேஸ்வரர் கோயிலில் பிரம்மாவிற்கு எதிரிலுள்ள சன்னதியில் சரஸ்வதி அருள்புரிகிறாள்.
* ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் சரஸ்வதி தன் பெயரில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவனை வழிபட்டாள்.
வீணை வழிபாடு ஏன்
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் வீணையை இசைத்து அம்பிகையை வழிபடுவர். இதற்கு காரணம் தெரியுமா?
மகாகவி காளிதாசர் 'நவரத்னமாலா' ஸ்தோத்திரத்தில் பராசக்தியின் கையில் வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிவனின் பத்தினியான இவள் எப்போதும் சங்கீதத்தில் லயித்து இருப்பதாகவும், மென்மையான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும் கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை 'சியாமளா' என்பர். இசையால் அவளை மகிழ்விக்க வேண்டும் என வீணை வழிபாடு நடத்துகின்றனர்.மூன்றாம்பிறை ரகசியம்
ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் என்பதால் 'கலைமகள்' என்று சரஸ்வதியை அழைப்பர். 'கலை' என்றால் 'வளர்வது'. அதுபோல கல்வியும் வளர்ந்து கொண்டே செல்லும். அதற்கு கரை என்பதே இல்லை. மனிதன் தன் வாழ்நாளுக்குள் எல்லா கலைகளையும் கற்று தேர்ந்து விட முடியாது. இதையே 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்பர். சரஸ்வதியின் தலையிலும் சிவபெருமானைப் போல மூன்றாம் பிறை இருக்கும். இதற்கு காரணம் மூன்றாம் பிறையைப் போல சிறிதளவு கலைகளையே தான் அறிந்திருப்பதாகவும் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது என அடக்கமுடன் இருக்கிறாள். அறிஞராக இருந்தாலும் மனிதனுக்கு பணிவு அவசியம் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறாள்.
தொடரட்டும் நல்ல பழக்கம்!
மாணவர்களுக்கு வாரியார் சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள். ஆசிரியரிடம் கற்ற நல்ல விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். பணம் தேடுவதோடு நல்லறிவைத் தேடவும் படிப்பது அவசியம். திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் போன்ற நுால்களைத் தினமும் படியுங்கள். மாணவர்களுக்கு படிப்புடன் பக்தியும் அவசியம். அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறு பூசி கடவுளின் திருநாமத்தைச் சொன்ன பின்னரே அன்றாட பணிகளைத் தொடங்க வேண்டும்”. சரஸ்வதி பூஜை முதல் இந்த நல்ல பழக்கத்தை கடைபிடிப்போமா!
சரஸ்வதி பூஜித்த தலங்கள்
காஞ்சிபுரம் 1. காமாட்சியம்மன் 2. கச்சபேஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் 1. திருப்பூந்திருத்தி புஷ்பவனேஸ்வரர்2. திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கோயில்
திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம் 1. வேதாரண்யம் மறைநாதசுவாமி கோயில்2. குருகாவூர் வெள்ளாடைநாத சுவாமி கோயில்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்
மன்னராக வாழலாம்
மன்னர் திருமலைராயன் அரண்மனைக்கு காளமேகப்புலவர் வந்தார். ஆனால் அவைப்புலவரான அதிமதுரம் அவரை பொருட்படுத்தவில்லை. அவருக்கு ஆசனமும் தரப்படவில்லை. அவர் சரஸ்வதியை தியானிக்க அங்கு சிம்மாசனத்திற்கு இணையாக ஒரு ஆசனம் தோன்றியது. அதில் அமர்ந்து,வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப்பணி பூண்டுவெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளைஅரியா சனத்தில் அரசரோடு என்னைசரியா சனம் வைத்த தாய்எனப் பாடினார். மன்னரும், மக்களும் அதிசயித்தனர். இந்த பாடலை சரஸ்வதி பூஜையன்று பாடினால் மன்னருக்கு நிகரான வாழ்வு அமையும்.வாணி சரஸ்வதி ஈஸ்வரர்
இசையாக வெளிப்படும் போது கலைவாணியாகவும், அறிவாக வெளிப்படும் போது சரஸ்வதியாகவும் கலைமகள் இருக்கிறாள். படைப்புக்கடவுளான பிரம்மாவின் மனைவியராக இவர்கள் இருவரும் உள்ளனர். இந்த மூவரும் சிவனை பூஜித்த தலம் திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள மணக்கால் ஐயம்பேட்டை. இங்குள்ள சிவனின் திருநாமம் 'வாணிசரஸ்வதி ஈஸ்வரர்'.
**********************
நவராத்திரி :- இன்று ஒன்பதாம் நாள்
அனைத்து சக்தியையும் பெறசித்திதாத்ரி வழிபாடு!
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மஹா நவமியான 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக் காலம். இந்த நாளில் நோன்பிருந்து நைவேத்யங்களைப் படைத்து, கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி ஆடி, பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள், கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம்பொருள்பராசக்தியே!அம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னி ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது. கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட சரஸ்வதி பூஜையை கொண்டாடுவர்.இன்று அன்னையை, 'ப்ராஹமி' ஆக, சித்திதாத்ரியை வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவைகளை தரித்த கோலத்தில் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.சிவசக்தி வடிவமாகிய காமேஸ்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றம். அன்ன வாகனத்தில் இருப்பவள், வாக்கிற்கு அதிபதியாவாள்.ஞானசொரூபமானவள்; கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். சித்திதாத்ரி வடிவத்தை எடுப்பாள். எட்டு சித்திகளையும் சித்திதாத்ரி உள்ளடக்கியது என கூறப்படுகிறது.தாமரை மீது வசிக்கும் இவளை, அனைத்து சாதுக்கள், யோகிகள் மற்றும் சித்தர்கள் வணங்குகின்றனர்.'சித்தி' என்றால் சக்தி என்றும்; 'தாத்ரி' என்றால் தருபவள் என்றும் பொருள். 'சித்திதாத்ரி' என்றால் பக்தருக்கு அனைத்து சக்தியையும் தருபவள் என்று பொருள்.இவளை வழிபாடு செய்து, அனைத்து சித்திகளையும் பெற்று, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் சிவன் என்பது புராணம்.அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால் வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். இன்று தொழிற்சாலைகளில் உள்ள பெரிய இயந்திரங்களையும், வாகனங்களையும் அலங்கரித்து வழிபாடு நடத்துகின்றனர்.இந்த எளிய விழாவின் நோக்கம், 'வேலையை வழிபடு' என்றகோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.
9ம் நாள் நவராத்திரி வழிபாடு
படிக்கும் புத்தகங்களை அடுக்கி, பேனா, பென்சில் போன்ற எழுதும் உபகரணங்களையும் அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து பூஜிப்பது வழக்கம்.வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும் சந்தனம், குங்குமம் இடுவது வழக்கம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, சரஸ்வதி பூஜை அவசியம் செய்ய வேண்டும்.வண்டி வாகனங்களைத் துடைத்து, பொட்டு வைத்து, பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் கூட ஆயுத பூஜை நடத்துவர். அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம்முடைய கலை சார்ந்த கலைப் பொருட்களையும் வைத்து பூஜை செய்யலாம்.பச்சைக்கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போடுவது சிறப்பு வழக்கம். மல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.பாசிபயறு, சுண்டல், கற்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறிவகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம்.இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்த்தித்து, அஷ்டோத்திரம் சஹஸ்ரநாமம் சொல்லி, அம்பிகையைப் பூஜிக்கலாம்.பூஜை முடிவில், யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தருவது நல்லது.பக்தி ஒன்றே அம்பிகை நம்மிடம் வேண்டுவது; ஆடம்பர அலங்கார செலவினங்களை அல்ல.
பாடல்
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்துஉண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே!
சரஸ்வதி எனும் ஞானத்தின்
நவாம்சம்
வாகீஸ்வரி,
சித்ரேஸ்வரி,
துளஜா,
கீர்தீஸ்வரி,
அந்திரி,
கட சரஸ்வதி,
நீல சரஸ்வதி,
கிளி சரஸ்வதி,
குலைவாணி
- நவராத்திரி சக்தி ஆராதனை என்பது, மானுட சக்தியை துாண்டும், பெருக்கும் ஆராதனை ஆகும்.
ஆன்ம தரிசனம்
ஆயுதத்தின் உண்மையான பலனை உணரத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர் உள்ள பொருட்கள் மற்றும் உயிர் இல்லாத பொருட்கள் அனைத்திலும் இறைத்தன்மை உறைந்துள்ளது.வாழ்க்கையில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை வணங்குவதற்காகவும், தொழில்கள் சிறப்பாக நடந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வரும் காலங்களில் தொழில் சிறப்பாக நடப்பதற்காகவும் வேண்டி 9ம் நாள் சிவராத்திரி ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.நம்மிடமுள்ள மாயை திரையை, ஒருவித கருவியால் நீக்கி, உள்ளே கடவுளை ஆன்ம தரிசனம் செய்வதே கலை மகள் வழிபாடாகும்.
திருஷ்டி சிதறும்
சண்டிதேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை முடித்த பின்னர் பூசணிக்காய், குங்குமம் கலந்து வாசலில் உடைக்க வேண்டும்.பிறர் பார்வையின் மூலம், நம்மை தாக்கும் பொறாமை போன்ற திருஷ்டிகள், இந்த பூசணிக்காய் சிதறி தெறித்து போவது போல் சிதறி விடும். சிறிது நேரத்தில் அந்த உடைந்த பூசணிக்காயை, சாலையிலிருந்து சுத்தப்படுத்தி விடுவது நல்லது.
சரஸ்வதி பூஜை
நம் மனித சமுதாயம் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் தான் இயங்குகிறது. ஒன்று புலமை ஞானம்; இரண்டு தொழில் ஞானம்.புலமை பெறுவதும் ஒரு தொழில் தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை பூஜிப்பது, சரஸ்வதி பூஜை. நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை நம் வாழ்வில் ஏற்றுவாள். அறிவுடையார் எல்லாம் தனக்குரியர் என்பதற்கேற்ப, அறிவை பெற சரஸ்வதியின் வழிபாடு அவசியம்!
No comments:
Post a Comment