Sunday, October 9, 2022

கட்சிகளுக்கு பின்பாட்டு பாடும் ஆணையம்!.

 நிறைவேற்ற முடியாத, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள் தேர்தலின் போது வழங்குவதை தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.


இந்நிலையில், தேர்தல் ஆணையம் சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வெண்சாமரம் வீசியுள்ளது.

அதாவது, 'தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் அளிப்பது, அரசியல் கட்சிகளின் உரிமை; அதில், தேர்தல் ஆணையம் தலையிடாது' என்று கூறிவிட்டு, 'தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீர்கள்; அதற்கான நிதியை எங்கிருந்து பெற திட்டமிட்டுள்ளீர்கள்?' என, அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாம்.

கேட்கும் போதே வேடிக்கையாக தெரிகிறதா, இல்லையா? வாக்குறுதிகள் அளிப்பது அரசியல் கட்சிகளின் உரிமை என்றான பின், அந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீர்கள்; அதற்கான நிதியை எங்கிருந்து பெற திட்டமிட்டுள்ளீர்கள் என்று வினவுவது, முரண்பாடாக தெரியவில்லையா?

அரசியல் கட்சிகள், தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செலவாகும் தொகையை, நிச்சயமாக தங்களின் சொந்த நிதியில் இருந்து கொடுக்கப் போவதில்லை... ஒன்று, மக்களிடம் இருந்து வரி வருவாய் மூலம் கிடைத்த தொகையை செலவிடுவர் அல்லது உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்கி செலவிடுவர்.

இந்த விஷயத்தில் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? இதற்கு எதற்கு கடிதம்? ஆக, அரசியல் கட்சிகள் டுபாக்கூர் வாக்குறுதிகள் அளிப்பதற்கு, தேர்தல் ஆணையமும் ஒரு வகையில் உடந்தை என்பது தெளிவாக தெரிகிறது.

'வாக்காளர்களுக்கு இலவசமாக எதையும் வழங்கக் கூடாது. மக்களுக்காக மற்றும் நாட்டுக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறோம் என்பதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தர வேண்டும்' என்று, துணிச்சலாக சொல்ல அருகதை இல்லாத தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறதாம்.

வாக்காளர்களை அரசியல் கட்சிகள் ஒரு வகையில் முட்டாளாக்குகின்றன என்றால், தேர்தல் ஆணையமும் அதற்கு பின்பாட்டு பாடி, ஒத்து ஊதிக் கொண்டு இருப்பதை எந்த வகையில் சேர்ப்பது?

ஆக, இந்த நாட்டில் டுபாக்கூர் வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள் வழங்கி ஆட்சிக்கு வருவதை தடுக்கவோ, தவிர்க்கவோ தேர்தல் ஆணையத்தாலும் முடியாது; உச்ச நீதிமன்றத்தாலும் இயலாது என்பது, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதம் சமாச்சாரத்திலிருந்தே தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...