Friday, October 7, 2022

உறவு...

 மறு சுழற்சி, செய்யவும் மறு உபயோகப் படுத்தவும், குப்பைகளைக் குறைக்கவும் தெரிந்து கொண்டால் போதும் நம்முடைய சுற்றுப் புறம் அழகானதாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் உபயோகமான முறையில் பயன்படுத்தத் தொடங்குவதில் தான் அறிதலும் புரிதலும் இருக்கிறது.

மருந்து வாங்கிய புட்டி மருந்து காலியானவுடன் மண்ணெண்ணெய் விளக்காகிறது. காதறுந்த நெகிழி வாளி பூந்தொட்டியாகிறது. வாசித்து முடித்த பழைய நாளிதழ் மாவு அலசிக் கொட்ட, பொருட்களை பொதிய உதவுகிறது. நெகிழியையும் கண்ணாடியையும் மறு உபயோகப்படுத்த முடியாத நிலை வரும்போது அவற்றை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் குப்பைக்காரனிடம் விற்று காசாக்கிக் கொள்ளலாம். ஒரு போதும் பயன்படாப் பொருள் என வீதியில் வீசுவது அறிதலும் புரிதலுமற்ற அநாகரிகம்.
செத்த மீனை பதப்படுத்த தெரிந்து கொண்டால் சில நாட்கள் கழித்துக்கூட மீனாகப் பயன்படுத்த முடியும். அதிலும் ஆழ்ந்த அறிவு பெறும் போது உப்பிட்டுக் காய வைத்து பல நாள் உணவாக்க முடியும் கருவாடாக. பால்.. பாலிலிருந்து தயிர்..மோர்.. அதையும் கடைந்து வெண்ணெய்.. நெய் எல்லாம் இப்படியான மறு சுழற்சி குறித்து மானுடம் தெரிந்த, அறிந்த மகத்தான புரிதலை கொண்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் புதிதாகவே பயன்படுத்துவேன்.. பழைய பொருட்கள் பயன்படுத்துவது என்பது கௌரவக் குறைச்சல் என்ற மனோபாவத்தை குழந்தைப் பருவத்தில் இருந்தே இந்தப் புதிய தொழில் மயமாக்கல் சமூகம் கற்று வருகிறது. இந்த மனோபாவம் தான் சுற்றுப்புறத்திலும் வாழ்வியலிலும் குப்பைகளையும் இடர்பாடுகளையும் அதிகம் உற்பத்தி செய்து தருகிறது.
அண்ணன் டவுசரைத் தம்பி வளர்ந்த பிறகு அணிவதும், மாமனுக்கு சரியாகப் பொருந்தவில்லை என்ற சட்டையை மருமகனுக்கு அனுப்பி வைப்பதும் இப்போது மனித மனங்கள் ஏற்றுக் கொள்ளாத விசயமாகி விட்டது. ஒரே புத்தகத்தை பைண்டிங் செய்து அத்தனை சகோதரர்களும் பயன்படுத்திய காலத்தை வறுமை என்ற ஒற்றைச் சொல்லில் முடித்து விடுகிறார்கள். அது வறுமைத்தனமோ கஞ்சத்தனமோ இல்லை. அறிவார்ந்த பண்பாடு. ஒற்றை தொலைபேசி வீட்டில் இருந்த காலம் போய் ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி. ஒவ்வொருவருக்கும் ஒரு இரு சக்கரவாகனம். தனியறை. தனித்தனியாக எல்லாம் வைத்துக் கொள்ளும் காலம் நமதாகி இருக்கிறது. இது வளர்ச்சியான நாகரிகமான பண்பாடில்லை. குப்பைக் கலாச்சாரம். இந்தக் குப்பைக் கலாச்சார, மறு பயன்பாடு செய்யத் தெரியாத privacy maintaing culture மனித மனங்களில் தொற்றி உறவுகளையும் கெடுத்து வைத்திருக்கிறது.
என்னை என் நண்பர்கள் பலரும் கேட்கும் கேள்வி, "நீ ஏன் சண்டை போட்டவனிடமெல்லாம் கொஞ்சங்கூட யோசிக்காமல் மீண்டும் பழகுகிறாய்?" என்பது தான். "உடன் பிறந்த அண்ணன் தம்பிகளே சொத்துக்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். நண்பர்களிடமும் பழக்கமானவர்களிடமும் வரும் சிறு மனத்தாங்கல்கள் எல்லாம் வெறும் கருத்து மோதல்கள் தான். அதனைக் கடந்து செல்ல வேண்டும்" எனபது தான் என் பதிலாக இருக்கும். உறவுகளையும் மறு சுழற்சி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். சாகும் வரை அவர்களோடு தானே வாழ வேண்டியிருக்கிறது?. எத்தனையோ நண்பர்கள் சிறு கசப்பில் பிரிந்து, பின் உண்மையை உணர்ந்து பேசத் துடிப்பார்கள். அவர்களைத் தவிர்த்துச் செல்லாமல் இணைத்துக் கொள்ள வேண்டும்.
மறு சுழற்சி செய்யத்தெரியாததும், பழைய பொருட்களை உயர்வாக உணரத் தெரியாதுமான பாங்கு தான் முதியோர்களை மதிக்கத் தவறி அவர்களை useless என கவனிப்பாரற்று ஒதுக்கச் செய்கிறது. உறவுகளைப் புதுப்பித்தல் என்பது உயர்வான கலாச்சாரம். இங்கு நம்மைத் தவிர எவரும் நமக்கு எதிரியில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...