'புளுவா புளுவா எங்கடா போனே? எம் பொண்டாட்டி செத்தா எழவுக்குப் போனேன்!' என்பது சொலவடை. சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு, இந்தச் சொலவடைக்கு ஏற்றார் போலவே உள்ளது.
'சட்டசபை தேர்தலுக்கு முன் இருந்ததை விட கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களிடம் பெற்றுள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் எனக்கு உருவாகியுள்ளது. மழை பெய்தாலும், பெய்யா விட்டாலும், என்னையே குறை சொல்வர். நாள் தோறும் காலையில், கட்சியினர் எந்த புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான், கண் விழிக்கிறேன்; இது, சில நேரங்களில் என்னை துாங்க விடாமலும் செய்து விடுகிறது.
'எனவே, பொது மேடைகளில் பேசும் போது மட்டுமல்ல... அடுத்தவர்களிடம் பேசும் போதும், மிகமிக எச்சரிக்கையுடன் பேசுங்கள். நீங்கள் சொன்னதை வெட்டியும், ஒட்டியும் பரப்பி விடுவர். திராவிட மாடல் என்ற சொல்லே, நாட்டின் கவனத்தை ஈர்த்து விட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மதத்தை, ஆன்மிக உணர்ச்சிகளை துாண்டி விட்டு, அரசியல் நடத்த பா.ஜ., விரும்புகிறது' என்று, தி.மு.க., பொதுக்குழுவில் பேசியுள்ளார் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே...
உண்மையில் ஹிந்து மதத்தை எதிர்த்து, கிறிஸ்தவ மதத்தையும், முஸ்லிம் மதத்தையும் முன்னிறுத்தி, அரசியல் செய்து கொண்டிருப்பது, தி.மு.க., தான்; பா.ஜ.,வினர் எந்த இடத்திலும் மதத்தையோ, ஆன்மிகத்தையோ முன்னிறுத்தவில்லை. 70 வயதாகி விட்டால், பலருக்கு துாக்கம் வருவது கஷ்டம் தான். சொத்து பத்து இல்லாதவர்களுக்கே இந்த நிலைமை எனில், ஒன்றல்ல... இரண்டல்ல... பல்லாயிரம் கோடிகளை குவித்து வைத்திருக்கும் உங்களை போன்றவர்களுக்கு, துாக்கம் வராதது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.
உங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பொன்முடி, நேரு, வேலு ஆகியோர் பேசியதையே, பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிடுகின்றனர்; இதில், வெட்டவோ, ஒட்டவோ அவசியமே இல்லை. முதலில், உங்கள் கட்சிக்காரர்களின் நாவை அடக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் பங்கேற்ற மேடையிலேயே, உங்கள் கட்சி பிரமுகர் டி.ஆர்.பாலு, ஒரு தொண்டரிடம் தன் செருப்பை எடுத்து வரச்சொல்லி போட்டுக் கொள்கிறார். அவரே எழுந்து சென்று போட்டுக் கொண்டால், எத்தனை கிலோ எடை குறைந்து விடுவார்? இதுதான் திராவிட மாடலா... இந்த மாடல் தான் நாட்டையே கவர்ந்திருக்கிறதா? ஆக, திருந்த வேண்டியது எதிர்க்கட்சிகளோ, மற்றவர்களோ அல்ல... எல்லாம் நீங்களும், உங்களது கட்சிக்காரர்களும் தான்.
'லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளையும் கைப்பற்றி, தேசிய அரசியலில் முக்கிய சக்தியாக, தி.மு.க., உருவெடுக்க வேண்டும்' என்ற, உங்களின் உள்ளக்கிடக்கையையும், பொதுக்குழுவில் வெளியிட்டு இருக்கிறீர்கள். உங்கள் கட்சியினரின் தற்போதைய அடாவடிகள், குதர்க்கமான பேச்சுக்கள் நீடித்தால், ௪௦ என்ன... நான்கு தொகுதிகளில் கூட, கழகம் வெற்றி பெறுவது கடினம். பின், தேசிய அரசியல் என்பதெல்லாம் பகல் கனவாகவே அமையும்.
No comments:
Post a Comment