சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியிலும் 300-க்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டி ஐ.ஐ.டி.யில் ஒரே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருந்ததால் 80 பேரும் கிண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த நட்சத்திர ஓட்டலில் நடக்க இருந்த விழாக்கள் அனைத்தும் வருகிற 10-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நட்சத்திர ஓட்டலில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள மற்ற ஓட்டல் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment