ராவணனை அழிக்க, வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானர சேனைகள் ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும், பாறைகளையும் தூக்கி
வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தனர்.
அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, “ஆஞ்சநேயா, நான் சனீஸ்வரன்; இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு”
என்றார்.
அனுமனும் “என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளன. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது எனக்கு பெரிய பாவத்தை உண்டாக்கும் . எண் சாண் உடம்புக்கு
சிரசே பிரதானம். எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து, தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்றார். சனீஸ்வரனும் ஆஞ்சநேயரின் தலை மீது ஏறி அமர்ந்துகொண்டார்.
அதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கி வந்த அனுமன், சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி
நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்கு பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அனுமன் ஏற்றிய சுமை
தாங்காமல், அவரது தலையில் இருந்து சனீஸ்வரன் கீழே குதித்தார்.
“சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று அனுமன் கேட்டார்.
நான் தோல்வி அடைந்துவிட்டேன்” என்றார் சனீஸ்வரன்.
‘‘இல்லை.. தாங்கள் வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்கு பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் அனுமன்.
அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், “அனுமனே! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்ன வேண்டும் கேள்” என்றார்.
“ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை, உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார்.
எனவே ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பம் குறையும்.
No comments:
Post a Comment