மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், தி.மு.க., மேயர் இந்துமதியின் கணவர் பொன்வசந்த் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று அராஜகத்தில் ஈடுபட்டனர்; செய்தியாளர்கள் இருவர் காயமடைந்தனர்.

மதுரை மாநகராட்சியில், கடந்த கவுன்சில் கூட்டத்தில் முன்வரிசையில் இருக்கைகள் ஒதுக்காததை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்திலும், முன்வரிசையில் இருக்கைகள் ஒதுக்காத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா, கவுன்சிலர் சண்முகவள்ளி முன்வரிசையில் அமர்ந்தனர். அவர்களிடம் தி.மு.க., கவுன்சிலர்கள் லட்சிகாஸ்ரீ, தமிழ்ச்செல்வி, தங்கள் பெயர் ஒட்டிய இருக்கையில் அமர்ந்திருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிற தி.மு.க., கவுன்சிலர்களும், அவர்களை 'ரவுண்டு கட்டி' கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மேயரிடம் புகார் தெரிவிக்க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சென்றனர்; அவர்களுடன் செய்தியாளர்களும் சென்றனர். அப்போது, மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட ஆதரவாளர்கள், கதவை எட்டி உதைத்து பூட்டினர். அதனால் ஒரு செய்தியாளருக்கு தலையிலும், மற்றொருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.
விலை உயர்ந்த கேமரா கீழே விழுந்தது. இதை கண்டித்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின் கூட்டத்திற்கு வந்த மேயர், 'இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு உரிய இருக்கைகள் ஒதுக்கப்படும்' என தெரிவித்ததைத் தொடர்ந்து கூட்டம் தொடர்ந்தது.
அ.தி.மு.க., குற்றச்சாட்டு
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: மேயர் அலுவலக அறை பகுதிகளில் எப்போதும் மேயரின் கணவர், ஆதரவாளர்கள், உறவினர்களே உள்ளனர். மக்கள் பிரச்னை உட்பட அலுவலகம் சார்ந்த தகவல்களை கூட இவர்களை தாண்டி தான் மேயரிடம் சொல்ல வேண்டியுள்ளது.மாநகராட்சி நியமித்த அலுவலர்கள், உதவியாளர்கள் கூட இதுவரை மேயர் அலுவலகம் பக்கம் சென்றது இல்லை.
தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபடும் ஆதரவாளர்களை அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்து தி.மு.க., கவுன்சிலர்களும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல்வர் கவனத்திற்கு
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியினருக்கும் அதிக நேரம் பேச வாய்ப்பளித்து, நடுநிலையோடு நடந்ததாக சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டினார். அதுபோல மதுரை போன்ற முக்கிய மாநகராட்சிகளில் கவுன்சில் கூட்டம், நடுநிலையோடு நடப்பதில்லை. முதல்வர் இதுகுறித்து கவனித்து, ஆளுங்கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
தியேட்டரா?
கூச்சல், குழப்பத்தால் பட்ஜெட் கூட்டம் துவங்க தாமதமானதால், தி.மு.க., கவுன்சிலர்கள் 'அண்ணே... பேசாமல் நம்மளும் வெளிநடப்பு செஞ்சிருவோம்' என கிண்டல் செய்தபடி கிளம்பினர். கீழே அ.தி.மு.க.,வினர் தர்ணா செய்த நேரம், மேல்தளத்தில் இருந்த பார்வையாளர்கள், தியேட்டரில் படம் பார்க்க வந்தது போல் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ஒரே நாளில் கவுன்சில் கூட்ட மரபுகள் அனைத்தும் மீறப்பட்டன.

மேயர் கணவருக்கு மாநகராட்சியில் என்ன வேலை?
மாநகராட்சியில் எந்த பதவியையும் வகிக்காத மேயரின் கணவர் பொன்வசந்துக்கு, மேயர் அறைக்குள், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், செய்தியாளர்கள் வரக்கூடாது என தடுக்க யார் அதிகாரம் கொடுத்தது? செய்தியாளர்களை தடுக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
தன்னை 'ஆக்டிங்' மேயராக நினைத்து வலம் வரும் இவர் போன்றவர்களால் தான், மாநகராட்சி நிர்வாகம் செயல்பட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.தனக்கு அமைச்சர் தியாகராஜன் ஆதரவு உள்ளது என்ற தைரியத்தில், இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுவதாக சக கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment