துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள, குளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியையும், கம்ப்யூட்டர் ஆசிரியையும், மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசி, இரு தரப்பு மோதலை துாண்டியதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால்,
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அரசு சம்பளம் பெற்று, அரசு பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்பட்டதோடு, மாணவர்களுக்குள்ளும், கிராம மக்களுக்குள்ளும் விரோதத்தை உருவாக்கி, ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஆசிரியைகள் புற்றுநோய்க்கு சமமானவர்கள். 'குறிப்பிட்ட ஜாதி மாணவர்களை பள்ளியில் சேர்க்கக் கூடாது' என, சில ஆசிரியர்கள் கூறுவதாக சொல்லும், உதவி தலைமை ஆசிரியையிடம், 'எல்லாரும் சமம் தானே டீச்சர்' என்று கூறும் மாணவனின் பண்பு, ஆசிரியைகளுக்கு இல்லாமல் போனது, வேதனையாக உள்ளது.ஜாதி துவேஷத்தை, அப்பழுக்கற்ற மாணவர்களின் மனதில் விதைக்கும், இதுபோன்ற ஆசிரியைகள் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டனையும் பெற்றுத் தர வேண்டும். அப்போது தான், வருங்காலங்களில் பள்ளிகளில் இது மாதிரியான, ஜாதி, மத துவேஷங்கள் பரவாமல் தடுக்கப்படும். மகாகவி பாரதியார் இயற்றிய, 'ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...' என்ற கவிதையை மாணவர்களுக்கு போதித்து, அவர்கள் மத்தியில் ஜாதிய எண்ணங்கள் வளர விடாமல் தடுக்க வேண்டிய ஆசிரியைகளே, மோசமான செயலில் ஈடுபட்டிருப்பது வேதனை
அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற ஜாதிய துவேஷங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; அப்போது தான், நாடும், சமூகமும் உருப்படும்.
No comments:
Post a Comment