அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளை சந்திப்பது, சர்வ சாதாரணமான விஷயம். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடக்கும் போது, வேடிக்கை எதுவும் காட்டமாட்டார்கள்; அமைதியாகவே இருப்பர். தீர்ப்பு அளிக்கும் போது தான், தங்களின் புஜபல பராக்கிரமத்தை காட்டுவர். அந்தக் கலாசாரத்தை முதன் முதலில், 'இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது' என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்த போது, அவரின் இளைய மகன் சஞ்சய் துவக்கி வைத்தார். தீர்ப்பளித்த கோர்ட்டுக்கு உள்ளேயே தன் ஆதரவாளர்களுடன், -கட்சி தொ(கு)ண்டர்களுடன் புகுந்து, கோர்ட்டையே அதகளப்படுத்தி நிர்மூலமாக்கினார்.
அதேநேரத்தில், அ.தி.மு.க.,வினர் அணுகுமுறை வேறுவிதம். ஜெயலலிதாவுக்கு எதிராக, கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட போது, தமிழகம் முழுதும் ஐந்து பஸ்களை எரித்தனர். சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த, கோவை வேளாண் கல்லுாரி பஸ்சை, தர்மபுரியில் தீ வைத்து கொளுத்தியதில், மூன்று மாணவியர் பலியாகினர். தி.மு.க.,வினருக்கு எதிராக, ஊழல் வழக்குகள் எதிலும் கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்காததால், அவர்களது பராக்கிரமத்தை பார்க்கும் பேறு, தமிழக மக்களுக்கு கிட்டவில்லை. ஆனாலும், தி.மு.க.,வினர் பராக்கிரமத்தை அவ்வப்போது பிரியாணி கடைகளிலும், மசாஜ் பார்லர்களிலும் காண முடிகிறது.
இந்நிலையில், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை கைமாறிய வழக்கில், 'சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா' என, அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்., - எம்.பி.,யான ராகுல், அமலாக்கத் துறை விசாரணைக்கு தொடர்ந்து நான்கு நாட்களாக ஆஜராகினார். இதை வைத்து, காங்கிரஸ் கட்சி, புதிய
கலாசாரத்தை அரங்கேற்ற துவக்கியுள்ளது.நாடு முழுதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்களின் முன், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியில், பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரஸ் பெருந்தலைகள் கூடி, கூவி வருகின்றனர்.
'ஒரு குடும்பத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை, பொதுமக்கள் பிரச்னையாக கருத வேண்டும்' என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நேஷனல் ஹெரால்டுக்கும், ஹவாலா பணத்துக்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்? நாட்டிலுள்ள மக்களுக்கு, அந்த ஹவாலா பணத்தில், ராகுலும், சோனியாவும் பங்கு கொடுத்தனரா என்ன?
அரசியல்வாதிகள் மீதான லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் குறித்து, காவல் நிலையத்திலோ, கோர்ட்டிலோ விசாரணை துவங்கும் போதே, கட்சித் தொண்டர்கள் விசாரணை நடக்கும் இடத்தின் முன்கூடி நின்று கோஷமிட்டு, விசாரணையையே சீர்குலைக்க வேண்டும்; வழக்கை திசை திருப்ப வேண்டும் என்ற புதிய கலாசாரத்தை, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் இருந்து காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment