ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது.
ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.
மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும்.
மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.
தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.
ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
வாழ்க வளமுடன்! !
வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment