Tuesday, June 21, 2022

பிரிமணை.

 ஒரு காலத்தில் அதிகமாக புழங்கும் வார்த்தை "பிரிமணை" இப்போது காலப்போக்கில் வழக்கொழிந்து போய்விட்டது.

"பிரிமணை" என்றால், பானை முதலியன அடிப்பாகம் குமிழ் போன்ற வடிவில் உள்ள பாண்டங்கள் உருளாமல் வைப்பதற்கும், விறகடுப்பில் சமைத்த பாத்திரங்களில் பிடித்த கரி தரையில்
ஒட்டாமல் இருக்க முன்னோர்கள் கண்டுபிடித்தது தான் வைக்கோல் அல்லது தென்னை நாரால் செய்யப்பட்ட வட்ட வடிவிலான பீடமாகும்.
அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள். ஏனென்றால், சட்டியில் இருக்கும் கரி தரையில் ஒட்டி அசிங்கமாகிவிடும்.
பானை, சட்டி அசையாமல் இருக்கவும் இது பயன்படும். வட்ட வடிவத்தில் வைக்கோல் அல்லது தேங்காய் நாரில் வேயப்பட்ட தாங்கு பொருளில் இறக்கி வைப்பார்கள். அதுதான் பிரிமணை.
பெரும்பாலான பிரிமணைகள் எளிதில் கிடைக்கும் வைக்கோல் மூலம் கையால் பிணையப்படுகிறது. இதற்கு நீண்ட நெல் தாளான பொன்னி ரக தாள்கள் உகந்தது. ஐந்தாறு தாள்களை எடுத்து ஒப்புரவாக்கி கயிறு போல் திரிப்பார்கள். கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் அளவுக்கு திரித்தவுடன், கையில் கைப்பிடி அளவு கத்தையாக உதிரி வைக்கோல் எடுத்து வட்ட வடிவில் அமைத்து, திரித்த வைக்கோல் கொண்டு சுற்றினால் " பிரிமணை " தயார்.
தயிர், பால் போன்ற பொருட்கள் பூனைகளிடம் இருந்து பாதுகாக்க உறியில் கட்டி தொங்க விடுவார்கள்.
இன்று உறியின் இடத்தை குளிர் சாதனப் பெட்டி பிடித்துக்கொண்டு உள்ளது.
முன்னோர்கள் இயற்கையான முறையில் கிடைத்ததைக் கொண்டு நலமுடன் வாழ்க்கை நடத்தினார். இன்று வட்ட வடிவிலான எவர்சில்வர் மற்றும் பித்தளை கலவடை (பிரிமணை) இடம் பிடித்து உள்ளது.
மேலும், இன்று கிராமப்புறங்களில் விறகு அடுப்பு மெல்ல மெல்ல அழிந்து, எரிவாயு அடுப்பில் சமையல் செய்வதால் இதன் பயன்பாடு ஒழிந்து (கரி பிடிக்க வாய்ப்பில்லை) விட்டது எனலாம்...
காலங்கள் மாற, மாற, நாம் பயன்படுத்தும் பொருட்களும் மாறுவது மட்டுமல்ல, எத்தனையோ அழகான தமிழ் வார்த்தைகளையும், நினைவுகளையும், இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை...
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...