விடிய விடிய நடந்த மேல்முறையீட்டு மனுவில், அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என, அனைவரும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைக் கண்ட பன்னீர்செல்வம், இன்று நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்தி வைக்கும்படி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்காத பழனிசாமி, 'திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்' என பதில் அனுப்பினார்.
ஒ.பி.எஸ். தரப்பினர் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. முடிவில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து,நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று இரவே ஒ.பி.எஸ். தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.இ.பி.எஸ். தரப்பில், வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாரயணன், மற்றும் ஓ.பி.எஸ். தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பும், பொதுக்குழுவை நடத்த வேண்டும் என இ.பி.எஸ்., தரப்பும் விடிய விடிய வாதம் நடத்தினர். வாதம் அதிகாலை 4.00 மணிக்கு முடிவடைந்த நிலையில், 4.20 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.
பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை 10:00 மணிக்கு அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்க உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் அ.தி.மு.க., பொதுக் குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment