'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான, 'யங் இந்தியா' நிறுவனத்திற்கு கைமாறிய விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என, அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலிடம், சமீபத்தில் விசாரணை நடத்தியது. டில்லியில் அமலாக்கத் துறை நடத்திய இந்த விசாரணைக்கு ஆஜராகச் சென்ற ராகுல், ஏதோ தேர்தல் பிரசாரத்திற்கு செல்வது போல, தன் கட்சியினரையும் ஊர்வலமாக கூட்டிச் சென்று, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
அரசியலமைப்பு சட்ட விதி, 14ல், 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய, ஒரு பிரபலமான கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல், அமலாக்கத் துறை அலுவலகம் முன், தன் கட்சியினரை கூடச் செய்து, அவர்களை போராட்டம் நடத்தும்படி துாண்டியிருப்பது சரியல்ல.
ராகுல் இந்த, 'ஸ்டன்ட்' வாயிலாக, மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்க வில்லை. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போன்ற பிரபலங்களும், அமலாக்கத் துறை அலுவலகம் முன் நடந்த போராட்டக் கூத்தில் பங்கேற்றுள்ளது, காங்கிரஸ் மீதான மக்களின் நல்லெண்ணத்தை மாற்றியுள்ளது.
அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தால், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ராகுல் செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல. மொத்தத்தில், 'எப்படி இருந்த காங்கிரஸ் இப்படியாகி விட்டதே' என்று மக்களை எண்ண வைத்து விட்டார் ராகுல்.
No comments:
Post a Comment