ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆலோசிக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை நிறுத்த முயற்சித்துள்ளனர். அவரோ, 'ஆளை விடுங்க சாமி... உங்கள் ஆட்டத்திற்கு நான் வரலே'ன்னு சொல்லி, வெற்றிகரமாக, 'ஜகா' வாங்கி விட்டார். மஹாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய இருவரில் ஒருவரை வேட்பாளராக்கலாம் என்ற யோசனைக்கும் ஆதரவு இல்லை. மொத்தத்தில், ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகப் போய் விட்டது, தீதி மம்தாவின் பகீரத பிரயத்தனம்.
இந்தியாவில் மட்டுமே, ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஜனாதிபதியாக முடியும். முஸ்லிம் நாடுகளில், ஒரு ஹிந்து எந்த உயர் பதவிக்கும் வரவே முடியாது. இங்கே, மதச்சார்பின்மை, சமூக நீதி பின்பற்றப்படுவதால், ஜாதி, மதம், இனம் பார்த்து உயர் பதவிகள் வழங்கப்படுவது இல்லை. அதேநேரத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மாநிலங்களின் கவர்னர்களாக இதுவரை பதவி வகித்துள்ளனர்; ஆனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிகளில் யாரும் அமர்த்தப்படவில்லை.
தமிழக கவர்னராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அலெக்சாண்டர் பதவி வகித்த போது, நேர்மையான நிர்வாகம் நடந்தது. அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதியின், தில்லாலங்கடி வேலைகள், அலெக்சாண்டரிடம் செல்லுபடியாகவில்லை. அதேபோல, இப்போது கவர்னராக இருக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரியான, ஆர்.என்.ரவியும், திராவிடச் செம்மல்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
கவர்னர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சாணக்கியராக நடந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஜனாதிபதி பதவிக்கு அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல், படித்த நல்ல பண்பாளர்களை தேர்ந்தெடுத்தால், அந்த பதவிக்கு ஒரு கவுரவம் கிடைக்கும். ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன் போன்ற தேசிய சிந்தனையாளர்கள், ஜனாதிபதியாக பதவி வகித்த போது, நாடு பெருமை அடைந்தது.வி.வி.கிரி, பிரதிபா பாட்டீல் போன்றவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது, அந்த பதவிக்குரிய பெருமையை இழந்தது.
எனவே, புதிதாக வரப்போகும் ஜனாதிபதி, நம் நாட்டிற்கும், மக்களுக்கும் பெருமை சேர்ப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நபரை பிரதமர் மோடி தேர்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் இந்த விருப்பத்தை மோடி நிறைவேற்றுவார் என நம்புவோமாக!
No comments:
Post a Comment