மதுரைக்காரர்கள் ருசியான உணவைத் தேடி சாப்பிடுவதற்கு சளைக்காதவர்கள். கோயில்நகரம் என்றாலும் துாங்காநகர் என்பதும் மதுரைக்கும் பொருந்தும். நள்ளிரவில் பஸ்சை விட்டு இறங்கினாலும் சாப்பாடு கிடைக்கும் என்ற உத்தரவாதம் மதுரைக்கு உண்டு.
திடீர் காளான்களை போல முளைத்த 'ஷவர்மா' கடைகள் அசைவ சுவையின் ருசியை மாற்றி வாடிக்கையாளர்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. அரைவேக்காட்டு சிக்கனை அரைவேக்காடு சப்பாத்தியில் வைத்து கொடுப்பது பேஷனாகி விட்டது. இவற்றை சாப்பிடும் போது செரிமான கோளாறு ஏற்பட்டு வாந்தி, பேதியும் சில நேரங்களில் உயிர்ப்பலியும் ஏற்படுகிறது.
கேரளா மாநிலத்திலும் தமிழகத்தின் தஞ்சாவூரிலும் 'ஷவர்மா' பலிகள் ஏற்படுத்திய தாக்கம் அசைவப்பிரியர்களை பயத்திற்கு ஆட்படுத்தியது அதிகம். ரோட்டோர கடைகள் கூட சுவைதரும் உணவு கூடங்களாக திகழும் மதுரையில் கெட்டுப்போன சமைத்த சிக்கன், அழுகிய பச்சை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சி தரும் விஷயம்.
மதுரை நகரில் மட்டும் தினமும் 800 ஆடுகள் கறிக்காக வெட்டப்படுகின்றன. புதனன்று 800, ஞாயிறில் 2000 ஆடுகள் விற்பனையாகும். கோழியிறைச்சி தினமும் டன் கணக்கில் விற்பனையாகிறது. முதல்நாள் 'பிரெஷ்' ஆக இருக்கும் இறைச்சி மறுநாள் பதப்படுத்தப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படுவதும் உண்டு.
உணவு பாதுகாப்பு துறையின் ஒருநாள் 'விசிட்டில்' இந்த நிலை மாறுமா. தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் ஓட்டல், உணவக நிர்வாகிகள்.
உணவு பாதுகாப்புத்துறை கண்காணிப்பதில்லை
குமார், தலைவர், மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்: மதுரையில் 300 பெரிய ஓட்டல்கள், 500 சிறிய, சாலையோர ஓட்டல்கள் செயல்படுகின்றன. அசைவ உணவின் மூலம் தான் 'புட் பாய்சன்' ஏற்படுகிறது. மீன்கள் பதப்படுத்தப்பட்டு வருவதால் அதை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம். ஓட்டல் நடத்துபவர்கள் வியாபாரத்திற்கு தகுந்த அளவு சிக்கன், மட்டன் இறைச்சி வாங்க வேண்டும். வேகவைக்காத இறைச்சியை அதிகபட்சம் ஒருநாள் பாதுகாக்கலாம்.
வாடிக்கையாளர்கள் வராவிட்டால் பணியாளர்களுக்கு கொடுப்பது நல்லது. சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தும் போது 'புட் பாய்சன்' ஆகிறது. இன்று எவ்வளவு வியாபாரம் ஆகிறது என்பதற்கேற்ப மறுநாளைக்கு இறைச்சி வாங்க வேண்டும். நிறைய விற்க வேண்டும் என்ற பேராசை தான் இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
சாலையோர, கையேந்தி பவன்களை உணவு பாதுகாப்பு துறை கவனிக்கிறதா என தெரியவில்லை. ரூ.100 க்கு பதிவு சான்றிதழ் கொடுத்தால் மட்டும் போதுமா. பெரியார், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் பெரும்பாலான கையேந்தி பவன்களில் கைகழுவும் வசதி கிடையாது. உணவு பாதுகாப்புத்துறை இவற்றை கண்காணிப்பதில்லை.
'ஷவர்மாவில்' அஜீரணம் இலவசம்
முகமது ரபீக் ராஜா, பரோட்டா மாஸ்டர், மதுரை: மதுரையில் மட்டும் 500 'ஷவர்மா' கடைகள் உள்ளன. 10 நாட்கள் வேலை செய்யத் தெரிந்தால் உடனே ஓட்டல்காரர்கள் அவர்களை மாஸ்டராக்கி விடுகின்றனர். 'ஷவர்மா'வுக்கு இரும்பு குச்சியில் செருகப்பட்ட மசாலா தடவிய சிக்கனை மித தீயில் வேகவிட வேண்டும். சிலர் அதிக தீயில் வேகவிடுவதால் மேற்பகுதியில் வெந்து உட்பகுதியில் வேகாமல் இருக்கும். சிக்கனை கொத்தி கொடுப்பதால் சாப்பிடுபவர்களுக்கு தெரியாது.
இதுவே உடலுக்கு அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. குறைந்தது 15 முதல் 20 கிலோ இறைச்சி வைத்து விற்பனை செய்தால் மட்டுமே 'ஷவர்மா' கடைகளுக்கு லாபம் கிடைக்கும். முதல்நாள் விற்பனை ஆகாவிட்டால் அவற்றை பதப்படுத்தி மீண்டும் மறுநாள் பயன்படுத்துகின்றனர். 'ஷவர்மா' கடைகளால் தான் 'புட் பாய்சன்' ஏற்படுகிறது என்பதால் அவர்களை முதலில் ஒருங்கிணைத்து உணவு பாதுகாப்பு துறை மூலம் பயிற்சி அளித்துள்ளோம்.
மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம்
டாக்டர் ஜெயராம பாண்டியன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், மதுரை: சாலையோர, கையேந்தி பவன்கள் என்பது வாழ்வாதார பிரச்னை. சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் வைப்பதையும், தினசரி இறைச்சி, காய்கறி வாங்கும் ரசீதையும் அவ்வப்போது ஆய்வில் கண்காணிக்கிறோம்.கழிப்பறைக்கு சென்று சுத்தமாக கை கழுவாமல் சமைப்பது, சுகாதாரமற்ற குடிநீர், அரைகுறையாக வேகவைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதன் மூலமே பாக்டீரியாக்கள் உருவாகி உணவு விஷமாக மாறுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் வருகிறது. பெரிய ஓட்டலோ, சிறிய கடையோ யாராக இருந்தாலும் இந்த மூன்று விஷயத்தையும் கடைப்பிடிப்பதை வலியுறுத்துகிறோம்.150 'ஷவர்மா' கடைகளில் ஆய்வு செய்து 50 கிலோ அழுகிய, சரியாக வேகவைக்காத சிக்கனை சமீபத்தில் பறிமுதல் செய்து 15 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஓட்டல்களில் தினசரி இறைச்சி வாங்கியதற்கான ரசீதை பராமரிக்க வேண்டும். காலாவதி பொருட்களை கவனித்து அகற்ற வேண்டும். சமைத்த, சமைக்காத உணவை ஒன்றாக பிரிட்ஜில் வைத்தால் உணவும், இறைச்சியும் கெட்டுப்போகும்.
சமைக்காத சிக்கன், மட்டன், மீன் இறைச்சி ஒவ்வொன்றுக்கும் பிரீசரில் வைக்கும் வெப்பநிலை மாறுபடும். இதுபோன்ற தவறுகளால் தான் உணவு விஷமாகி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். 100 'ஷவர்மா' கடைக்காரர்களுக்கு இதுகுறித்து ஒருநாள் 'பாஸ்ட் டிராக்' பயிற்சி அளித்துள்ளோம் என்றார். பெரிய, சிறிய ஓட்டல்களை கண்காணிப்பது மட்டுமின்றி இறைச்சி விற்கும் கடைகளிலும் தொடர்ந்து ஆய்வு செய்தால் மட்டுமே சுகாதாரமான இறைச்சி கடைகளுக்கு செல்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும்.
No comments:
Post a Comment