Thursday, June 16, 2022

பொதுச் செயலர் தேர்வு: அ.தி.மு.க., சட்ட விதி என்ன?

 ''கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தை, பொதுக்குழு தீர்மானம் வழியாக மாற்றி அமைக்க இயலாது,'' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலர் திருமாறன் தெரிவித்தார்.

பொதுச் செயலர் தேர்வு  அ.தி.மு.க., சட்ட ,விதி என்ன?

கட்சியில் ஒற்றைத் தலைமை யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சி சட்ட விதிகள் பற்றி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலர் திருமாறன் கூறியதாவது:



ஐந்து ஆண்டுகள்



கடந்த 2017 செப்., 12ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில், கட்சியின் சட்ட விதி எண் 20 திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள். இப்பதவிக்கான நபர்கள், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டன.


அதன்பின், அந்த பதவிகளுக்கான தேர்வு முறை குறித்த, கட்சியின் சட்ட விதிகள் மீண்டும் திருத்தப்பட்டன. அதாவது, அவ்விரு பதவிகளும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதன் அடிப்படையில், தற்போது தேர்தல் நடந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஒற்றை ஓட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தல் குறித்த அனைத்து நடவடிக்கைகளும், தேர்தல் பார்வையாளர்கள் வழியாக நடந்து, அவர்களால் முறையாக அறிவிக்கப்பட்டது.இப்பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இப்பதவிகளுக்கான கால அளவு ஐந்து ஆண்டுகள்.

எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இடத்தை, யாரும் நிரப்ப இயலாது என்பதால், கட்சியின் பொதுச் செயலர் என்ற பொறுப்பு இல்லை என, முடிவு எடுத்து, அந்தப் பதவியை ரத்து செய்து, கட்சி சட்ட விதி 43ன் கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தை, பொதுக்குழு தீர்மானம் வழியாக, தற்போது மாற்றி அமைக்க இயலாது. அவ்வாறு பதவி காலத்தின் கால அளவை மாற்ற வேண்டும் என்றால், தற்போதுள்ள பதவிக் காலம் முடியும் நேரத்தில் மட்டுமே, மாற்றி அமைக்க முடியும்.தேர்தல் வழியே தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுகளை, பொதுக்குழுவால் ரத்து செய்யவோ, மாற்றவோ இயலாது. இந்தப் பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் கமிஷன் ஏற்று, ஒப்புதல் வழங்கி உள்ளது.


வழக்குகள்



அதேபோல், தேர்வு செய்யப்பட்ட, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை, கட்சி பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கொண்டு வரப்பட்ட, திருத்த விதிகளுக்கு மட்டுமே, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இப்பதவிகளுக்கு தேர்தல் நடந்து, அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளை, ரத்து செய்யும் அதிகாரம், பொதுக்குழுவுக்கு இல்லை.
கட்சியின் ஒற்றைத் தலைமை என்ற அடிப்படையில், பொதுச் செயலர் பதவியை மீண்டும் கட்சி சட்ட விதிகள் திருத்தப்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அந்த விதி திருத்தம், தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலமான, ஐந்து ஆண்டுகள் கழித்து தான் நடைமுறைக்கு வர இயலும்.
அவ்வாறு விதி திருத்தம் கொண்டு வந்தால், பொதுச் செயலர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை, நீக்கம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால், தேர்தல் கமிஷன் மற்றும் நீதிமன்றம் முன்பு, வழக்குகளை சந்திக்க
நேரிடும்.


தற்காலிகமாக நியமனம்



ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து, பொதுச் செயலர் என்ற பதவி மீண்டும் கொண்டு வந்தால், இடைப்பட்ட காலத்தில், அப்பதவியில் யாரையும் தற்காலிகமாக நியமனம் செய்யும் அதிகாரம், பொதுக்குழுவுக்கு கிடையாது.இதை மீறி செய்தால், சட்டப்படியான பிரச்னைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும். கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து, கேள்விக்குறியான நிலை உருவாகும். தமிழகம் முழுதும், கட்சி தொண்டர்கள் இடையே, ஒரு பிளவை ஏற்படுத்த துாண்டுகோலாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...