தமிழக சட்டசபை, வரும் 17ல் கூடுகிறது. 18ம் தேதி, தமிழக அரசின் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் துவங்குகிறது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னணி பற்றிய விசாரணை கமிஷன் அறிக்கையும், துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு பற்றிய விசாரணை கமிஷன் அறிக்கையும், சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், 'பரபர' விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.
சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:சட்டசபை கூட்டம், வரும் 17ம் தேதி துவங்க உள்ளது. எம்.எல்.ஏ.,க்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அன்றைய தினம் சட்டசபை ஒத்திவைக்கப்படும். அதே நாளில், அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடக்கும். அதில், அனைத்து கட்சித் தலைவர்களும் ஆலோசித்து, சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும். வரும் 18ம் தேதி துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். விவாதம் எத்தனை நாள் நடக்கும் என்பதையும், அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். சட்டசபையில் அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக் கப்பட்டு உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி யும், துணைத் தலைவர் பன்னீர்செல்வமும், இருக்கை தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளனர். இருவரும் முதல்வராக இருந்தவர்கள்.
சபையில் கண்ணியமாக நடந்து கொள்பவர்கள். கொள்கை ரீதியாக இருவருக்கும் பிரச்னை உள்ளது.அதே நேரத்தில், அனைத்து நல்லது, கெட்டதுக்கும் ஒரே இடத்திற்கு சென்று வருகின்றனர்; அங்கெல்லாம் பிரச்னை நடக்கவில்லை. எனவே, யாருக்கு எந்த இருக்கை என்பதை, நான் முடிவு செய்வேன். 'என்னை இங்கே உட்கார வையுங்கள்; அங்கே உட்கார வையுங்கள்' என, யாரும் கேட்க முடியாது. சபை மரபுப்படி இருக்கைகள் வழங்கப்படும்; இப்போது எதுவும் கூற முடியாது. சபை கூடியதும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சட்டசபையில் கேள்வி நேரம் மட்டும், தற்போது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விரைவில், சபை நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
சட்டசபை கூட்டத்தில் மிக முக்கியமாக, 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற, அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு வசதியாக, இது தொடர்பான மசோதாவுக்கு, கவர்னர் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் இந்த தடை விவகாரம் தொடர்பாக, சபையில் காரசார விவாதம் நடக்கும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கை; துாத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கைகள், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இவ்விரு அறிக்கைகளும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, ஜெயலலிதா மரணத்தின் பின்னணி குறித்த விசாரணை கமிஷன் அறிக்கை தொடர்பாக, அரைகுறையாக சில தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளன. அவற்றை அரசு தரப்பு மறுக்கவில்லை என்றாலும், அதிகாரப்பூர்வ முடிவுகளை தெரிந்து கொள்ள, அ.தி.மு.க., மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் ஆவலோடு காத்திருக்கிறது.
இந்த அறிக்கையை சபையில் தாக்கல் செய்வதோடு மட்டுமின்றி, அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, தி.மு.க., அரசு எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றிய விபரத்தையும் அறிய, மக்கள் காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், அ.தி.மு.க., பிளவுபட்டு இருந்தாலும், பழனிசாமி பக்கமே பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், பழைய பலத்துடன் அவர்களால் சட்டசபையில் செயல்பட முடியும். பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இருவர் என, மூவரும் தனி அணியாக செயல்பட, சபாநாயகர் அனுமதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய தன்னுடைய முடிவு, சபை கூடும் 17ம் தேதியே தெரியவரும் என, சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பதால், பன்னீர்செல்வம் தரப்பில் பரபரப்பு காணப்படுகிறது.
கவர்னர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 'ஆன்லைன்' சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழக அமைச்சரவை செப்., 26ல் கூடி, அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அவசர சட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, அவசர சட்டத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு, 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இரண்டு தண்டனையை சேர்த்து வழங்கவும், அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதா, வரும் கூட்டத் தொடரில் சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.
No comments:
Post a Comment