காங்கிரஸ் தலைவர் தேர்தலில், நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி யார் பக்கம் நிற்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சோனியா தரப்பு வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து களமிறங்கியுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், தமிழக காங்கிரசாரிடம் ஆதரவு திரட்ட, வரும் 6ம் தேதி சென்னை வருகிறார். சிதம்பரம் தரப்பு மட்டும் அவருக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், மற்ற கோஷ்டிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, ராகுல் மறுத்து விட்டதை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட, மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகிய மூவர் மனு தாக்கல் செய்தனர்.
வரும் 17ல் ஓட்டுப்பதிவு
இதில், திரிபாதி மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கார்கே - சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி ஓட்டுப்பதிவு, மாநில வாரியாக நடக்க உள்ளது; 19ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.நாடு முழுதும் உள்ள காங்., பொதுக்குழு உறுப்பினர்கள் 9,௩00 பேர், தலைவர் தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றவர்கள். தமிழக காங்கிரசில் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என 710 ஓட்டுகள் உள்ளன.இவர்களிடம் ஆதரவு திரட்ட, சசி தரூர் வரும் 6ம் தேதி தமிழகம் வருகிறார். அவருக்கு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கோஷ்டி மட்டும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. சிதம்பரம் மகனும், சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி, அதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
மற்ற கோஷ்டி தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. சோனியா, ராகுலின் மறைமுக ஆதரவுடன், கார்கே களமிறங்கப்பட்டு உள்ளார். அதனால், அவருக்கு எதிராக போட்டியிடும் சசி தரூரை ஆதரிக்க, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் விரும்பவில்லை.
710 உறுப்பினர்கள்
இதனால், தமிழகம் வரும் சசி தரூரை சந்திக்க விரும்பாமல், கோஷ்டி தலைவர்கள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்; ௬ம் தேதி சென்னையில் இருக்காமல், வெளியூர் செல்லவும் முடிவு செய்து உள்ளனர்.இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:தலைவர் தேர்தலில் போட்டி நிச்சயமாகி உள்ளது. ஓட்டுச்சீட்டு வாயிலாக தேர்தல் நடக்கும். தமிழக காங்கிரசில் 710 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழக காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் சங்கத் தலைவர் செங்கம் குமார் ஆகிய இருவரிடமும் தலா 160 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
யாருக்கு ஓட்டு போடுவர்
இவர்களுக்கு அடுத்தபடியாக, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களாக 75 பேர், சிதம்பரம் ஆதரவாளர்களாக 65 பேர் உள்ளனர்.திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, ஜெயகுமார், செல்லகுமார், மாணிக் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்களும் உள்ளனர். இவர்களில் சிதம்பரம் ஆதரவாளர்களின் ஓட்டுகள், சசி தரூருக்கு உறுதியாகி உள்ளது. ஆனால், மற்ற கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள், யாருக்கு ஓட்டு போடுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், சசி தரூரை சந்தித்தால், மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், மற்ற கோஷ்டி தலைவர்கள், அவரை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக தெரிய வந்து உள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
காங்., தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிப்படி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, கார்கே ராஜினாமா செய்துள்ளார். அதனால், அந்த பதவி யாருக்கு என்ற கேள்வி, காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த சிதம்பரம், இப்பதவியை விரும்புகிறார். ஆனால், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட கர்நாடகாவைச் சேர்ந்த கார்கேவுக்கும், கேரளாவைச் சேர்ந்த சசி தரூருக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் வெற்றி பெறுவர் என்பதால், அவர் தென் மாநில பிரதிநிதியாகி விடுவார். தென் மாநிலங்களுக்கு இரண்டு முக்கிய பதவிகள் தர முடியாது என்பதால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி சிதம்பரத்திற்கு கிடைக்காது என்றும், திக்விஜய் சிங்கிற்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment