Friday, October 7, 2022

உடம்பு வலி சரியாக, குறிப்பாக பெண்களுக்கு கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராமல் இருக்க, எலும்புகள் வலிமை பெற வாரத்தில் ஒரு நாள் இந்த சாதம் செஞ்சு சாப்பிடுங்க.

 பொதுவாகவே இப்போது எல்லோருக்குமே இந்த கை கால் மூட்டு வலி இருக்கிறது. குறிப்பாக பெண்கள் குழந்தை பேருக்கு பிறகு இப்படிப்பட்ட பிரச்சனைகளில் ரொம்ப ரொம்ப அவதி பட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. எலும்புகளில் வலிமை இல்லை. எலும்புகள் நன்றாக வலுபெற வேண்டும் என்றால், கருப்பு உளுந்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் எல்லாம் கருப்பு உளுந்தை களி செய்து வயது வந்த பெண்களுக்கு கொடுப்பார்கள். அது அவர்களுடைய எலும்பை வலுப்பெற செய்யும். இப்போதெல்லாம் வழக்கமே மாறிவிட்டது. நம்முடைய பாட்டி அம்மா சொல்வதை இந்த காலத்து இளைஞர்கள் கேட்பதே கிடையாது. வயது முதிர்ந்த பின்பும் உடல் ஆரோக்கியம் தேவை என்றால் இன்றிலிருந்து இப்படிப்பட்ட உணவை சாப்பிட வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். வாங்க ஒரு சூப்பரான கருப்பு உளுந்து பொடி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் வெள்ளை சாதத்தை உதிரி உதிரியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1 கப் அளவு உதிரி உதிரியான வடித்த வெள்ளை சாதம் நமக்கு தேவை. அது அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்து – 1/4 கப் போட்டு, லேசாக வறுக்க வேண்டும். அதன் பின்பு வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 6 லிருந்து 8 போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். கருப்பு உளுந்து பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். கருப்பு உளுந்தை வாயில் எடுத்து போட்டு கடித்து சாப்பிடும் பக்குவம் இருக்க வேண்டும்.  அடுத்து இதில் தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, பெருங்காயம் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு மீண்டும் வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஓரளவுக்கு கொரகொரப்பாக இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகாது. தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். சாதத்தை தாளித்து விட அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 2 கிள்ளி போட்டு கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு 2 சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் இந்த பொடியை தேவையான அளவு அந்த எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு வடித்த சாதத்தை இதில் போட்டு மேலே உப்பு தூவி, நன்றாக கலந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இதை லஞ்ச் பாக்ஸுக்கும் கட்டிக் கொடுக்கலாம். வாரத்தில் ஒரு நாளாவது இந்த சாதத்தை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். கருப்பு உளுந்தில் செய்வது மிக மிக நல்லது. கருப்பு உளுந்து இல்லை என்பவர்கள் உருட்டு உளுந்திலும் இந்த சாதத்தை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள். ஆரோக்கியத்திற்கு குறை வைக்காதீங்க. குழந்தைகள் வளர்ந்த பின்பு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட உணவுப் பொருட்களை இன்றிலிருந்து கொடுக்க தொடங்குங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...