Friday, October 7, 2022

ஒருதலைப்பட்சமாக காங்., தலைவர் தேர்தல் : சசி தரூர் தரப்பு புகார் பட்டியல்!

 வேட்பாளர் பட்டியலில் குளறுபடி, மிரட்டப்படும் சசி தரூர் ஆதரவாளர்கள் என, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புகார்கள் குவியத் துவங்கியுள்ளதால், கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், ஒருதலைப்பட்சமாக நடக்கப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

காங்., இடைக்கால தலைவர் சோனியாவின் தலைமைக்கு எதிராக, 'ஜி 23' எனப்படும் அதிருப்தி தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தியபோது, தீர்வு கிடைக்காமல் பல மாதங்கள் கழிந்தன. தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை, காரிய கமிட்டி கூட்டம் என பல நிகழ்வுகளுக்குப் பின், தலைவர் தேர்தல் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.அப்போது, காங்., - எம்.பி.,யும், சோனியாவின் மகனுமான ராகுல் தான் தலைவர் என, பல தலைவர்கள் ஒற்றைக்காலில் நிற்கவே, இழுபறி ஏற்பட்டது. இதற்கு, அதிகாரம் சோனியா குடும்பத்தின் கைகளை விட்டு போய்விடக்கூடாது என்பது தான் ஒரே காரணம்.


எதிர்பார்ப்பு



ஆனால், ராகுல் தலைவராக மறுத்துவிட்ட பின், வேறு வழியின்றி தேர்தல் அறிவிக்கப்பட்டது. சோனியா குடும்பத்து ஆட்களைத் தவிர்த்து, தலைவராகப் போகும் அந்த புதுமுகம் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.தலைவர் தேர்தலுக்கான களத்தில் இறங்கப்போவதாக, திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் அறிவித்ததும், அந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. இதை அனுமதிக்கக் கூடாதென கருதிய மேலிடம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் தேர்தலில் நுழைக்க முயற்சித்தது. ஆனால், அவர் முதல்வர் பதவியில் தொடர தன் ஆதரவாளர்களை வைத்து கலாட்டா நடத்தவே, அதுவும் தோல்வியில் முடிந்தது. அப்போதும் மனம் தளராத சோனியா தரப்பு, காய் நகர்த்தியதன் விளைவு தான், மல்லிகார்ஜுன கார்கே களத்திற்கு கொண்டு வரப்பட்டார். அடுத்து, 'தலைவர் போட்டியின்றி தேர்வாக வேண்டும்; சசி தரூர் விலகிக் கொள்ள வேண்டும்' என, சோனியா விசுவாசிகள் பகிரங்கமாக பேசினர்

.இது சர்ச்சையான நிலையில், தேர்தல் பணிக்குழு சார்பில், 'பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், சட்டசபை கட்சித் தலைவர்கள், செய்தி தொடர்பாளர்கள் என யாரும் எந்த வேட்பாளரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசக் கூடாது. 'அவ்வாறு விரும்பினால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என அறிக்கை வெளியானது. இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சில செய்தி தொடர்பாளர்கள் ராஜினாமா செய்தனர். கட்சி நிர்வாகிகளின் ஆதரவை திரட்ட, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சசி தரூர் செல்லத் துவங்கினார். ஆனால், அங்குள்ள மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சோனியா குடும்ப விசுவாசிகளாக உள்ளதால், சசி தரூரை ஏற்க மறுக்கின்றனர்.இத்தனைக்கும் பிரசாரத்திற்கு வரும் வேட்பாளரை, மாநில காங்., தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று, அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டுமென மேலிடம் உத்தரவு போட்டும் இது தான் நிலைமை. இந்நிலையில், இந்த உத்தரவும் கண்துடைப்பு தான் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.



நெருக்கடி



இதையடுத்து, கடந்த இரு தினங்களாக தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசுதன் மிஸ்திரியிடம், சசி தரூர் தரப்பு பல புகார் மனுக்களை அளித்துள்ளதாக தெரிகிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சசி தரூரை ஆதரிப்பவர்கள் மிரட்டப்படுகின்றனர். இவரை முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்களுக்கு நெருக்கடி தரப்படுகிறது. தற்போது வகிக்கும் பதவிகள் பறிக்கப்படுமென்று, மாநில காங்., தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.ஓட்டு போடவுள்ள 9,000க்கும் அதிகமானோர் பட்டியல் முழுமையாக தரப்படவில்லை. இதுவரையில், 8,739 பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன; மீதமுள்ள வாக்காளர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை.பல மாநிலங்களில், வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. தவிர, வேட்பு மனுவை சசி தரூர் தாக்கல் செய்தபோது, அவரிடம் ஒரு வாக்காளர் பட்டியல் தரப்பட்டது.
ஓரிரு தினங்கள் கழித்து, மீண்டும் ஒரு பட்டியல் தரப்பட்டது. இரண்டிலும், பெயர்கள், போன் நம்பர்கள் தகவலில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைவர் தேர்தலில் நடுநிலை வகிப்பேன் என கூறிய சோனியா தன் விசுவாசியை களமிறக்கிஉள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் குளறுபடி, உருட்டல், மிரட்டல் என புகார்களும் கிளம்புவதால், காங்., தலைவர் பதவிக்கான தேர்தல், ஒருதலைப்பட்சமாகவே நடக்கப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

ஒருதலைப்பட்சம்,  காங்கிரஸ், தலைவர், சசி தரூர், புகார்


சோனியாவை எதிர்த்தால்...

காங்., தலைவர் பதவியில் இருந்த சீதாராம் கேசரி வலுக்கட்டாயமாக விரட்டப்பட்ட பின், காங்., மூத்த தலைவர்கள் ராஜேஷ் பைலட், ஜிஜேந்திர பிரசாதா ஆகியோர் சோனியாவுக்கு சவாலாக மாறினர். இதில், ராஜேஷ் பைலட் திடீரென மர்மமான வகையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து, 2000ல் நடைபெற்ற தலைவர் தேர்தலில், சோனியாவை எதிர்த்து ஜிஜேந்திர பிரசாதா போட்டியிட்டார். அப்போது, அவரும் நிறைய அவமானங்களையும், அவலங்களையும் சந்திக்க நேர்ந்தது.'ஜிதேந்திர பிரசாதாவை யாரும் ஆதரிக்கக் கூடாது; வரவேற்கக் கூடாது' என உத்தரவுகள் பறந்தன.

அவர் பிரசாரத்திற்காக உ.பி., மாநிலம் லக்னோ சென்ற போது, கட்சி அலுவலகத்தை பூட்டி அவரை அவமானப்படுத்தினர்.ஆதரித்த ஓரிரு எம்.பி.,க்கள் மிரட்டப்பட்டனர். தேர்தலில் தோற்ற பின், ஜிஜேந்திர பிரசாதா, 'முறைப்படி தேர்தல் நடந்திருந்தால், நான் தான் வெற்றி பெற்றிருப்பேன் என கூற மாட்டேன். அதேசமயம், முறையாக தேர்தல் நடந்ததா என கேட்டால், இல்லை என்று தான் கூறுவேன்' என வேதனையுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...