Friday, October 7, 2022

இன்றைய காலத்தில் அப்படி இருந்தா வெட்டியா இருக்கோம்னு சொல்றாணுவ!

 திருச்சி - விழுப்புரம் தேசிய நெடுச்சாலையில் சுமார் 140 கி.மீ வேகத்தில் எங்களை கடந்த மாருதி ஸிவ்ப்ட் கார், சில கிலோ மீட்டர் தூரம் போனதும் தூரத்தில் கண்ணில் பட்டது, வண்டி குறுக்கே நின்று கொண்டு இருந்தது, வேகம் குறைத்து இடது பக்கம் அந்த வண்டியை தாண்டி நிப்பாட்டி இறங்கி ஓடி வந்தோம், ஒரு பசு மாடு கடக்க, வந்த வேகத்தில் இடித்த வண்டி மாட்டின் கொம்பு உடை பட்டு கொஞ்சம் தள்ளி வீசப் பட்ட மாடு, மூச்சை இழுத்து படுத்து இருத்தது, காரில் இருந்தவர்களுக்கு பெரிதாய் எந்த அடியும் இல்லை, சிறு கீறல்கள் தவிர, கார் முன் பக்கம் காலி!

கொஞ்ச நேரத்தில் மாடு இறந்து போக, ஓ'வென்று அழ ஆரம்பித்தார்கள் ஓடி வந்த அந்த மாட்டுக்கு சொந்தக்கார அம்மா, ஒரு மனித மரணத்தின் ஒலத்தை போலவே இருந்தது அந்த அம்மாவின் அழுகை, காரில் இருந்த பெண் ஒருவரும் அதிர்ச்சியில் அழ ஆரம்பிக்க, ஒருவாரு வண்டியை ஓரம் கட்டி, பின் ஆக வேண்டியதை பார்த்தார்கள், நாங்கள் நகர்ந்தோம்!
அங்கே அரங்கேறிய அந்த சம்பவத்திற்க்கு, என்ன Justification கொடுப்பது, யார் மேல் தப்பு என்றெல்லாம் யோசிப்பது வீண் வேலை! அதில் இருந்து நாம் என்ன எடுத்துக் கொள்ள போகிறோம் என்பது மட்டுமே முக்கியம்!
நான் எப்போதும் தேசிய நெடுச்சாலையில் பயணம் செய்யும் போது அதிகபட்சமாக பயணிக்கும் வேகம் 60, 80 கி.மீ, எப்போவாவது ஒரு இருநூறு மீட்டர் தூரத்திற்க்கு clearance கிடைத்தால் 100. அவ்வளவு தான், சத்தியமாக என் காரின் நீடில் 140 வேகத்தை எல்லாம் பார்த்ததே இல்லை, இந்திய சாலையின் தரம், நம் மக்களின் Traffic Regulations மீதான என் நம்பிக்கை அவ்வளவு தான், மற்றுமில்லாமல் நான் கன்ரோலாக ஃபீல் செய்வது 70 கி.மீ வேகத்தில் தான்!
ஆனால், சுற்றி 140 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் என்னை கடக்கும் போது ஒரு அச்சுறுத்தலை உணர்கிறேன், அந்த வேகத்தில் போக நானும் நிர்பந்தம் செய்யப் படுகிறேன், நண்பர்கள் மூலம் கிண்டலுக்கு ஆளாகிறேன்.
எல்லாரும் இவ்வளவு அவசர அவசரமாக எங்க போறாங்க, என்ன பண்ண போறாங்க, தினமும் செய்யும் அதே வேலையை செய்ய இவ்வளவு அவசரமா, யார் ஆம்புலன்ஸ் ஒட்டுகிறார்கள், யார் சும்மா போறாங்கனே தெரியலை, சாலையில் எல்லா வண்டியும் ஆம்புலன்ஸ் வேகத்திலையே போகுது, நம்ம நாட்டை பற்றி நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ப எதிர் காலத்தை பற்றி யோசிக்காமல் அவசர அவசரமாக முடிவெடுத்து தான் நம் அரசாங்கம் செயல் படும், அப்படி அவசரமாக போடப் பட்ட சாலைகள் தான் தேசிய நெடுச்சாலைகள், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரு பக்கமும் விவசாய நிலங்கள், நெடுகிலும் கிராமங்கள் உண்டு, அங்குள்ள மனிதர்களுக்கு வலமிருந்து இடது புறமும், இடமிருந்து வலது புறமும் சாலையை கடந்து போக வேண்டிய அவசியம் இருக்கு, மேய்ச்லுக்கு போகும் மாடுகள் கிராஸ் செய்யத் தான் செய்யும், மனிதனுக்கு மனிதனே விதித்த விதியை மனிதன் கடை பிடிக்காத போது அதை மாடுகளிடம் எதிர் பார்க்க முடியுமா? இது மனிதனுக்கு மட்டுமான உலகம் என்று நாய்களுக்கும் மாடுகளுக்கும் தெரியாது, பாவம் பிறந்த நமக்கும் தான் என்று அவை நினைத்து கொண்டிருக்கின்றன!
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சாலை அமைக்கும் பல நாடுகள், போக்குவரத்து விதிகளில் கெடு பிடியாக இருக்கும் நாடுகளில் பயணம் செய்கின்றவர்களே அந்த அரசு நிர்ணயம் செய்கிற வேகத்தில் பயணம் செய்யும் போது, இவை எதுவும் நடை முறையில் இல்லாத இந்தியாவில் அரசு சொன்ன வேகத்தை விட குறைவாக வேகத்தில் பயணம் செய்வது தானே நமக்கும் அடுத்தவருக்கும் பாதுகாப்பு? இந்திய சாலைக்கு அருகதை இல்லாத Fastest CC கொண்ட வாகனங்களை அரசாங்கம் தான் அறிவு கெட்ட தனமாக இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கிறது என்றால், பணம் இருக்கிறதே என்று இறக்குமதி செய்து ஸ்பீடு பிரேக்கரை முட்டி கொண்டு நகர முடியாமல் நிற்கும் உயர் ரக கார்களும், 200 கி.மீ வேகத்தில் பறக்கும் கார்களும் நம் சூழலுக்கு அவசியம் தானா? பணம் இருக்குனு வாங்கிட்டு "ப்ளடி இந்தியா"னு இவன் திட்டுவான்! உண்மையில ப்ளடி இவன் தான்!
கொஞ்சம் நிதானித்து கொண்டு, யோசித்து பாருங்கள், இத்தனை வேகமாக முன்னேறி ஒரு மணி நேரத்தை மிச்சம் செய்து நாம் என்ன செய்து விட போகிறோம்? கண நொடியில் நிகழ்ந்து பின் யோசிப்பதால் என்ன ப்ரோஜணம்? ஒரு பெரும் விபத்தில் சிக்கி தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமா? வாகனம் என்பது ஒரு இயந்திரம், நம் கட்டு பாட்டில் இருக்கும் வரை தான் அது இயந்திரம், அதன் கட்டு பாட்டில் நாம் சென்று விட்டால், அப்புறம் முடிவை அது தான் நிர்ணயம் செய்யும், 6௦ - 80 கி.மீ வேகத்தை கடை பிடித்தால், நம்ம சொல்றதை பிரேக் கேக்கும்!சாலையில் வைக்கப் பட்டு இருக்கும் Signage's'க்கு அர்த்தம் தெரியாமலேயே இந்தியாவில் லைசன்சு கிடைச்சிடும் தெரியுதுல, அப்போ அவன் கிட்ட இருந்து நம்ம தானே காத்துக் கொள்ளுனும்?
நிதான வேகத்தில் போனால் விபத்து நிகழதா என்று கேட்காதீர்கள், நம் மரணத்திற்க்கு நாம் காரணமாக இருக்க கூடாது என்பதற்காக தான், தப்பி, தப்பி மரணத்தை தள்ளி போட்டு கொண்டு இருக்கிறோம்! வீட்டை விட்டு வெளியே போனாலே அதன் சாத்திய கூறுகள் நிறைந்து கிடக்கிறது, அவற்றில் இருந்து தப்பி தான் வீடு வந்து சேர்கிறோம்!
நிதானமா இருந்து பாருங்க, உங்களை சுற்றி இருப்பவர், இருப்பவை உங்கள் கண்ணுக்கு தெரியும்! Cafeteria'ல அமைதியா ஒரு டீ'யை ரசித்து குடித்து கொண்டிருந்தால் "என்ன, ஃப்ரீயா இருக்கீங்க போல, ஜாலி,னு" சொல்லிட்டு போறான் ஒருத்தன்!
அவனை பொருத்த வரை நான் அவனை போலவே பட படப்பாக இருக்க வேண்டும், மெல்லமா நடக்க கூடாது, மெல்லமா சாப்பிட கூடாது, இன்றைய காலத்தில் அப்படி இருந்தா வெட்டியா இருக்கோம்னு சொல்றாணுவ!
8.30 மணிக்கு ஸ்கூலுக்கு குழந்தையை, 7.45க்கு படுக்கையில் இருந்து எழுப்புறான், அவசரமா பல்லு விலக்கி விடுறிங்க, அவசரமா குளிக்க வைக்கிறீர்கள், ஒழுங்கா சாப்பிடாம ஏதோ கடமைக்கு குழந்தை சாப்பிடுது, சாலையிலும் அவசரமா வாகனம் ஒட்டி எப்டியாவது நேரத்துக்கு பள்ளியில குழந்தையை சேர்த்திடனும்! அங்க ஆரம்பிக்குது பிரச்னை!
பல்லு சுத்தமா இல்லை, தேய்ச்சி குளிப்பது இல்லை, நல்ல சாப்பாடு இல்லை, எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாம, அரை குறையா அவசர பட்டு "என்ன வாழ்க்கைடா இதுனு" தேவையே இல்லாமல் சலித்து கொள்கிறோம், செயற்கையாக நம்மை பிசியாக வைப்பதையே விரும்புகிறோம்!
இந்த ஓட்டத்தில் இருந்து விலகி நிற்பவர்களையும் உங்களின் இந்த ஓட்டம் பல வகையில் பதம் பார்க்கிறது என்பதை நாம் என்றாவது உணர்கிறோமா?
ஆயிரம் பேசலாம், இந்த வேகமான உலகில் நிதானம் சாத்தியமா என்றால், சாத்திய படுத்தும் வரை, எதுவும் சாத்தியம் இல்லை தான்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...