Saturday, October 8, 2022

பொன்னியின் செல்வன் ❤️ எனது பார்வையில் :

 தமிழ் சினிமாவிலிருந்து சரித்திர படங்கள் வந்து வெகு காலமாகி விட்ட நிலையில், தெலுங்கிலுருந்து பாகுபலி படம் வந்த பின் அதை விட சிறந்த ஒரு படம் தமிழில் வராதா என்ற தமிழ் ரசிகர்களின் ஏக்கத்தை முற்றிலுமாக தீர்த்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

ஆதித்ய கரிகாலன் படைகளுடன் மோதுவதில் இருந்து தொடங்குகிறது படம். தன் முன்னாள் காதலி நந்தினியை நினைத்து உருகுவதும், வயதான பழுவேட்டையருக்கு மனைவியாக நந்தினி தஞ்சையில் இருப்பதால் அங்கு வரவேமாட்டேன் என்று கோபம் கொள்வதும், எதிரிகளை வீழ்த்தும் வீரத்திலும் ஆவேசத்திலும் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் விக்ரம்.
விக்ரமோடு வாளேந்தி வீரம் காட்டும் வந்தியதேவனாக கார்த்தியின் அறிமுகமும் ஆரவாரம்... சோழ அரசின் விசுவாசியாகவும், பெண்களை விரும்பும் குறும்புத் தனமும், சிறந்த வீரனாகவும் வந்தியதேவன் கதாபத்திரமாகவே படம் முழுதும் வாழ்ந்திருக்கிறார் கார்த்தி.
இளவரசி குந்தவையாக திரிஷா. தன் நாடு, நாட்டு மக்கள்,அப்பா அண்ணன் தம்பி என எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதும்,எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்து அதற்கேற்றபடி புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் விதமும் என அலட்டல் இல்லாத நடிப்பில் ஈர்க்கிறார் திரிஷா.
தன்னை விட அதிக வயதானவரான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு தனது அழகால் அவரை அடிமையாக்கி தனக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்ளும் சூழ்ச்சியின் மொத்த உருவமும் ஒரு பேரழகி வடிவில் இப்படிதான் இருக்குமோ என தனது நடிப்பால் வியக்க வைக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராயும், திரிஷாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் நாவலில் எழுதப்பட்ட விதத்திற்கு அப்படியே உயிர்கொடுத்திருக்கிறது.
அருள்மொழிவர்மனாக இடைவேளைக்கு பிறகு வந்தாலும் அதன்பின் அவரை சுற்றி தான் கதை நகர, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவியும்.
சோழ அரசுடன் இருந்து கொண்டே சதிகாரர்களுக்கு துணைபுரியும் வில்லன்களாக பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நல்ல பொருத்தம்.
சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஒற்றனாக வைணவத்தின் பெருமை பேசும் ஆழ்வார்க்கடியனாக ஜெயராம், மதுராந்தகனாக ரகுமான், பெரிய வேளாளர் ஆக பிரபுவும், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, பூங்குழலியாக ஐஸ்வர்யலட்சுமியும் அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துள்ளனர்.
கதை நடக்கும் அந்தக்காலம் இப்படிதான் இருந்திருக்குமோ என்ற கற்பனைக்கு படக்குழுவினர் அனைவருமே உயிர்கொடுத்திருக்கின்றனர். கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் போன்ற தொழில்நுட்பம் அதிகம் இல்லாமல் கதைக்கு தேவைப்படும் விதத்தில் பல இடங்களை தேடிக்கண்டுபிடித்து படமாக்கி இருக்கிறார்கள்.
படத்தில் சில பாடல்கள் முழுமையாக இடம்பெறா விட்டாலும் எ. ஆர். ரகுமானின் பின்னணி இசை சேர்ப்பு தரம்...
லைட்டிங்களாலும், காட்சி அமைப்புகளாலும் கேமரா கோணங்களாலும், படத்தின் பிரம்மாண்டத்தை ஒவ்வொரு பிரேமிலும் காட்டியிருக்கும் ரவிவர்மனின் ஒளிப்பதிவு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பொன்னியின் செல்வன் கதாசிரியர் கல்கியின் காவிய வடிவத்தை இந்த திரைப்படத்தில் ஆங்காங்கே சிதைத்திருப்பதாக சில விமர்சனங்கள் வந்தாலும் கூட நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய வரலாற்றை கதையின் மூலக்கதையிலிருந்து விலகமால் திரைக்கதை அமைத்து அற்புதமான சத்திர படத்தை கொடுத்ததற்காகவும் , இன்றைய இளைய சமுதாயத்தையும் நம் வரலாற்றை, பொன்னியின் செல்வனை தேடி தேடி படிக்க வைத்ததற்காகவும் இயக்குனர் மணிரத்னதிற்கு பெரிய சபாஷ் சொல்லலாம்.👏👏👏
மிஸ் பண்ணிடாம பாருங்க.😍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...