Monday, October 3, 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : நிர்வாகிகளுக்கு அதிரடி தடை.

 'காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்காக நடக்கவுள்ள தேர்தலில், கட்சி நிர்வாகிகள், எந்த ஒரு வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யக் கூடாது' என, கட்சி மேலிடம் தடை விதித்துள்ளது.காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 17ல் நடக்கிறது. இதில், கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், லோக்சபா எம்.பி., சசி தரூரும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ், தலைவர், தேர்தல், நிர்வாகிகள், அதிரடி தடை


இந்நிலையில், தேர்தலுக்கான வழிகாட்டும் விதிமுறைகளை நேற்று காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாக, கட்சி நிர்வாகிகள் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது. அப்படி பிரசாரம் செய்ய வேண்டுமானால், தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து, அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.



ஏற்பாடு



கட்சியின் பொதுச் செயலர்கள், மேலிட பொறுப்பாளர்கள், இணைச் செயலர்கள், மாநில தலைவர்கள், கட்சியின் சட்டசபை தலைவர்கள், முக்கிய அமைப்புகள், பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோருக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள், தாங்கள் விரும்பும் நபருக்கு தாராளமாகவும், சுதந்திரமாகவும் ஓட்டளிக்கலாம்; இதில், யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுவோர், மாநிலங்களுக்கு பிரசாரத்துக்காக வரும்போது, அவர்களுக்கு தேவையான அரங்கம், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளை, அந்தந்த மாநில காங்., தலைவர்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். வேட்பாளர்கள், வாக்காளர்களை அழைத்து வருவதற்கு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. விரும்பத்தகாத துண்டு பிரசாரம் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றக் கூடாது. எந்த ஒரு வேட்பாளருக்கு எதிராகவும், மற்ற வேட்பாளர் வெறுப்பை துாண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.


நடவடிக்கை



இந்த விதிமுறைகளை மீறுவோரின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்கப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சசி தரூர் கூறுகையில், ''காங்., மேலிடம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சியின் முடிவை பின்பற்றி, கட்சியில் வகித்து வந்த பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டேன்,'' என தெரிவித்துஉள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...