அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.????.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, October 30, 2023
உடையாரின் 1076வது சதய விழா .
இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே!!!!. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த் துறை எது????.
மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப் படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ!!!.
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா??.
ஆமெனில், என்ன வைத்தியம்?. எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்ன வித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா???.
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தா மலையிலிருந்து வந்திருக்கிறது.
கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.
எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப் பட்டிருக்கும்.
ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.
வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கை வினைஞர்களும் இங்கே குவிக்கப் பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.)
எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.
கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.
எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.
மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.
கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சு மண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன்.
அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் இன்றளவும் விஸ்வரூபம்.
- எழுத்து சித்தர் பாலகுமாரன்
இந்திய துணைக்கண்ட வரலாற்றில் எந்த ஒரு மன்னன் க்கும் இம்மியளவு குறையாத இந்த மாபெரும் சக்கரவர்த்தி பிறந்த மண்ணில் பிறந்தது இப்பிறவி பாக்கியம்...
இப்பெரும் அரசனின் சமாதியை கேட்பாரற்று போட்டு வைத்திருக்கும் அவலம், தமிழக அரசு இயந்திரத்தின் நீண்ட கால கருப்பு புள்ளி...
CBSE பாடத்திட்டத்தில், அக்பர், அசோகர், க்கு தரும் முக்கியத்துவத்தில் கால் பங்கு கூட இவருக்கும் ராஜேந்திர சோழனுக்கும் தராமல் இருப்பது , இந்திய அரசு இயந்திரத்தின் நீண்ட கால கருப்பு புள்ளி...
#ராஜராஜசோழன் The Greatest
உடையாரின் 1076வது சதய விழா இன்று
தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment