ஆண்-பெண் உறவுகளின் அபூர்வமான சிக்கல்களை எல்லாம் தமிழில் வெற்றிகரமாக திரைப்படமாக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். பாலச்சந்தரின் முக்கியமான படங்களுள் ஒன்று ‘அபூர்வ ராகங்கள்’. அபூர்வ ராகங்களில் இடம்பெற்ற அழகிய பாடல்களுள் ஒன்று… அதிசய ராகம்.
ஒரு இருபது வயது பெண்ணின் தாயிடம் இளைஞனான கமல் தனது காதலைத் தெரிவித்து பாடும் பாடல் அது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், ஜேசுதாஸின் குரலில் கண்ணதாசனின் வரிகளில் உருவான அப்பாடல் இன்றும் மிகச் சிறந்த காதலைத் தெரிவிக்கும் பாடலாக விளங்குகிறது.
இப்பாடல் உருவான விதம் குறித்து மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் கூறும்போது, “கே.பாலச்சந்தர் எந்த மாதிரியான சூழ்நிலைக்கு என்னிடம் பாட்டுக் கேட்பார் என்று எதிர்பார்க்கவே முடியாது. எனக்குத் தெரிந்து பாலியல் பலாத்கார காட்சிக்கெல்லாம் பாடல் கேட்ட முதல் இயக்குனர் அவராகத்தான் இருக்கும். ‘அதிசய ராகம்’ பாடலின் சூழ்நிலையை என்னிடம் விளக்கிய பாலச்சந்தர், “படம் பேரு அபூர்வ ராகங்கள். இந்தச் சூழ்நிலைக்கு இது வரைக்கும் யாரும் போடாத ஒரு அபூர்வ ராகத்தைப் பயன்படுத்தி எனக்கு பாடல் வேணும்.’ என்றார். எனக்கு அப்போதைக்கு ஒன்றும் தோன்றவில்லை. அத்தருணத்தில் தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு அகில இந்திய வானொலியில் ஒரு நிகழ்ச்சி ஒலிப்பதிவிற்காகச் சென்றேன். அந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகர் பாலமுரளி கிருஷ்ணா பாடினார். பாலமுரளி பாடி முடித்தவுடன் நான் அவரிடம், “பாலச்சந்தர் யாரும் பயன்படுத்தாத ஒரு ராகத்துல பாட்டு வேணும்ன்னு கேக்குறாரு. இதுவரை யாரும் பயன்படுத்தாத ராகம் ஒன்றைச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், “மஹதி என்ற ராகத்தை யாரும் பயன்படுத்தியதில்லை…” என்று சொல்லி அந்த ராகத்தைப் பாடிக் காட்ட… எனக்கு அந்த ராகம் மிகவும் பிடித்துவிட்டது. அந்த ராகத்தின் அடிப்படையில்தான் நான் ‘அதிசய ராகம்… ஆனந்த ராகம்’ பாடலுக்கு இசையமைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இப்பாடலுக்கான சூழ்நிலையை கண்ணதாசனிடம் கூறிய எம்.எஸ.வி. “இந்தப் பாட்டோட ராகம்…. ஒரு அதிசயமான ராகமா இருக்கணும். அதே சமயத்துல ஆனந்த ராகமாவும் இருக்கணும்ன்னு பாலச்சந்தர் சொன்னாரு. படம் பேரு… அபூர்வ ராகங்கள்” என்று கூறியவுடனேயே கண்ணதாசன் எம்.எஸ்.வி. சொன்ன வரிகளையே கொண்டு ‘அதிசய ராகம்… ஆனந்த ராகம்…. அழகிய ராகம்…. அபூர்வ ராகம்…” என்று பல்லவியை கூற…. அந்த ‘அதிசய ராகம்’ பிறந்தது.
இப்பாடலின் முதல் இரண்டு சரணங்களில் மஹதி ராகத்தைப் பயன்படுத்திய எம்.எஸ்.வி. மூன்றாவது சரணத்தில் பைரவி ராகத்திற்கு மாறினார். ஏனெனில் மூன்றாவது சரணத்தில்தான் கமல் நேரிடையாக ஶ்ரீவித்யாவிடம் தனது காதலை தெரிவிப்பார். அப்படத்தில் கதாநாயகி ஶ்ரீவித்யாவின் பெயர் பைரவி. எனவே மூன்றாவது சரணத்தில் பைரவி ராகத்தில் கமல் தனது காதலைச் சொல்ல…. கண்ணதாசன் அச்சரணத்தை “அவள் ஒரு பைரவி…” என்று முடித்தபோது ஶ்ரீவித்யா அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தமிழர்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்தனர். இன்று வரையிலும் அந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்கின்றனர்.
No comments:
Post a Comment