சிவாஜியின் உயர்ந்த குணங்களில் ஒன்று சக கலைஞர்களின் திறமையை மதிப்பதும் வியப்பதும். தஞ்சாவூரை ஒட்டிய சூரக்கோட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு அவ்வப்போது வருவார். அவர் தஞ்சை வரும்போதெல்லாம் அவரைச் சந்திக்க நான் கிளம்பிவிடுவேன். ‘படையப்பா’ படம் வெளியாகவிருந்த நேரம் அது.
சிவாஜியைச் சந்திப்பதற்காக அன்றைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது “ரஜினியைப் பற்றி..” என்று கலெக்டர் கேட்டு முடிப்பதற்குள், “தமிழ்ப் பட உலகத்துக்கு எப்போதெல்லாம் மந்தநிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர் நடிக்கும் படத் தயாரிப்பைத் தொடங்கினால்போதும், அந்த மந்தநிலை மாறிவிடும்” என்றார்.
மாமியாக மாறிவிட்டான்
அவர் தஞ்சைக்கு வருகிறார் என்றால் எனக்கு முதல் நாளே தகவல் தந்துவிடுவார்கள். கமல் நடிப்பில் ‘அவ்வை சண்முகி’ படப்பிடிப்பு நடந்துவந்த நேரம். நான் அவரது பண்ணை வீட்டில் காத்திருந்தேன். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துசேர்ந்தார். காரை விட்டு இறங்கும்போது எதிரில் நின்ற என்னைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தார்.
“டேய்.. பாலு.. கமல் என்னை மாமல்லபுரம் வரச்சொல்லியிருந்தான். நானும் ஆர்வமா அங்கே போனேன். போய்க் கமலைத் தேடினா ஆளைக் காணோம். எங்கடா கமல்ன்னு கேட்டா... அதோன்னு கை காட்டுறாங்க.. அவன் ஒரு மாமியாகவே மாறியிருந்தான். எனக்கு அவனைச் சுத்தமா அடையாளமே தெரியலப்பா” என்று கூறியபோது அவரது முகம் முழுவதும் மகிழ்ச்சி பரவியிருந்தது.
ஆயிரம் நிலவே வா
சிவாஜி - எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அந்தக் காலத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள். ஆனால், சிவாஜி - எம்.ஜி.ஆர் இடையே இறுதிவரை ஆழமான நட்பு இருந்தது. சிவாஜியின் சூரக்கோட்டை வீட்டில் ஒரு பழைய வால்வு ரேடியோப் பெட்டி இருந்தது. அதில்தான் அவர் தமிழ், ஆங்கிலச் செய்திகளைக் கேட்பார். செய்திகள் முடிந்ததும் சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அப்போது ஒரு பாடலை அவர் ரசித்துக் கேட்டார். அச்சமயம், அருகில் இருந்த கமலாம்மாள், “மாமாவுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் தம்பி ” என்றார். அந்தப் பாடல், ‘அடிமைப்பெண்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’.
இது ராஜா படம்!
சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டில் ஒரு நண்பகல் நேரம். நான் அங்கே காத்திருந்தேன். ‘முதல் மரியாதை’ படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்துவிட்டு வந்தார். நான் அப்போது சிவாஜியின் மூத்த சகோதரர் தங்கவேலுவுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிவாஜி தனது அண்ணன் அருகில் வந்து, படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். “அண்ணே… அத எடுத்தான், இத எடுத்தான், அங்கே எடுத்தான், இங்கே எடுத்தான். படம் நல்லா வந்திருக்குண்ணே.. ஆனா இது என் படம் இல்லை; ராஜா படம்... டைரக்டர் பாரதிராஜாவோட படம்” என்றார். பாரதிராஜாவுக்கு இதைவிடச் சிறந்த பாராட்டை எப்படிக் கொடுக்க முடியும்.
நெஞ்சருகே ஒரு புத்தகம்
திரையுலகைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல; திறமையாளர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களை மதித்துப் போற்றும் பண்பு சிவாஜியிடம் இருந்தது. சூரக்கோட்டை வீட்டுக்கு ஓய்வு எடுப்பதற்காக அவர் வரும்போதெல்லாம், இரவில் தூங்கும்முன் ஒருமணி நேரமாவது புத்தகம் படிக்காமல் படுக்க மாட்டார். அன்று இரவு உணவு முடித்தபின் இடக்கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு, வலக்கையில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நெஞ்சில் அணைத்தபடி மாடிக்கு ஏறிச்சென்றார்.
இதைப் பார்த்த சிவாஜியின் உறவினர் ஜெகன்நாதர், “ ஏன் தம்பி அவ்வளவு பெரிய புத்தகத்தை நீ எடுத்துக்கிட்டு போற.. நம்ப சுப்புகிட்ட (வீட்டுப் பணியாளர்) சொன்னா எடுத்துக்கிட்டு வரான்.” என்று கரிசனத்துடன் கூறினார். ஜென்நாதரைச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு, “இந்தப் புத்தகத்தை இப்படி நெஞ்சில அணைச்சு எடுத்துக் கிட்டுப்போறது எனக்குப் பெருமையா இருக்குண்ணே.” என்றார். அதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
No comments:
Post a Comment