திரைப்படத் துறையைச் சேர்ந்த திரு. சித்ரா லட்சுமணன், அடையார் ஆனந்த பவன் உரிமையாளரை பேட்டி கண்டது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உலவி, வெறுப்பை விதைக்கிறது.
''ஒரு காலகட்டத்தில் இந்த ஹோட்டல் இண்டஸ்டிரி, பெரும்பாலும் ஐயருங்க வசம்தான் இருந்தது. அதற்குப்பிறகுதான் மெல்ல மெல்ல மாறுதல் அடைஞ்சது. அதெப்படி இந்த மாற்றம் வந்தது'?'' என்று சித்ரா லட்சுமணன் கேட்கிறார்
''யார் வேணாலும் பண்ணலாம்னு, அதுக்கு முக்கிய காரணம் தந்தை பெரியாரைச் சொல்லணும். இந்தக் குலத் தொழில் என்பதை மாற்றிக் காட்டியதில் அவரும் ஒருவர். யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம், காலம் மாறுது, அரசு உதவி செய்கிறது, வங்கிகள் கடனளிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே செய்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்'', என்று . . .. பேசிகொண்டே செல்கிறார்.
யூ-டியூப் சேனல்களால் நாட்டில் குழப்பங்கள்தான் அதிகரிக்கின்றன. எதை வேண்டுமானாலும் தனக்கு பிடித்த வகையில் திரித்துகேட்கலாம், தனக்குப் பிடித்த வகையில் பதிலைக் கேட்டுப் பெறலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. கேள்வி கேட்ட திரு. சித்ரா லட்சுமணன் மிகப் பெரிய மேதாவி. அவரிடமிருந்து இதைத்தவிர வேறு நல்ல விஷயங்களை எதிர்பார்க்க முடியாது.
இந்தக் கேள்விக்கு அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் இப்படி ஒரு பதிலை தவிர்த்திருக்க வேண்டும். ஹோட்டல் தொழில் என்பது பிராமணர்களின் குலத் தொழிலா? அதெப்படி ஒரு ஜாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில் என்று இவராக முடிவு செய்கிறார். பிராமணர்களைத் தவிர வேறு எந்த ஜாதியைப் பற்றியாவது விமர்சனம் செய்திருந்தால், குறைந்தபட்சம் அவர்கள் சார்ந்த சங்கம் சார்பிலாவது ஒரு எதிர்ப்பு கிளம்பியிருக்கும். இந்து மதத்தின் ஒரு பிரிவான பிராமணர்களை வசைபாடுவது ஒருவகை. நாத்திகத்தின் பெயரால் இந்துக்களின் உணர்வுகளை நசுக்கும் திரு. ராமசாமி நாயக்கரை துதிபாடுவது மற்றொரு வகை. இந்த இரண்டுமே இந்துக்கள் மன வருத்தப்படும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 1950களில் லால்குடி என்றவுடன் அனைவரின் மனத்திலும் தோன்றுவது சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில். அடுத்ததாக அந்தக் கோவிலின் வாசலில் இருந்த முரளி கபே. பெயர் முரளி கபே என்று இருந்தாலும், மணி ஐயர் கடை என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.
1945ல் தொடங்கப்பட்ட இந்த உணவகம் 1995வரை, ஐம்பது ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டது. குறைந்த விலை. நிறைந்த சுவை. தைரியமாக சாப்பிடலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் இட்லியும் கடப்பாவும் மிகவும் பிரபலம். கையில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வருவார்கள். இரண்டு இட்லி வாங்குவார்கள். பாத்திரம் நிறைய கடப்பா கொடுப்பார்கள். லால்குடியில் மணி ஐயர் கடைக்கென்றே கடப்பா ரசிகர்கள் இருந்தார்கள். மாலையில் சூடான ஜாங்கிரியும், அதற்கு துணையாக மிக்சரும் கொடுப்பார்கள். மதியம் சாப்பாடு. பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வருவார்கள். அதுவும் திருவிழாக் காலங்களில் வியாபாரிகள் விரும்பி சாப்பிடும் கடை.
அதன் உரிமையாளர் தன்னால் முடியாத காலத்திலும் அங்கு பணிபுரியும் குடும்பங்கள் பாதிக்கபடுமே என்ற ஒரே காரணத்திற்காக அந்த உணவகத்தை நடத்தி வந்தார். இது எல்லோருக்கும் தெரியும்.
ஆசிரியர் தொழில், உணவகத் தொழில், மருத்துவத் தொழில், இந்த மூன்றிலும் வருமானம் மட்டும் முக்கியமாகப் பார்க்கப்படுவதில்லை. அதில் வெளிப்படையான சேவை ஒளிந்திருக்கும். நம்மிடம் இருக்கும் பணம் சுவையான உணவை கொடுத்துவிடாது. சுவையைத் தேடியும், தரத்தைத் தேடியும் பயணிக்க வேண்டியிருக்கும். அதனால்தான் உணவகத் தொழில் என்பது மிகப் பெரிய புண்ணியத்தை தனக்குள்ளே வைத்திருக்கிறது.
சற்று முன் மணி ஐயர் கடையின் உரிமையாளரின் மகனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கிறார்.
ஏன் சார் கடையை மூடிவிட்டீர்கள் என்று கேட்டேன்.
அந்தக் கடையால்தான் நாங்கள் வளர்ந்தோம். படித்தோம். சகோதரிகளுக்குத் திருமணம் சிறப்பாக செய்துவைத்தோம். குடும்பத்தின் கிளைகள் வளர்ந்துவிட்டன. இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடையை மூடும் கடைசி நாள்கூட கூட்டம் நிரம்பி வழிந்தது. வியாபாரத்துக்கோ, லாபத்துக்கோ குறைவில்லை.
அப்பாவின் நாட்களிலேயே நாங்கள் நன்றாக படித்துவிட்டோம். ஹோட்டல் தொழிலில் மனம் செல்லவில்லை. அப்பா அதிகாலையிலேயே கடைக்குச் செல்வார். இரவு கடையை மூடும் வரை பணி கடுமையாக இருக்கும். மதியம் ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகளை அவரே செய்வார். கிட்டத்தட்ட முழு அர்ப்பணிப்பு அவசியமாகிறது. எங்களின் படிப்பு, வாழ்க்கை முறை மாற்றுத் தொழிலை தேர்ந்தெடுக்க வைத்துவிட்டது. வெளி நாட்டிற்கு சென்று பணியில் அமர்ந்துவிட்டோம். அதனால் உணவகத்தை 1995ல் மூடிவிட்டோம், என்று சொன்னார்.
அந்தக் கடை மூடிய பிறகு பலர் வருத்தத்தோடு கண்ணீர் விட்டதை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கடையின் மீது அவ்வளவு அன்பு.
இன்றுகூட சிவன் கோவிலுக்கு செல்லும் போது மணி ஐயர் கடையை தவிர்க்க முடியாது. அந்த நாட்களில் நான் பள்ளி மாணவன். இட்லி ஆர்டர் செய்துவிட்டு சாம்பாருக்காக கையில் பாத்திரத்துடன் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.
மணி ஐயர் ஹோட்டல். அலங்கார விளக்குகள் கிடையாது. டிஸ்டம்பர் பூசப்பட்ட சுவர்கள் கிடையாது. ஒய்யாரா நாற்காலிகள் கிடையாது. ஆடம்பரம் ஏதுமிருக்காது. இதில் காட்ட வேண்டிய அக்கறையை உணவின் சுவையிலும், தரத்திலும் காட்டியிருப்பார்கள்.
அந்த இடம் எப்போது பார்த்தாலும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும். சாப்பிட்டுவிட்டு வாசலில் ஒரு கூட்டம் போடுவார்கள் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள். இப்போது அந்த இடம் காலியாக இருக்கிறது. முக்கைத் துளைக்கும் சாம்பார் வாசனை இப்போது இல்லை. ரெண்டு இட்லி ஒரு வடை, ஒரு ரவா, என்ற குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். இன்று அந்தக் குரல்கள் ஓய்ந்துவிட்டன. காலம் தனது உடையை மாற்றிக் கொண்டுவிட்டது. இதுதான் உண்மை. இந்த மாற்றங்களை வருத்தத்தோடு கடந்து செல்லும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். மணி ஐயரோடு லால்குடி சுவையையும், தரத்தையும் இழந்துவிட்டது என்றுதான் இப்போதுகூட அங்கு வசிக்கும் பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர் நெற்றியில் பட்டையோடு சிவப்பழமாக அமர்ந்திருப்பார். பணத்தை வாங்கி, மீதிச் சில்லறையை கொடுத்தவாரே ஹோட்டலில் நடப்பதை பார்வையிட்டுக் கொண்டேயிருப்பார். ''அங்க சாம்பார் கேட்கறார் பார். அங்க போ'', என்று உத்தரவுகளையும் அவ்வப்போது கொடுத்துக் கொண்டேயிருப்பார். அவர் பக்கத்தில் கையில் ஒரு பாத்திரத்துடன் சாம்பாருக்காக காத்திருப்பது இனிமையான அனுபவம்.
இப்போதுகூட எங்காவது கடப்பா சாப்பிடும் வாய்ப்பு கிடைக்குமானால், மனம் சட்டென்று மணி ஐயர் கடையின் கடப்பாவோடு ஒப்பிடத் தொடங்கும். அது எவ்வளவு மிகச் சிறந்த சுவையோடு இருந்தாலும் மணி ஐயர் கடையின் கடப்பாவுக்கு இணையாகாது என்று சொல்லிவிட்டுத்தான் சுவைக்க தொடங்குவார்கள் லால்குடி மக்கள். எத்தனையோ ஏழைகளுக்கு உணவளித்த அமுத சுரபி 1995ம் வருடத்திற்குப் பிறகு தனது சுரப்பை நிறுத்திக் கொண்டது.
பகட்டான பெரிய நகரங்களில் ஹோட்டல் தொழில் நடத்துவது பெரிதல்ல. கிராமங்களில் நடத்தும்போதுதான் தொழிலின் அருமை தெரியும். சாப்பிட்டு முடித்துவிட்டு பணம் இல்லை என்பான். சரி அப்புறமா கொடு என்றுதான் சொல்வார்கள். அடையார் ஆனந்த பவன் அப்படிச் சொல்லுமா? லால்குடியில் மணி ஐயர் கடை 1995ல் மூடப்பட்டது. ஏன் அடையார் ஆனந்த பவன் லால்குடியில் திறக்கவில்லை?
சில வருடங்களுக்கு முன் திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள கடைக்குச் சென்றேன். ஆரஞ்ச் ஜூஸ் ஒன்று சாப்பிட்டேன். பில் வந்தது. அதிர்ந்து போனேன். ''என்ன சார் இது! வாசலில் மரத்தடியில் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் ஜூஸ் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே''! என்று கேட்டேன். மேலாளர் என்று ஒருவர் வந்தார். ''சார் எங்க எல்லா கிளைகளிலும் ஒரே விலைதான். சென்னையிலும் இதே விலை. இங்கேயும் இதே விலை. அதனால் தான் அப்படி. எங்க சிஸ்டம் அப்படி சார்'', என்று சொன்னார்.
பதிலேதும் பேசாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன். கிராமங்களில் நடத்தும் உணவகங்கள் சிஸ்டத்தின் பெயரில் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.
எனக்கு மணி ஐயர் கடையின் உரிமையாளரைத் தெரியும் என்று லால்குடியில் வசிக்கும் எல்லோரும் சொல்லுவார்கள். அடையார் ஆனந்த பவனின் உரிமையாளரைத்தெரியும் என்று எத்தனை பேர் சொல்லுவார்கள்? ஹோட்டல் தொழில் என்பது சுவையோடு நின்றுவிடாது. தனி மனித தொடர்பும், நட்பும் அவசியம். மூடிய பிராமணர்களின் கடைகள் ஒன்றுகூட வாடிக்கையாளர் குறைவால் நஷ்டப்பட்டு மூடவில்லை. வாரிசுகளின் மாற்றுத் தொழில்களால் வந்த மாற்றமே இது.
அடையார் ஆனந்த பவன் உரிமையாளரே! திரு. ராமசாமி நாயக்கர் மறைந்து 50 வருடங்களுக்குப் பிறகுதான் பிராமணர் ஹோட்டல்கள் அழிந்ததா? என்ன பிதற்றல் இது. உங்கள் தொழிலில், சுவையில், தரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்க மாட்டீர்கள். ஆனால், இன்றுகூட மணி ஐயர் கடையின் உரிமையாளர் மகன் தங்களுடைய வளர்ச்சிக்கு உழைப்பும், உண்மை, நேர்மை, சுவை, மனிதர்களுடனான தனிப்பட்ட நல்லுறவு ஆகியவற்றையே காரணமாக சொல்கிறார். நீங்க எப்படி?
அந்தக் காலம் உண்மையிலேயே சிறப்பானதுதான். இப்படி சித்ரா லட்சுமணம் போல தத்துபித்தென்று கேள்வி கேட்கவும் ஆட்கள் இல்லை. எதையாவது பதிலாக உளறிக்கொட்டி பிரபல்யம் தேடிக்கொள்ளும் வாய்ப்புகளும் அடையார் ஆனந்த பவன் உரிமையாளரைப் போன்றவர்களுக்கும் இல்லை. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர வளர மனிதனின் மனம் சிறுமைப்பட்டு போய்விட்டது. அதை திரு. சித்ரா லட்சுமணம் பேட்டி புரிய வைத்துள்ளது.
நான் திருச்சிக்குச் சென்றால், திருச்சியின் எந்த மூலையில் இருந்தாலும் சாஸ்திரி சாலையில் உள்ள அடையார் ஆனந்த பவன் கிளைக்குச் சென்று சாப்பிடுவது எனது இது நாள் வழக்கம். இந்தப் பேட்டி என்னை சிந்திக்க வைத்துவிட்டது. இனி தெரு ஓர கையேந்தி பவனில் சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், அல்லது பசியோடு வீட்டுக்குத் திரும்புவேன்.
No comments:
Post a Comment