"ஒரு தலை ராகம் படத்தில் குலுக்கல் முறையில் கதாநாயகனானேன்!!"
- ஒரு தலை ராகம் சங்கர்.
.. . .
கடந்த ஆண்டு "ஓர்மகள்" என்ற சினிமா ஷூட்டிங்குக்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார் நடிகர் ஒருதலை ராகம் சங்கர். அவரை குமுதம் வார இதழுக்காக பேட்டி கண்டேன். பேட்டியில் இருந்து ஒரு பகுதி..
"நான் டிகிரி படிச்சுட்டு இருந்தபோது பாதியில் விட்டுட்டு சென்னையில் சவுத் இந்தியா பிலிம் சேம்பர் ஆஃப் ஆக்ஷன்.ல் நான் ஆக்டிங் கோர்ஸ் படிச்சுட்டு இருந்தேன். அப்போ என்னோட பேட்ச்சில் சிரஞ்சீவி நடிச்சிட்டு இருந்தாரு.. இன்ஸ்ட்டிடியூட்டில் என்னுடன் ரவீந்தர், ஸ்ரீநாத், சந்திரசேகர், கைலாஷ்(தும்பு) எல்லோரும் படிச்சாங்க. அப்படி இருக்கிறப்பதான் ஒருதலை ராகம் ஆடிஷனுக்கு நாங்க போனோம். அதில் கடைசி கட்டத்தில் ஹீரோவா ஸ்ரீநாத்தைப்போடுறதா? என்னைப்போடுறதா?ன்னு ஒரு பெரிய சர்ச்சையே நடந்திருக்கு..அதை அப்புறம்தான் தெரிஞ்சு கிட்டேன். கடைசியில் சீட்டு எழுதிப்போட்டு என்னை தேர்வு செய்ததா அறிஞ்சேன். நான் சென்னையில் படிச்சதுனால என்னால அப்பவே தமிழ் நல்லா பேசவரும். இந்த படத்தோட கதையை சென்னையில் இருந்து மாயவரத்துக்கு ரெயிலில் போகும்போது டி.ராஜேந்தர் சார் சொன்னாரு .எம்.இப்ராகிம் சார்தான் டைரக்ட் செய்தாரு..தயாரிப்பாளரும் அவர்தான். டி.ராஜேந்தர் சார் வசனம், நடிப்பு சொல்லித்தருவாரு. இரண்டு மாசத்துக்கு மேலே மாயவரத்துல ஷூட்டிங் நடந்துச்சு..அன்றைய டிரண்ட் படியான பெல்பாட்டம் பேண்ட், காதை மறைத்து ஸ்டெப் கட்டிங் தலை என படத்துல நடிச்ச எல்லோரையும் பார்க்கலாம். ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒண்ணும் நடிக்கலை..இயல்பா படத்துல வந்து போயிட்டிருந்தோம். அந்த 21 வயசுல அந்த படத்துல நடிச்ச அனுபவம் எனக்கு ரொம்ப புதுமையா இருந்துச்சு. டைரக்டர் என்ன சொன்னாரோ அதன்படி நடிச்சேன். படத்தில் தமிழில் டப்பிங் நான் தான் பேசினேன். ராபர்ட் -ராஜசேகர் ஒளிப்பதிவு செய்தாங்க.ஷூட்டிங் முடிஞ்சதும் படம் ரிலீசாகும் நாளுக்காக எல்லோரும் வெயிட் செய்தோம். இந்த படம் ரிலீஸ் ஆனா படத்துல நடிச்சவங்க டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் வாழ்வு கிடைக்கும்னு நம்புனோம். படத்தை டிஸ்டிரிபியூட்டர்களுக்கு பல தடவை போட்டுக்காட்டினாங்க..யாருக்குமே முதலில் நல்ல கருத்து இல்லை படத்தைப்பத்தி..எல்லோருமே புதுமுகங்கள்..இப்படி ஒரு நெகட்டிவ் முடிவு கொண்ட கதையை எப்படி ரசிகர்கள் ஏத்துப்பாங்கன்னு சொல்லி படத்தை வாங்க தயங்குனாங்க. கிட்டத்தட்ட 99 ஷோ டிஸ்டிரிபியூட்டர்களுக்காக போட்டாங்க..ம்ஹூம் யாருமே கண்டுக்கலை. அப்ப கடைசியா100வது தடவையா இந்த படத்தை டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு போட்டுக்காண்பிப்பேன். அப்பவும் படம் போகலைன்னா சிங்கப்பூருக்குப்போகிறேன்னு இப்ராஹிம் சார் சொன்னார். அப்பவும் யாரும் வாங்கலை.. அவர் சிங்கப்பூர் போய்விட்டு இரண்டு மாசத்துக்கு அப்புறம் திரும்பி வந்து சொந்தமா படத்தை ரிலீஸ் செய்தாரு...மொதல்ல சரியா தியேட்டர் கிடைக்கலை.கடைசியில் முதலில் 7 பிரிண்டுகள் படத்துக்காகப்போடப்பட்டு சென்னை, மதுரை,கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உட்பட 7 ஊர்களில் படம் ரிலீஸ் ஆனது. முதல் நாள் நல்ல அபிப்பிராயம் ஒன்றும் படத்தைப்பற்றி வரவில்லை. இரண்டாம் நாள் பரவாயில்லை.புது முகங்கள் என பேச்சு கிளம்பியது. நான்காம் நாள் பத்திரிகைகளில் படம் குறித்து பேச்சு வந்த பின்னர் படம் பிக்கப் ஆனது. ஒரே நாள் இரவில் நாங்கள் கொண்டாடப்பட்டோம்...."
அதன் பின் ஒரு தலை ராகம் தமிழ் சினிமாவின் மைல் கல் ஆனது.
No comments:
Post a Comment