ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் நோக்கில், திரிண முல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்தன. இதனால், பொது வேட்பாளர் பற்றி முடிவு எடுக்க முடியாமல், கூட்டம் தோல்வியில் முடிந்தது,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 25ல் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்கிறது. லோக்சபாவுக்கு 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கு வாய்ப்பாக, ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
பொது வேட்பாளர்
அதே நேரத்தில், லோக்சபா தேர்தலில் தன் தலைமையில் எதிர்க்கட்சி கள் கூட்டணி அமைய, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி விரும்புகிறார். இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை முடிவு செய்ய, அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
தங்களை முந்தி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை மம்தா கூட்டியதை, காங்கிரஸ் விரும்ப வில்லை. மம்தாவின் முடிவை கம்யூ., கட்சிகளும் எதிர்த்தன. எனினும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கெடுத்துவிட்டதாக யாரும் கூறிவிடக் கூடாது என்பதற்காக, மம்தா கூட்டிய கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மற்றும் முடிவு செய்தன.
இந்நிலையில், புதுடில்லியில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை, ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அகாலிதளம், தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.காங்கிரஸ் சார்பில் மல்லி கார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், பிரபுல் படேல் பங்கேற்றனர்.
சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மக்கள் ஜனநாயக கட்சி, முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
ஜனாதிபதி தேர்தல்
ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட்நாயக், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளுடன் எப்போதும் கைகோர்த்ததில்லை. ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும், இதே பாணியை தான் கடைப்பிடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போதே, ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இருவரும் சம்மதித்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
பங்கேற்கவில்லை
அதனால், மம்தா கூட்டத்தை அவர்கள் புறக்கணிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது தான். 'இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளோம். ஒரு மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மம்தா அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்றால், அது கட்சியின் மதிப்பை குறைத்துவிடும்' என கருதி, ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.
தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ் கூட்டத்தை புறக்கணித்தது தான், பலரது புருவத்தை உயர்த்தியது. பா.ஜ., காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் தன் எண்ணத்துக்கு இது தடையாக இருக்கும் என்பதால், அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அகாலிதளமும் காங்கிரசுடன் கைகோர்க்க தயாராக இல்லை. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி, துவக்கத்திலேயே தோல்வியடைந்துவிட்டது என்பது தான் நிதர்சனம்.
கட்சிகள் விருப்பம்
அனைத்துக் கட்சிகளும் சரத் பவார் பெயரையே முன்வைக்கின்றன. அவரோ மறுக்கிறார். அனைத்து கட்சிகளும் முழு ஆதரவை அளித்தால், அவரே பொது வேட்பாளர்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை கட்சி நியமித்துள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
நட்டா, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட சில கட்சிகளிடம் ஆலோசனை நடத்தினார்.பிரதமர் மோடி, 'ஜி 7' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு 27ல் செல்கிறார். எனவே, வரும் 22 அல்லது 23ல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பா.ஜ., அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மம்தா கூட்டிய கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க சரத் பவார் மறுத்து விட்டார்.
மஹாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோரின் பெயர்களை மம்தா பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது; 21ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment