Tuesday, June 14, 2022

அ.தி.மு.க.,வில் வெடிக்குது ஒற்றைத் தலைமை! கோரிக்கை.

 எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல், ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை, அ.தி.மு.க.,வில் வெடிக்கத் துவங்கி உள்ளது. சென்னையில் நேற்று நான்கரை மணி நேரம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அடிக்கோடிட்டு காட்டினார்.



ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல் ஏற்படுவதும், இரண்டாம் கட்ட தலைவர்கள் சமாதானம் செய்வதும் தொடர்கிறது.


பொதுக்குழுக் கூட்டம்



கடந்த சட்டசபை தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மோதல் ஏற்பட்டது. தேர்தலில் கட்சி தோல்வி அடைந்த பின், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. அதில், பழனிசாமியே வெற்றி பெற்றார். கட்சி நிர்வாகிகளை, தன் ஆதரவாளர்களாக மாற்றியதன் வாயிலாக, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பழனிசாமி விரும்புகிறார். இந்நிலையில், கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில், மீண்டும் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கு ஒப்புதல் அளிக்க, செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.


ஒப்புதல்



காலை 11:00 மணிக்கு கூட்டம் துவங்கியதும், பழனிசாமி பேசியதாவது:பொதுக்குழுக் கூட்டத்திற்கு, ஒவ்வொரு முறையும் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்போம். இம்முறை புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வைத்து கூட்டம் நடத்தி, கட்சி தேர்தல் முடிவுக்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின், அந்த விபரத்தை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. எனவே, சிறப்பு அழைப்பாளர்களுக்கு இம்முறை அழைப்பு இல்லை. புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பின், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர். அது முடிவுக்கு வந்ததும், மாதவரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி எழுந்து, 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்' என திடீரென குரல் எழுப்பினார்.அதனால் ஏற்பட்ட சலசலப்புக்கு இடையில், ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் சூடுபிடித்தது. இந்த பிரச்னையில், ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை கூறியதால், காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மாலை 3:30 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில், 30 பேர் பேசி உள்ளனர். பெரும்பாலானோர் ஒற்றைத் தலைமை அவசியம் என வலியுறுத்தி உள்ளனர். சிலர், பழனிசாமி தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.


கருத்து வேறுபாடு



இது குறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பேசினர்.
சிலர் பழனிசாமியை முன்மொழிந்தனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'ஒற்றைத் தலைமை தொடர்பாக, அனைவரையும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், 'பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு தற்போது தேவை இல்லாதது' என்றார்.
கட்சி அமைப்பு செயலர் ஜெ.சி.டி.பிரபாகர் பேசுகையில், 'பொதுக்குழு குறித்து பேச அழைத்து விட்டு, திடீரென ஒற்றைத் தலைமை குறித்து பேச அனுமதிப்பது, தவறான முன்னுதாரணம்.
'தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தோம் என்று இதுவரை விவாதிக்கவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுகளை நாம் இழந்துள்ளோம். இது குறித்து பேசவில்லை. கட்சி பேராபத்தை நோக்கி செல்கிறது. இப்போது, இது தேவையில்லாத பேச்சு' என காட்டமாக கூறினார்.

அவருக்கு எதிராக, பழனிசாமி ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர்; அவர்களை வைத்திலிங்கம் கண்டித்தார்.முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசும்போது, 'நீங்கள் இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது, எங்களுக்கு தெரியும். தொண்டர்களும், பத்திரிகையாளர்களும், உங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறுகின்றனர்.'இருவரும் ஒரே விஷயத்தில், வெவ்வேறு கருத்துக்களை கூறும்போது, கட்சியினருக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்' என்றார்.


வலியுறுத்தல்



பேசியவர்களில் பெரும்பாலானோர், ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய நிலையில், பன்னீர்செல்வம் மவுனமாக இருந்தார். பழனிசாமி மட்டும், 'நாங்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம்' என கூறி, கூட்டத்தை நிறைவு செய்தார்.கட்சியில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதற்கு, நேற்றைய கூட்டத்தில் விதை துாவப்பட்டுள்ளது. இது, எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, இனிமேல் தான் தெரியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: இந்த கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், ஒற்றைத் தலைமை தான் தேவை என கருத்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க., வலிமையான இயக்கம் என்ற முறையில், ஒற்றைத் தலைமை அவசியம் என வலியுறுத்தினர். ஒற்றைத் தலைமை யார் என்பதை, கட்சி முடிவு செய்யும். ஒற்றைத் தலைமைக்கு செயல் வடிவம் கொடுப்பதை, கட்சி முடிவு செய்யும். சசிகலாவுக்கும், கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பன்னீர்செல்வம் - பழனிசாமி தனித்தனி ஆலோசனை


அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என வெளிப்படையாக பேச, பெரும்பாலானோர் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றனர். பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு, ஒற்றைத் தலைமை பிரச்னையை எழுப்பியதை, பன்னீர்செல்வம் தரப்பு விரும்பவில்லை. மேலும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கக் கூடாது என்பதில், பழனிசாமி தரப்பினர் உறுதியாக இருக்க, பன்னீர்செல்வம் தரப்பினர், அவர்களை அழைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.இந்த சூழ்நிலையில், நேற்று இரவு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன், தங்கள் வீட்டில் தனி ஆலோசனை நடத்தி உள்ளனர்.


தொண்டர்கள் கோஷம்!


அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஒற்றைத் தலைமை வேண்டும் என, தொண்டர்கள் சிலர் கோஷமிட்டனர். அதற்கு எதிராக, பன்னீர்செல்வத்தை வாழ்த்தி மற்றொரு தரப்பினர் கோஷமிட பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று பகல் 1:00 மணி அளவில் சிலர் கூடி, 'ஒற்றைத் தலைமை வேண்டும்' எனக் கோஷமிட்டனர். 'தொண்டர்கள் ஒன்றுபட, நல்லாட்சி மலர, ஒற்றைத் தலைமை வேண்டும்' என்றனர். அப்போது பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சூழ்ந்து, 'பன்னீர்செல்வம் வாழ்க' எனக் கோஷமிட்டதுடன், 'ஜெயலலிதா அடையாளம் காட்டிய பன்னீர்செல்வமே ஒற்றைத் தலைமை' எனக் கோஷமிட்டனர். இதனால், ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கோஷமிட்டவர்கள், அங்கிருந்து நைசாக வெளியேறினர்.


திரும்பி சென்ற 'மாஜி' எம்.பி.,


முன்னாள் எம்.பி.,யும், அமைப்பு செயலருமான மைத்ரேயன், காலை 9:45 மணிக்கு கட்சி அலுவலகம் வந்தார். அப்போது, கூட்டம் நடக்கும் அரங்கிற்குள் மொபைல் போன் எடுத்துச் செல்லக் கூடாது என, அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். 'என் சகோதரி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும். எனவே, போன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்; அவர்கள் ஏற்கவில்லை. எனவே, அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் வீட்டுக்கு சென்று விட்டார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...