சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதி அருகே கடலில் ரூ.80 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
* தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் :
மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு ரூ. பல கோடியில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் 134 அடி உயரத்துக்கு பேனா வடிவ நினைவு சின்னம் எதற்கு ரூ. 80 கோடியில் இதை அமைப்பதால் யாருக்கு என்ன லாபம். அதற்கு பதில் இதற்கான நிதியை சாலை உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தலாம். நினைவுச்சின்னம் அவசியம் எனில் தி.மு.க., அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து அமைத்து கொள்ள வேண்டும்.
* நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் :
மெரினாவில் எந்த சின்னமும் நிறுவ முடியாது, அது நடக்கப் போவது இல்லை, அதை நிறுவ நான் விடப் போவதும் இல்லை. இப்போது பேனாவை வைப்பீர்கள். பின் கண்ணாடி வைப்பீர்களா ஒருவேளை உதயநிதி முதல்வர் ஆகி விடுகிறார் என்றால் என் அப்பா ஒரு ' விக் ' வைத்திருந்தார், என சொல்லி கடலுக்குள் விக் வைப்பீர்களா? நீங்கள் சொல்லுங்கள். இது யாருடைய காசு இதெல்லாம் தேவையில்லாத சேட்டை. பேனா வைக்கிறேன், கீேழ ஒரு நோட்டு வைக்கிறேன், சமாதியில் வடை காபி வைப்பதையே நான் திட்டிக் கொண்டிருக்கிறேன். இதெல்லாம் கொழுப்புதான்.
* வேடசந்துாரில் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், நோட்டு புத்தகங்கள் வழங்க முடியாத தமிழக அரசு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதி அருகே ரூ.80 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையில்லாதது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனக்குமுறலில் உள்ளனர். அரசின் நிதி நிலை சீராக இல்லை என கூறும் தி.மு.க., அரசு பேனா நினைவு சின்னம் அமைப்பதை ஹிந்து தமிழர் கட்சி கண்டிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment