கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளி கலவரவழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை துவக்கி உள்ளனர். இதில் பள்ளி தாளாளர் மீது ஏற்கனவே அப்பகுதி அரசியல் கட்சியினர் சில அமைப்புகளிடம் இருந்த வன்மமே கலவரத்திற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரைச் சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதி தரை தளத்தில்ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீயிட்டு பள்ளியில் உள்ள பொருட்களை கலவரக்காரர்கள் சூறையாடினர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
குழுவில் ஆறு டி.எஸ்.பி.க்கள், ஒன்பது இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று சைபர் கிரைம் போலீசார் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர்.இக்குழுவினர் நேற்று காலை உளுந்துார்பேட்டை பாலியில் உள்ள சிறப்பு காவல் படை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின் சக்தி மெட்ரிக் பள்ளியில் நேற்று மாலை 4:00 மணிக்கு டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கலவரக்காரர்களிடம் இருந்துள்ளது. இதற்காக மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.அந்த கும்பல் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டுஉள்ளது. இதற்கு முழு காரணம் பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான். பள்ளி தாளாளர் ரவிக்குமார் அதிக கடனில் இருந்துள்ளார். இதனால் கல்விக் கட்டணத்தை கறாராக வசூலித்துள்ளார்.
நன்கொடை கேட்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் அரசியல் கட்சியாக இருந்தாலும் தர மறுத்துஉள்ளார். இதனால் ரவிக்குமார் மீது பல்வேறு அமைப்புகளுக்கு வன்மம் இருந்துஉள்ளது.பெற்றோரிடமும் ரவிக்குமார் கறாராக நடந்துள்ளார். தன் தாய் சிறிய அளவில் துவங்கிய பள்ளியை ரவிக்குமார் வங்கியில் கடன் பெற்று விரிவுபடுத்தியுள்ளார்.மாணவி இறந்த பிறகு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் ரவிக்குமாரிடம் 'டீல்' பேசியுள்ளனர். அதற்கும் அவர் பணியவில்லை.
இதனால் டீல் பேசிய தரப்பினர் கடுப்பாகியுள்ளனர். இப்படி பல்வேறு தரப்பினரிடையே ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்ததே இந்த கலவரத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாணவி மரணம் குறித்த விசாரணையும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.இதற்கிடையே மாணவியின் உடலை பெற்றோர் இதுவரை பெற்று செல்லாததால் எட்டாவது நாளாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் பிணவறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் வைக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் ஒப்படைப்பு
கலவரத்தைப் பயன்படுத்தி எடுத்துச் செல்லப்பட்ட பள்ளிக்கு சொந்தமான பொருட்கள் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன. பள்ளி நிர்வாகம் சார்பில் பொருட்கள் சேகரிக்கப்பட்டு கணியாமூர் கும்பகொட்டாய் கோவில் அருகே வைத்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள நிர்வாகியின் வீட்டில் புகுந்து 6 சவரனில் ௧௭ ஜோடி தங்க தோடுகளை திருடிச் சென்ற நபர் ஒருவர் தாமாக முன்வந்து சின்னசேலம் போலீசாரிடம் அதை ஒப்படைத்தார்.இதற்கிடையே பள்ளியில் விழுப்புரம் தடயவியல் குழுவினர் நேற்று தடயங்களை சேகரித்தனர்.அப்போது பள்ளி நுழைவு வாயில் அருகில் தீயில் எரிந்து சேதமடைந்த கம்ப்யூட்டர்களின் 'ஹார்டு டிஸ்க்'குகளை நிபுணர் குழுவினர் கைப்பற்றினர்.
குழந்தைகள் ஆணையம் தகவல்மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி தலைமையிலான உறுப்பினர்கள் நேற்று பள்ளியில் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:இந்த மேல்நிலைப் பள்ளியில் விடுதி உரிய அனுமதி பெறாமல் இயங்கியுள்ளது. மாணவி இறப்பு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் அனுமதி பெறாமல் விடுதி இயங்கியது தொடர்பான சட்டப்பிரிவை சேர்க்க ஆணையம் பரிந்துரை செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசாரின் தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் நடந்த அடுத்த நாளே, சைபர் கிரைம் போலீசார் மூலம் 'தம் டவர்' தகவல் சேகரித்து குற்றவாளிகளை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கலவரம் நடந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு தான், தம் டவர் தகவல் சேகரிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த தாமதத்தால் குற்றவாளிகள் தலைமறைவாகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment