Thursday, July 21, 2022

ஆவடி நிலம் கோபியில் பதிவு: அன்னூர் சார்-பதிவாளர் 'சஸ்பெண்ட்'

 சென்னை ஆவடியில் பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலத்தை, கோபிச்செட்டிபாளையம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது தொடர்பாக, அன்னுார் சார்-பதிவாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், அன்னுார் சார்-பதிவாளராக இருந்தவர் குப்புராஜ். இவரை 'சஸ்பெண்ட்' செய்து, தமிழக பதிவுத்துறை ஐ.ஜி., சிவன் அருள், கடந்த 19ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை, கோவை பதிவுத்துறை அலுவலக வட்டாரங்களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்புராஜ், இதற்கு முன்பாக, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் ஜாயிண்ட் 2 அலுவலகத்தில் சார்-பதிவாளராக இருந்த போது நடந்த தவறுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


மதிப்பு அறிக்கை


சென்னை ஆவடியில், ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தை பதிவு செய்வதற்கு, சென்னை கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் தடையின்மை் சான்று பெற வேண்டுமென்ற உத்தரவு உள்ளது. அந்த நிலம், கோபிச்செட்டிபாளையம் ஜாயிண்ட் 2 அலுவலகத்தில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான தானம் செட்டில்மென்ட் பத்திரமாக பதிவுக்கு வந்துள்ளது.

வழக்கமாக, இதுபோன்று சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்துக்கு வெளியிலுள்ள சொத்தைப் பதிவு செய்வதற்கு, சொத்து உள்ள பகுதி அலுவலகத்தில் மதிப்பு அறிக்கை கோரப்படும்.புறம்போக்கு நிலமா, வேறு எதுவும் 'அட்டாச்மென்ட்', தடை எதுவும் உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து, இந்த மதிப்பு அறிக்கை அனுப்பப்படும். அதன் பின்பே, அந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும். அதுவரை நிலுவை ஆவணமாக வைத்திருக்க வேண்டும். அதேபோன்று இந்த சொத்து தொடர்பாகவும், ஆவடி சார்-பதிவாளருக்கு, குப்புராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.


latest tamil news


விசாரணை


அதற்கு, 'எந்த தடையும் இல்லை' என்று ஆவடி சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து மதிப்பு அறிக்கை வந்துள்ளது. ஆனால் இந்த கடிதம் வரும்முன்பே, அந்த பதிவுக்கு நிலுவை ஆவணப்பதிவு எண் தரப்படாமல், ரெகுலர் எண் தரப்பட்டுள்ளது. மதிப்பு அறிக்கை வந்த பின்பே, பத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்துக்கு கலெக்டரிடம் தடையின்மை சான்று பெறாமல், பதிவு செய்யப்பட்டது குறித்து புகார் எழுந்ததும், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், ஆவடி சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து மதிப்பு அறிக்கையே அனுப்பவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதனால், போலியாக அந்த கடிதம் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது.


அலுவலர்கள் குமுறல்


ஆனால், வெளியூர் சொத்து தொடர்பான ஆவணத்தை, நிலுவை ஆவண எண் கொடுத்து பதிவு செய்யாமல், ரெகுலர் எண் கொடுத்து பதிவு செய்தது உள் நோக்கத்துடன் நடந்திருப்பதாகக் கருதி, அவரை ஐ.ஜி., சஸ்பெண்ட் செய்திருப்பதாக, பதிவுத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பதிவுத்துறை அலுவலகங்களில், ஆவணங்களுக்கான எண்களை வழங்கும் பணியை, 'அவுட்சோர்சிங்'கில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களே மேற்கொள்கின்றனர். அதைச் சரி பார்க்காமல் வழங்கியதே, சார்-பதிவாளரின் தவறு. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கடந்த ஓராண்டில், பதிவுத்துறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், குப்புராஜ் மீதும் அவசர நடவடிக்கை பாய்ந்துள்ளதாக பதிவுத்துறை அலுவலர்கள் குமுறுகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...