"உத்தவா".... இந்த காய்ந்த மரத்தை வைத்து அடுப்பு பற்றவைக்கச் சொல் " - என்ற விட்டல பக்தன் - விளக்கும் எளிய கதை
மரங்கள் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்கு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில குடிசைகள், ஒன்றில் தான் ஏக்நாத் வசித்து வந்தார்.
ப்ரதிஷ்டானபுரம் என்கிற அந்த ஊருக்கு வெளியே தான் அவரது குடில் இருந்தது அதில் சிலர் வீடற்றோர் தங்கியிருந்தனர் அவருடன் அந்தக் குடிசையின் தீபம் தான் தெரு வெளிச்சம்.
அன்று கொட்டோ கொட்டு என்று பேய் மழை. வானம் பொத்துக் கொண்டது போல். வயிற்றைக் கலக்கும் இடியின் பேரிரைச்சல். சூறாவளி போல் காற்று மரங்களைக் கூட ஆட்டுவித்தது. குளிர் உடம்பின் தோலைப் பிளந்து உள்ளே சென்றது.
ஊரடங்கி வெகு நேரமாகியது. நரிகளின் ஊளை கூட அடங்கிவிட்டதே.
பிரதிஷ்டானபுரம் பாதையில் ஒரு மனிதன் தொப்பலாக நனைந்து அவர் குடிசையின் வெளிச்சத்தை குறிப்பாக வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான்.
வெளியூரிலிருந்து ஒரு பிராமணர் வேறு எங்கோ ஊருக்கு நடந்து செல்பவர் பிரதிஷ்டானபுரம் வழியாக வந்தவர், பசியும் தாகமுமாக இரவு வந்து சேர்ந்தார்.
பிரதிஷ்டானபுரம் பெரிய ஊராச்சே எங்காவது இரவு யார் வீட்டிலாவது தங்கலாம் உணவும் கிடைக்கும் என்று ஏங்கினார்.
யாரோ ஒரு புண்யவான் இதோ இந்த பாதையில் சென்றால் ரெண்டு காத தூரத்தில் ஏக்நாத் என்ற ஒருவரின் ஆஸ்ரமம் தெரியும், அங்கே அவர் எப்போது யார் வந்தாலும் ஏதாவது உணவு வைத்திருந்து கொடுப்பார். இரவும் அங்கேயே மழைக்கு தங்கலாம், சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி போல் இந்த வார்த்தை பிராமணருக்கு இனித்தது.
இப்போது அவர் ஏக்நாத் குடிசை வாசலுக்கு வந்து விட்டார். யாரோ வாசலில் உள்ளே வர விரும்புவதை பார்த்த ஏக்நாத் தானே நேரில் ஓடி கதவைத்திறந்து அவரை உள்ளே அழைத்தார்.
வந்த மனிதர் தொப்பமாக நனைந்து உடல் வெடவெட வென்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.
ஏக்நாத் தன்னுடைய வஸ்த்ரத்தைக் கொடுத்து அவரது ஈரத்துணிகளை வாங்கி காய வைத்து தருவதற்கு, “கிரிஜா கிரிஜா, கொஞ்சம் அடுப்பை மூட்டி இந்த ஈர வஸ்த்ரங்களை அனலில் வாட்டிக்கொடு. அப்படியே உணவு ஏதாவது சூடாக செய்து கொண்டுவா. விட்டலன் பசியோடு வந்திருக்கிறார்." என்றார்.
கணவனுக்கு ஏற்ற மனைவி கிரிஜா. அடுப்பை மூட்டினார்.
புகை மண்டலம். ஊதாங்குழலின் இடைவிடா சப்தமே தவிர அடுப்பு பற்றவைக்க முடியவில்லை அவர்களிடமிருந்த விறகுகள் இடைவிடா மழையில் நனைந்து ஈரமாகி பற்றவைக்க முடியவில்லை.
சற்று நேரம் காத்திருந்து விட்டு நிலைமையை புரிந்து கொண்டார் ஏக்நாத். தனது சிஷ்யன் உத்தவனை அழைத்தார்.
"உத்தவா கிரிஜாவால் அடுப்பை பற்றவைக்க முடியவில்லை. ஏதேனும் காய்ந்த கட்டை இருக்கிறதா பாரேன். ஏதாவது உணவு தயாரிக்க வேண்டுமே."
"குருநாதா, நான் எங்கும் தேடியும் துளியும் காய்ந்த கட்டைகளே இல்லையே. எல்லாம் ஈரமாகவே இருக்கிறதே "
சுற்று முற்றும் பார்த்த ஏக்நாத்தின் கண்களில் தான் உபயோகிக்கும் அவரது பழைய மரக்கட்டில் சமய சஞ்சீவியாகப் பட்டது.
உடனே அவருக்கு உற்சாகம் தலைக்கேறியது
உத்தவா, உடனே இந்த கட்டிலை உடை. கிரிஜாவிடம் கொடுத்து இந்த காய்ந்த மரத்தை வைத்து அடுப்பு பற்றவைக்கச் சொல்"
உத்தவன் குருவின் ஆக்னையை மீறுவானா?
கட்டில் உடைக்கப்பட்டுத் துண்டுகளானது. அடுப்பு எரிந்தது சூடான உணவு ஏதோ தயாராகியது. வந்த அதிதியின் பசியும் காணமல் போனது. வந்த மனிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
வந்தவருக்கோ பரம சந்தோஷம். ஏக்நாத் சுவாமி! நான் பண்டரிபுரம் செல்கிறேன்.
போகும் வழியில் பல ஊர்களை எல்லாம் அடைந்து அங்கங்கு ஆலய தர்சனம் செய்து த்யானம் செய்து விட்டு செல்வேன். இருக்கும் இடம் ஆலண்டி.
உங்களைப் பற்றி நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்.
உங்கள் இனிமையான அபங்கங்களையும் ப்ரவச்சனங்களையும் எனக்கு கேட்க வேண்டும் என்ற வெகுநாள் விருப்பம் இன்று நிறைவேறியது. உங்கள் உதார குணம் பற்றி நிறைய அறிந்திருந்தாலும் பார்த்ததில்லை. நிதர்சனமாக நான் இன்றே பார்த்து விட்டேன்.
தனக்கென வாழா பிறர்க்குரியாளன் என்ற சொல்லுக்குத் தப்பாமல் பிறந்தவர் நீங்கள் என சொல்லி முடித்தார் விருந்தினர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.
No comments:
Post a Comment