கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு பின் நடந்த கலவரத்தை தடுத்திருக்க முடியும் என, நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, பாதுகாப்பு பொறியாளர் பிரபு காந்தி கூறியதாவது:பள்ளி போன்ற பொது இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதன் நிர்வாகம் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என, அரசு தரப்பில், அவசர கால மீட்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பள்ளியிலும் அதன்படி நடந்திருந்தால், கலவரம் வெடித்திருக்காது.
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து, மாணவி ஸ்ரீமதி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என, பள்ளி நிர்வாகம் கூறுகிறது. அதை அப்படியே உண்மை என எடுத்து கொள்வோம். இப்படி ஒரு சம்பவம் நடந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்? பள்ளி ஊழியர்கள், நிர்வாகத்திடம் விஷயத்தை எடுத்து சென்றிருக்க வேண்டும். பள்ளியோ, அலுவலகமோ இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால், அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களுக்காக, நிர்வாகம் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்திருக்க வேண்டும் என அரசு உத்தரவு சொல்கிறது.
முதல் கடமை
அதன் அடிப்படையில், மாணவி இறந்து விட்டார் என்பதை அறிந்ததும், அந்த ஏழு பேர் கொண்ட கமிட்டிக்கு தெரியப்படுத்தி, யோசனை கேட்டிருக்க வேண்டும். இது தான் பள்ளி நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முதல் கடமை. பிரச்னையான நிமிடங்களில், ஏழு பேர் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக, மாநில அரசு தரப்பில், அவர்களுக்கு சில யோசனைகளும், செய்ய வேண்டியவை குறித்த வகுப்புகளும் எடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் அதன் அடிப்படையில் செயல்பட்டு, பிரச்னையில் சிக்கிய பள்ளியை காப்பாற்றுவதோடு, மாணவர்களின் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி இருப்பர். ஒரு பள்ளியில் அசம்பாவிதம் நடப்பதாக வைத்து கொள்வோம். உடனே, அவசர கால மீட்பு நடவடிக்கை குழுவினர்,
தகவலை பள்ளி நிர்வாகத்துக்கு கூறி, ஆலோசனை கேட்டு, அடுத்தடுத்த தகவல்களை மாவட்ட நிர்வாகம், வருவாய், காவல் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.அதிகாரிகள் உடனே களம் இறங்கி செயல்பட்டிருப்பர். அதுவே, பள்ளிக்கு சாதகமாக இருந்திருக்கும். கலவரக்காரர்கள் தடுக்கப்பட்டிருப்பர். பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளின் மேல் மாடி ஓரத்தில், கம்பி 'கிரில்' அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என, விதி உள்ளது. அதை ஏன் பள்ளி நிர்வாகம் செய்யவில்லை என்ற, கேள்வி எழுகிறது. கள்ளக்குறிச்சி கலவரம் நடந்து முடிந்த பின், கலெக்டரும், அமைச்சர்களும் அங்கு செல்கின்றனர். முன் கூட்டியே மாவட்ட நிர்வாகம், பள்ளி வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தி இருந்தால், மக்கள் வன்
முறையை நோக்கி சென்று இருக்க மாட்டார்கள். கலவரம், வன்முறை என்றால், பெரும் கூட்டத்தால் குற்றஞ் சாட்டப்படுவோர் கைது செய்யப்படுவது வாடிக்கை. அதை பின்பற்றி, கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், செயலர், முதல்வர் உள்ளிட்டோரை உடனே கைது செய்திருந்தால், கலவரம் நடந்து இருக்காது.
காலதாமதம்
அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்படும் குழுவினர், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசிப்பர். பள்ளி போன்ற பெரிய நிர்வாகங்களில், ஆபத்தை எதிர்கொள்வது எப்படி என்று ஒத்திகையும் பார்ப்பர்.அப்படி எதுவுமே கள்ளக்குறிச்சி பள்ளியில் நடக்கவில்லை. கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தியது போல, மாவட்ட நிர்வாகம், காவல் துறை என, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் காலம் தாழ்த்தியதால், விபரீதம் நடந்து முடிந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment