சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டுதோறும் முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொள்வர். அந்த புனித பயணத்துக்கு உதவி செய்வதற்காக, மாநிலத்தில் ஹஜ் கமிட்டி உண்டு. கமிட்டி உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமிக்கப்படுவர்.
ஹஜ் பயணியருக்கு, விமான கட்டண சலுகை உட்பட பல சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் ஹஜ் கமிட்டி வாயிலாக அளிக்கும். தமிழக ஹஜ் கமிட்டியில் ஒன்பது பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, அதில் இருந்து ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தலைமையில் ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் இயங்குவர். இந்த பணிக்காக அரசு சம்பளம் வழங்கப்படாது. கமிட்டி கூட்டம் நடக்கும் போது படிகள் மட்டும் வழங்கப்படும்.
இருந்தாலும், சமூகத்தில் மதிப்புக்குரிய பொறுப்பு என்பதால், ஹஜ் கமிட்டி உறுப்பினராக சமுதாய பணியில் ஈடுபடும் எல்லாரும் விரும்புவார்கள். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் ஏழு பேர் விலகி விட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன் புதிதாக ஏழு உறுப்பினர்களை தி.மு.க., அரசு நியமித்தது. ஆனால், கமிட்டி முழுமையாக இயங்க முடியவில்லை.
இதுவரை ஒரு முறை கூட கூட்டம் நடக்கவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த வேலுமணியின் ஆதரவாளர் கோவை ஜப்பார் என்பவர், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகும் பதவி விலகவில்லை. அதே போல, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் ஆதரவாளரும் உறுப்பினராக நீடிக்கிறார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டியின் தலைவராக செயல்பட்டவர் ஜப்பார் தான். இருவருக்கும் அடுத்த ஆண்டு தான் பதவிக் காலம் முடிவடைகிறது. அது வரை, உறுப்பினராக நீடிக்க அவர்கள் விரும்புகின்றனர்.
அவர்கள் இருவரையும் அழைத்து, ஹஜ் கமிட்டி கூட்டம் நடத்த மற்ற உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை. ஹஜ் கமிட்டி கூட்டம் நடந்து, புதிய தலைவரை தேர்வு செய்தால் மட்டுமே, கமிட்டியின் செயல்பாடுகள் ஹஜ் பயணியருக்கு பயன்படும் வகையில் இருக்கும். இந்த பிரச்னையை தீர்த்து வைக்கும்படி ஹஜ் பயணியர் அரசிடம் முறையிட்டுள்ளனர்.
'விரைவில் பிரச்னை தீரும்'
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஹஜ் கமிட்டியில் எந்த குழப்பமும் இல்லை. பிரச்னைக்கு தீர்வு காண, இரு தரப்பிடமும் பேசப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். ஹஜ் பயணியருக்கு தேவையானதை, கமிட்டி உறுப்பினர்கள் தொடர்ந்து அரசு வாயிலாக செய்து கொடுத்து வருகின்றனர்' என்றார்.
No comments:
Post a Comment