‛நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன்' என புதிய ஜனாதபதியாக பதவியேற்ற திரவுபதி முர்மு உரையாற்றினார்.
நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்ற திரவுபதி முர்மு உரையாற்றியதாவது: அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்புகள், மற்றும் உரிமைகளின் சின்னமான பார்லிமென்டில் நின்று உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. என்னை தேர்ந்தெடுத்த எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்களுக்கு நன்றி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். ஒடிசாவின் சிறிய கிராமத்தில் இருந்து எனது பயணத்தை துவக்கி இன்று ஜனாதிபதி ஆகியது மகிழ்ச்சி அளிக்கிறது.
சுதந்திர இந்தியாவில் பிறந்த நாட்டின் முதல் ஜனாதிபதி நான். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்றுத்தந்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக பார்க்கிறேன். சாதாரண கவுன்சிலராக துவங்கி ஜனாதிபதியாக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம். ஏழை வீட்டில் பிறந்த மகளும் ஜனாதிபதியாக முடியும் என்பது தான் ஜனநாயகத்தின் சக்தி. என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுக்களுக்கான திறவுகோளாக இருக்கும். பெண்கள், இளைஞர்கள் நலனில் தனி கவனம் செலுத்துவேன்.
கொரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம்.
பெண்கள் மேலும் மேலும் அதிக அதிகாரத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன். ஒவ்வொரு துறையிலும் பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். ஜனாதிபதி பதவியை எட்டியது எனது தனிப்பட்ட சாதனை அல்ல, இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை. இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமின்றி அந்த கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது நியமனம் ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் உரையாற்றினார்.
No comments:
Post a Comment